
அபகரிக்க வருகின்றன பழங்களை
களவாடத் திட்டமிடுகின்றன கனவுகளை
பூத்து நிற்கும் சந்தோஷங்களை
அலகுகளால்
கொத்திக் குதறுகின்றன
கிளைகளெல்லாம்
தவ்வித் திரியும் அவைகளால்
ஒடிந்து போகும் கவலையில் நடுங்குகின்றன
இலைகளெல்லாம் பயத்தில் உளைந்து உதிர்ந்து வீழ்கின்றன
மேனியெங்கும் அவைகள்
எச்சமிட்டு
நாறடிக்கின்றன
பறித்த பழங்களை விழுங்கிக் கொண்டோடி
எமது சந்ததிகளை எங்கோ போய் விதைக்கின்றன
அவற்றின் கத்தல்களால்
எம் தியானம் குலைகிறது
எம் நிழல் எம்மை நீங்க
எம்மிடம் மன்றாடுகிறது
பொறுக்க முடியவில்லை
பரிதவிக்கிறேன்….
இதயம் உள்ளவர்களே வாருங்கள்
இந்த இம்ஸைகளிருந்து காப்பாற்றுங்கள்.
🦀
