மழை

அன்புள்ள அம்மா
எனக்கு ஏன் இந்த ஆசாமியைக்கல்யாணம் செய்து வைத்தாய்?
இப்படிக்கு
அருணா
அருணா,
என்ன ஆச்சு மறுபடி சண்டையா?
அன்புள்ள
அம்மா
அம்மா,
வேறென்ன? நேத்து வாக்கு வாதம் கொஞ்சம் அதிகம் தான். குரலும் உசந்து விட்டது.
அன்புள்ள
அருணா
அருணா அருணா
எனக்கு கவலையாக இருக்கிறது? ஆபத்து ஒண்ணும் இல்லையே?
இப்படிக்கு
அம்மா
அம்மா,
அந்த அளவுக்குப்போகவில்லை. ஆனாலும் கடுமைதான். இதோ இந்தக்கடிதம் எழுதும்போது சரியான மழை. இடி மின்னல். தெப்பலாக நனைந்தாயிற்று. நேற்று இரவிலிருந்தே வெளியே தள்ளி கதவைச்சாத்தி…..
அன்புள்ள
அருணா
அடியேய் அருணா
என்னடி இது? எனக்கு கவலையாக இருக்கிறது! இங்கும் மழை. சென்னையில் மிக மோசம் என்று டீவியில் சொல்கிறார்கள். வேண்டாம் அருணா வேண்டாம்! ஜுரம் வந்து ஜன்னி கண்டு என்று ஆபத்தாக முடிந்துவிடப்போகிறது.
அம்மா
அன்புள்ள அம்மா
இரு இரு இன்னும் கொஞ்சம் பார்க்கிறேன். இப்ப கோபம் குறைந்தற்போல இருக்கிறது. என்னைக்கொஞ்சம் கனிவோடு பார்க்கிறார். மனம் இளகட்டும். எனக்கு ஒன்றும் பயமில்லை.
அருணா
அன்புள்ள அருணா
வேண்டாம் சொன்னால் கேளுடி அருணா! இரவு முழுவதும் மழையில் நனைவதாவது! உடம்பு என்னத்துக்காகும்! ஏற்கவனவே சைனஸ் உடம்பு! மழையில் நனைந்தால், அதுவும் ராத்திரி முழுக்க……….. வேண்டாமடி வேண்டாம். என்ன இருந்தாலும் உன்னைத்தொட்டு தாலி கட்டியவன். கணவன் மனைவிக்குள் சண்டை வருவது சகஜம் தானே!
கதவைத்திறந்து உள்ளே கூப்பிட்டுவிடு..!!
அன்புள்ள
அம்மா
