ஓட்டம்/சுப. திருப்பதி

விந்தை அல்ல
இப்பொழுதைய ஓட்டம்
விந்தாய் இருந்தபோதே ஆரம்பித்திந்த ஓட்டம்.

கால்களைப் பொறுத்ததல்ல;
காலத்தினால் பொருந்தியது.

வெற்று ஓட்டம்
வெற்றி ஓட்டமாவதும்
பயந்த ஓட்டம்
பயன் ஓட்டமாவதும்
நம்முடைய
மனவோட்டத்திலும்
நம்முடைய கண்ணோட்டத்தாலும்தான்.

முந்திவிட்ட ஓட்டத்தில்
இரு வகை
ஓடி விட்டவன் மற்றும்
முற்றும் ஓட்டம் எடுத்தவன்.
அவனின் ஓட்டம் தங்கிவிட்டால்
நம்முடைய ஓட்டத்திற்கு இடம் ஏது?
இளைப்பாறவும்தான் இடம் ஏது?

பறக்கும் பறவை
இளைப்பாறுவது மரக்கிளையை நம்பியல்லவே
தன்னுடைய சிறகுகளை நம்பித்தானே!

நம்முடைய இன்றைய ஓட்டம் ஓடுபாதையைச்
செப்பனிடவும்
விரிவுபடுத்தவும்.
அப்படித்தான்
நம் ஓட்டத்தை நாம்
அமைத்துக் கொள்ளவேண்டும்,
அமைதியுற வேண்டுமானால்.

அவ்வாறு அமையுமானால்,
நம்மை நம்பி
நம் பின்னால்
ஓடிவருபவரின் கால்கள் களைப்புறா வண்ணம்
எண்ணவோட்டம்
களிப்புறுவது திண்ணம்.