கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சூழ்ந்துகொண்டு/வாசு தேவன்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சூழ்ந்துகொண்டு கூச்சல் இடும் கணொளியை பார்க்கும்போது கோபம் வந்தாலும் மனம் பதறிவிட்டது. என் தலைமுறை எனக்கு முந்தைய தலைமுறைகளில் வகுப்பறையில் ஆரோக்கியமாக அரசியல் நுழைந்தது. 60 _ 70 களில் இடதுசாரிகளோடு மாணவர்கள் கைகோர்த்தார்கள், எமர்ஜென்சியை எதிர்த்தார்கள். 80 களில் ஈழப்பிரச்சினைக்கு மாணவர்கள் போராடினார்கள். இதில் எதிலும் மதமும் / சாதியும் இல்லை. பொது காரியத்திற்கும் ஒட்டு மொத்த மானுட குல நலத்திற்கும் மாணவர்கள் அரசியலில் இறங்கினார்கள். ஆனால் இப்போது நடப்பது அப்பட்டமான மத துவேஷம். அந்த இஸ்லாமிய பெண் துணிச்சலாக ரவுடி கும்பலை எதிர்த்து முழக்கமிட்டது பாராட்டபடவேண்டியது என்றாலும் இந்த வயதில் அந்த பெண்ணுக்கு இந்த நெருக்கடி வரவேக்கூடாது. தனியாக நடந்து செல்லும் ஒரு பெண்ணை வழிமறிப்பது ரவுடித்தனம்.ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் / உணர்வுகளில் எவரும் தலையிடக் கூடாது. அதுவும் சட்டம் இயற்றி ஒரு மதத்தின் உடையை நீக்கச்சொல்வது ஃபாசிசம். ஹிஜாப் என்ற உடைமேல் எனக்கு விமர்சனம் உண்டு. ஆனால் அடாவடித்தனமாக அத்துமீறி ஒருவரின் அனுமதியின்றி நீக்கச்சொல்வது அயோக்கியத்தனம். பாதிரியார்கள் நீள அங்கி உடுத்தி பாடம் எடுக்கிறார்கள். சீக்கியர்கள் தலைப்பாகையோடு படிக்க வருகிறார்கள். ஜீன்ஸ் அணிந்து பெண்கள் கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பதற்கும் உடைக்கும் என்ன தொடர்பு? அவரவர்களுக்கு வசதியான / நம்பிக்கையின் அடிப்படையில் உடைகளை தேர்வு செய்கிறார்கள். சகிப்புத்தன்மையற்ற முரட்டுக்கும்பல் இந்த நாட்டை வழிநடுத்துவது சாபக்கேடு. பல வருடங்களுக்கு முன் ஒரு ஐரோப்பிய படம் பார்த்தேன்.(படம் பெயர் நினைவில்லை). ஒரு சிறுவன் காலையில் எழுந்து படிக்க உட்காருவான். அருகாமையில் இருக்கும் தேவாலயத்திலிருந்து பாதிரியாரின் பிரசங்கத்தால் இவனால் படிப்பில் கவனம் செலுத்தமுடியாது. இரண்டு நாட்கள் கழித்து வேறு வீட்டிற்கு சென்றுவிடுவான். மிக நுட்பமாக மதம் கல்வியில் கலப்பதை இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார். ஆனால் இங்கு அப்பட்டமாகவே துவேஷம்/வெறுப்பு/காழ்ப்பு அரசியலை மதத்தோடு பிணைத்து கல்வி நிலையங்களுக்குள் நுழைக்கிறார்கள். அந்த பெண்ணை சுற்றி கோஷம் போடும் இளைஞர்கள் எதிர்காலத்தில் எப்படி வளரப்போகிறார்கள் என நினைத்தால் குலை நடுங்குகிறது. உலக வரலாற்றில் அரசியலாலும், அணுகுண்டுகளால் இறந்தவர்களை விட மதத்தால் உயிரிழந்தவர்கள் அதிகம். 500 வருடங்களுக்கு இந்த நாட்டை பின் தள்ளி பிற்போக்குத்தனமாக மாற்றியுள்ளார்கள். இதையெல்லாம் எவ்வளவு நாள் வேடிக்கை பார்ப்பது? பாரதி சொன்னதுபோல் ‘ரவுத்திரம் பழக வேண்டும்’. அதுதான் ஒரே வழி.

2 Comments on “கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சூழ்ந்துகொண்டு/வாசு தேவன்”

  1. உண்மை

    மத வெறி யார் தூண்டுகின்றனர், என்ன நோக்கம் என்பதையும் நாம் பேச வேண்டும். கண்டிக்க வேண்டும்.

    என் பதட்டம் இன்னும் அடங்கவில்லை, அந்தப் பெண் குழந்தை துணிவு பாராட்டப் பட வேண்டியது, அவரை வழி மறிக்க ஒரு கல்வி வளாகத்தின் உள்ளே அனுமதி எப்படி நிலவுகிறது, அந்த வெறியர்களை சமாதானப் படுத்தும் ஓர் ஆசிரியர் எத்தனை சிரமத்தில் இருந்தார்…. என்ன நடக்கிறது… யார் இவர்களுக்கு இத்தனை உரிமை வழங்கியது

  2. முற்றிலும் உண்மை. மற்றவர் வீட்டின் அழுக்கைப் பற்றி பேசு முன் அவரவர் வீட்டை முதலில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எல்லா மதத்தினரும் அவரவர் மதத்தின் பிரச்சினைகளை அவரவரே தீர்த்தக் கொள்வார்கள் அவர்களை விட்டால். இந்த மாதிரி வெறியர்கள் வெளியே உலாவினால் எல்லா பெண்களுமே தலை முதல் கால் வரை மூடலாமா என யோசிப்பார்கள்.

Comments are closed.