தொகுப்பு: பிரதீப் குமார் திருமலை அரசன்

கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள் . பழக்கப்பட்ட மௌனம் கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர் சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள். மர கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் கையில் தட்டுடன் காலில் செருப்பின்றி தோட்டத்தில் நடந்து வந்தான். “யாரு?” என்றான் சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்.
“ஊருக்குப் புதுசுங்க வேலை தேடி வந்தேங்க என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்” அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது
“பாத்தியா விமலா! இந்தக் குழந்தைங்க படற அவஸ்தையை” என்பதுடன் கதையை நிறுத்திவிட்டு சித்ராவும் எட்டிப் பார்த்தாள். அவன் முகத்தில் மூன்று நாள் தாடி. கண்களில் தேவைக்குப் போதுமான சோகம் “என்னவாம்” என்றாள்.
அவன் “ஊருக்குப் புதுசு வேலை தேடி வந்தேங்கம்மா” என்று துவங்கி மறுபடி அத்தனையும் சொன்னான். மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக் கொடுக்கவேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அப்படிச் செய்யவில்லை. செய்யமாட்டான் எதையும் விசாரிப்பான். சித்ராவுக்குத் தெரியும்.
“வீடு எங்கே” என்றான்
“இங்கதான் ஸார் கோகுலா பக்கம் தெரிஞ்சவங்க வீட்டில் நிகழ்ந்து போச்சுங்க”
“சரி அட்ரஸ் சொல்லு”
“போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்” என்றாள் சன்னமாக
“இரு”
“நான் இங்க பெங்களூர் வந்தே மூணே நாள் தான் ஆவறது ஸார் ! காலைல இறந்துட்டா”
“சரிதாம்பா, அட்ரஸ் என்ன? சொல்லேன்!”
அவன் சற்றே யோசித்து “மூணாவது கிராஸ் ” என்றான்
“மூணாவது க்ராஸ்னா? எச். எம். ட்டி லே அவுட்டா?சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?”
“சொல்லத் தெரியலிங்களே, சினிமா தியேட்டர் பக்கத்தில”
“அவனோட என்ன வாக்குவாதம்?”
“இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர் யா?”
“என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?”
“எனக்குத் தெரியும். நீ சொல்லு” அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான்
“பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா”
“சரிப்பா. எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?”
“என்ன ஸார் , பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன், என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும். பிணம் கிடக்கு அங்கே!”
“அட்ரஸ் சரியா சொல்லு தரேன்”
“அதான் சொன்னேனே”
“சரியா சொல்லு”
“அய்யோ ” என்றான் “வேண்டாம் ஸார். என்ன நீங்க” சித்ரா எதிர்பார்த்தாள்.
” என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ” என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம் எதிர்பார்த்தாள்.
அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான் தட்டைக் கை மாற்றிக்கொண்டு மௌனமாக அழுதான்.
“வரேன் ஸார்” என்று திரும்பி நடந்தான். போகும் போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர் பார்க்கவில்லை
“போய்ட்டான்” என்றான்.
“கூப்பிடுங்க அவனை!” என்றாள் சித்ரா.
“எதுக்கு? எல்லாம் பாசாங்கு. தெரியுமோல்லியோ?”
“ப்ளீஸ். அவனைக் கூப்பிடுங்கோ . கூப்ட்டு எதாவது கொடுத்து அனுப்பிடுங்கோ” கிருஷ்ணமூர்த்தி சிரித்து வெளியே பார்த்தான் சற்று தூரத்தில் அவன் தெரிந்தான் இன்னும் அழுது கொண்டே சட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே சென்று மறைந்தான்.
“அவன் சொல்றது உண்மையா இருந்தா பளிச்சுன்னு அட்ரஸ் சொல்லியிருப்பானோ இல்லியோ? ஏன் தயங்கணும் ? அட்ரஸ் சரியா சொல்லிருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனோ?” என்றான்
“அவன்தான் ஊருக்குப் புதுசுங்கறானே. சரியா அட்ரஸ் சொல்லத் தெரியலையோ என்னவோ”
“சேச்சே உனக்குத் தெரியாது சித்ரா, இது பெரிய்ய ரேக்கெட் அவனைப் பார்த்தான மனைவி செத்துப் போனவன் மாதிரியா இருந்தது? திருதிருவென்று முழிச்சானே”
“பொய் சொல்லாதே நான் அவனை விரட்டினதுக்காகவா?”
“இல்லை இல்லை” விசம்பல்களுக்கிடையே சொன்னாள்
“எனக்கென்னவோ அவன் பொய் சொல்லலைன்னு தோணித்து அவன் திடீர்னு அப்படி விக்கி விக்கி அழுததை நினைச்சுண்டேன் யாரோ ஒரு ஜீவன் ஏதோ ஒரு துக்கம் அதை எனக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போய்ட்டாப்போல ஆய்டுத்து”
“எல்லாம் பொய்னு எத்தனை தடவை சொல்றது”
“எப்படித் தெரியும் உங்களுக்கு” என்று தன்னியல்பாகக் குரலை உயர்த்திக் கேட்டாள். அவன் அவளை உக்கிரமாகப் பார்த்தான்.
“எப்படித் தெரியுமா ? சொல்றேன். அனுபவம்டி வெளில் எனக்கு ஏற்பட்ட அனுபவம். சித்ரா நீ எல்லாத்தையும் இமோஷனலா பார்க்கறே அதான் உங்கிட்ட தப்பு. நான் ப்ராக்டிக்கலா பார்க்கறேன்”
“சரி, நீங்க சொல்றதுதான் சத்தியம். நான் அழலை” என்றாள்.
“ஆனா”
“என்ன சொல்லு. மனசில நினைச்சிண்டிருக்கிறதை சொல்லிடு”
“நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா இருந்து தொலைச்சுடுத்துன்னா… அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும் சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும் பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை.”
“மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றியே ரெண்டு ரூபாய் பெரிசில்லை எனக்கு சித்ரா ப்ரின்சிப்பிள் அதான் முக்கியம்!”
“சரி” என்றாள் சுருக்கமாக. சற்று நேரம் மனைவியையே பார்த்தான்.
“ஆல்ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை ஒண்ணு செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில் தான் இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி ஆகும் ? வா காரை எடுத்துண்டு போய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்”
“வேண்டாம். நீங்க சொன்னது எனக்கு கன்வின்ஸ் ஆய்டுத்து. நான் ஏதோ பைத்தியக் காரத் தனமா அழ ஆரம்பிச்சுட்டேன்.”
“இல்லை நீ கன்வின்ஸ் ஆகலை. நான் சொன்னது சரின்னு உனக்கு இன்னும் புரிபடலை” “நான் வரலை! எனக்கு நிறைய வேலை இருக்கு”
“நீ வரலைன்னாக் கூட நான் போய்ப் பார்க்கத்தான் போறேன்”
“எதுக்காக விதண்டாவாதம் மறங்க”
“இல்லை இந்த கேஸில் யார் சரின்னு பார்த்தாகணும் நீயா நானா”
“நீங்க சொன்னதுதான் சரி ஒப்புத்துண்டுட்டேனே”
“நீ இன்னும் மனசார ஒப்புத்துக்கலை. உனக்கு ப்ரூஃப் வேணும் தானே நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்”
“இது என்ன பிடிவாதம் நீங்க அங்க போய் அவன் சொன்னது நிஜம்னே தெரிஞ்சா என்ன செய்யப்போறிங்க” |
“தோல்வியை ஒப்புத்துண்ணடு பத்து ருபா அல்லது பதினஞ்சு ரூபா கொடுத்துட்டடு வந்துருவேன் ஆனா அப்படி நடக்காது லைஃப்ல நிறைய பார்த்துட்டேன் சித்ரா”
“அவ்வளவு ஷ்யுரா இருந்தா எதுக்குப் போகணும்”
“உனக்காகத்தான் சித்ரா நீ அருவியா அழுத பாரு? அது தப்புன்னு ஸ்தாபிக்கிறதுக்கு” “எனக்கு இப்ப சிரிப்பு வரது”
“அப்புறம் சிரிக்கப் போறது யாருன்னு சொல்றேன்”
கிருஷ்ணமூர்த்தி ஷெட்டை திறந்து பெரிய கேட்டைத் திறந்து காரைக் கிளப்பி சீறிப் புறப்பட்டான் தியேட்டர் ஒரு மைலுக்குள் இருக்கும். நிச்சயம் போய்ப் பார்த்து விடவேண்டும் மூணாவது கிராஸ் என்று தானே சொன்னான்? என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாள் கருணை இல்லாதவன் என்றா? இவளுக்கு என்ன தெரியும் கேள்வி
கேட்காமல் காசை சமர்ப்பிக்க நான் என்ன முட்டாளா? அழு மூஞ்சி இப்படித்தான் ஒரு தடவை …
தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும் தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்ப்டடு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. பச்சை மூங்கில்கள் காத்திருந்தன. ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான். கிருஷ்ணமூர்த்தி சற்று நேரம்தான் தயங்கினான். காரை ரிவர்ஸ் செய்தான் சீறிப் புறப்பட்டான், திரும்பவும் தன் வீட்டை நோக்கி.
“என்ன ஆச்சு?” என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக
“நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ் முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை”
“அப்படியா? அப்பா! எத்தனை பொய்!” என்றாள் சித்ரா.
Author’s notes on this story?
This was written in June 1980. Still many people remember this story essentially because of its implied male dominance. Coupled with this ” the depiction of a guilt feeling associated with a wrong decision, the husband’s stubborn refusal to say I could be wrong’ and the simple genuine emotions of the wife make this a significant story” so wrote a reviewer Some times the writer feels the urge to revise, sharpen, or edit a story when he reads it after a long time in this story || didnt feel it even though there is a slight shift in the viewpoint somewhere about two thirds of the story. Some of the feedback I received in this web page suggested a kind of FAQ on short story writing. I’d like to have your views on this. Sujatha

Paditha kathaithan enralum adil ulla unmaai suduguratu.