தமிழில் : க. மோகனரங்கன்
இப்பொழுதெல்லாம் வாரத்தில் ஆறு நாட்கள் வேலைக்கு போகுமளவிற்கு சோர்வாகவே கழிகிறது பொழுது

காலையில் கண்விழித்ததும்
உற்சாகமாக உணர்ந்தவன்
தொலைபேசியை எடுத்து,
இன்று வேலைக்கு வரவியலாது
என்பதை தெரிவிக்க,
எனக்கு முதலாளியாக இருக்க
வாய்த்தவரின் எண்ணிற்குத்
தொடர்பு கொண்டேன்.
உனக்கு ஏதேனும் நலக்குறைவா ?
முதலாளி வினவினார்.
இல்லை ஐயா!
இன்று வேலைக்கு வரவியலாத அளவுக்கு
அதிக பூரிப்புடனிருக்கிறேன்,
நாளை சோர்வாக உணரும்பட்சத்தில்
நேரமாகவே பணிக்குத் திரும்பிவிடுவேன்!
என்று பதிலிறுத்தேன் .
