ஓர் உரை…/ஜெயமோகன்

ஓர் உரை சிறப்பாக அமைய சிறந்த வழி அந்த உரையை பலமுறை திரும்பத்திரும்ப ஆற்றுவதுதான். பல பேச்சாளர்களின் முறை அதுவே. இங்கல்ல, உலகம் முழுக்க.

நண்பர் கே.பி.வினோத் ஒரு நிகழ்வைச் சொன்னார். விலயன்னூர் ராமச்சந்திரனின் ஓர் உரைக்கு அவர் சென்றிருந்தார். விலயன்னூர் ராமச்சந்திரன் பார்வையாளர்களை நோக்கி சில புதிர்களை போட்டார். உடனுக்குடன் கே.பி.வினோத் பதில் சொன்னார். ராமச்சந்திரன் திரும்பி “நீ என் பழைய உரைகளை கேட்டிருக்கிறாயா?” என்றார். “ஆமாம்” என்றார் வினோத். “அதே உரைதான் இதுவும்” என்று விலயன்னூர் ராமச்சந்திரன் சிரித்தார். அமெரிக்காவில் நிபுணர்கள் உரைவழியாகவே அதிகம் பொருளீட்டுகிறார்கள். ஓர் உரை எப்படியும் இருநூறுமுறை மேடையேறிவிடும். மேடைக்கொரு உரை சாத்தியமும் அல்ல.

திரும்பத்திரும்ப பேசும்போது உரையின் அமைப்பு, சொற்றொடர்கள் எல்லாமே அமைந்துவிடுகின்றன. சரளமாக ஒலிக்கின்றன. நாமே சிலமுறை பதிவுசெய்தவற்றைக் கேட்டு நம் குரலை, பாவனைகளை மேம்படுத்திக் கொள்ள முடிகிறது. வணிகச்சொற்பொழிவுகளில் இது இன்றியமையாததும்கூட. எல்லா நல்ல வெளிப்பாடுகளும் எதிர்வினைகள் வழியாக மேம்படுத்திக் கொள்ளப்படுபவைதான். பலபடிகளாக தொடர்ந்து செம்மையாக்கப்பட்டவையே மிகச்சிறந்த தொழில்முறை உரைகள்.

தொழில்முறை உரைகளின் சவால் என்னவென்றால் ‘கவனிக்கவைக்கும் பொறுப்பு’ ‘புரிந்துகொள்ளவைக்கும் பொறுப்பு’ இரண்டையும் பேச்சாளனே ஏற்றுக்கொள்கிறான். மறுபக்கம் இருப்பது பெரும்பாலும் ’அக்கறை அற்ற’ ’பயிற்சி அற்ற’ கேட்பவர் தரப்பு. பலவகையான மக்கள் அவர்கள். அவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை முழுக்க கேட்கவைத்து, அவர்களின் நினைவிலும் நீடிக்கவேண்டும். அது சாதாரண வேலை அல்ல.

கட்டுரையை சாத்தியமாக்கியவர் : ஆர்.கந்தசாமி