
*நா. பார்த்தசாரதியின் தீபம் இலக்கிய மாத இதழில் துணையாசிரியனாக நான் வேலை பார்த்த காலகட்டம். அப்போது நா.பா. தலைமையில் என்னுடைய சிவப்பாய்ச் சில மல்லிகைகள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா நடைபெற்றது.
வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேச யாரையெல்லாம் அழைக்கலாம் என நா.பா. என்னிடம் கேட்டார். தி.ஜானகிராமன், அகிலன், தி.க.சிவசங்கரன், லட்சுமி, மு. மேத்தா, சேவற்கொடியோன், கே.ஆர். வாசுதேவன் என்று நான் என் விருப்பத்தைச் சொன்னேன். நா.பா. அதற்கென்ன, எல்லோரையும் அழைத்து விடலாம்! என்றார்.
நா.பா.வே எல்லோரிடமும் தொலைபேசியில் பேசினார். எல்லோரும் வர ஒப்புக்கொண்டார்கள். தி. ஜானகிராமன் தில்லியிலிருந்தும் சேவற்கொடியோன் கோவையிலிருந்தும் வந்தார்கள். லட்சுமி உள்ளிட்ட மற்றவர்கள் சென்னைதான். சென்னை அண்ணாசாலை எல்.எல்.ஏ கட்டிடத்தில் விழா நடைபெற்றது.
அன்று லட்சுமியைச் சுற்றி ஏராளமான பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள். ஆட்டோகிரா·ப் கேட்டார்கள். ஏதேதோ சந்தேகங்கள் கேட்டார்கள்.
உங்கள் எழுத்துத்தான் எங்களுக்கு ஒரே ஆறுதல் எனப் பல பெண்கள் சொல்லி அவர் கையைப் பற்றிக் கொண்டார்கள். உங்கள் எழுத்து கொடுக்கும் நம்பிக்கையில்தான் நான் என் மாமியாரை அனுசரித்து வாழ்ந்து வருகிறேன் என்றும் பலர் குறிப்பிட்டார்கள்.
இந்தக் கோலாகலங்களெல்லாம் விழா தொடங்குவதற்கு முன் வெகுநேரம் நடைபெற்றது. ஆம். அந்தக் காலத்தில் வாசகர்களிடையே, குறிப்பாகப் பெண் வாசகர்களிடையே லட்சுமி ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருந்தார்.
இன்று திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் என்று சொல்லப் படுபவரின் புகழுக்கு இணையாக அன்று எழுத்தாளர் லட்சுமி வாசகிகளின் சூப்பர் ஸ்டாராக இருந்தார்.
*சில ஆண்டுகள் கழித்து என் திருமணம் மாயவரத்தில் நடந்து அதற்கான திருமண வரவேற்பு சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தைச் சேர்ந்த மிதிலாபுரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
என் உறவுக்காரப் பெண்மணிகளெல்லாம் திருமண வரவேற்பில் கூடியிருந்தார்கள்.
லட்சுமி வருவாரா? என்பதுதான் பலரின் கேள்வி. கட்டாயம் வருவார் என்று நம்பிக்கையுடன் சொன்னேன் நான். நா.பா., அசோகமித்திரன், சா. கந்தசாமி, பாலகுமாரன் என்று ஏராளமான எழுத்தாளர்கள் வருகை புரிந்து என்னை கெளரவித்தார்கள். லட்சுமியும் வந்தார்.
லட்சுமி மண்டப வாயிலுக்கு வந்ததும் அந்த இடமே மாறிவிட்டது. பெண்களெல்லாம் ஓடோடிப் போய் அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.
நட்சத்திரங்களிடையே நிலவு மாதிரி மகளிர் கூட்டத்தினிடையே லட்சுமி முறுவல் பூத்தவாறே என்னையும் என் மனைவியையும் நோக்கி நடந்து வந்தார்.
கிருஷ்ணன், உங்கள் மனைவி பெயர் ஜானகி இல்லையா? அதற்குப் பொருத்தமாக இந்தத் திருமண மண்டபத்தின் பெயரும் மிதிலாபுரி என அமைந்து விட்டதே? என்று சொல்லி என் மனைவியின் கையைப் பற்றிக் கொண்டார்.
என் சொந்த சகோதரி போலான பாவனையில் அவர் என் மனைவியிடம் பேசியது என்னை நெகிழச் செய்தது.
அவர் நாற்காலியில் போய் அமர்ந்த பிறகும் பெண்கள் கூட்டம் அவரை விடவில்லை. சாப்பிட்டு விட்டுத் தாம்பூலம் வாங்கிக் கொண்டு அவர் விடைபெற்றுச் செல்லும்வரை பெண்கள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தார்கள்.
தன் சமகாலத்தில் இத்தகைய மாபெரும் புகழோடு ஓர் எழுத்தாளர் விளங்குவதற்கு அவர் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.
லட்சுமி குடும்பக் கதைகள் எழுதியவர்தான். அவருக்கு முன்னரும் வை.மு. கோதைநாயகி போன்றோர் குடும்பக் கதைகளை எழுதிப் புகழ் பெற்றிருந்தார்கள்.
ஆனால் லட்சுமி எழுதத் தொடங்கிய பிறகு குடும்பக் கதை என்றால் லட்சுமி என்ற முத்திரை விழத் தொடங்கிவிட்டது.
இன்றும் விமலா ரமணி, ரமணி சந்திரன் போன்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்களை லட்சுமி பாணி எழுத்தாளர்கள் எனச் சொல்கிறார்கள். அப்படிக் குடும்பக் கதைத் துறையில் தனக்கெனத் தனியிடம் பிடித்துக் கொண்டவர் லட்சுமி.
லட்சுமிக்கு ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. அப்போது சாகித்ய அகாதமியின் முக்கியமான பொறுப்பில் இருந்தார் நா. பார்த்தசாரதி.
லட்சுமிக்குப் பரிசு கிடைத்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் சற்று ஆச்சரியமும்தான்.
அவரை விட சீனியர்களான லா.ச. ராமாமிர்தம், கி. ராஜநாராயணன் உள்ளிட்ட பலருக்குப் பரிசு கிட்டாதிருந்த தருணம் அது. குடும்பக் கதை எழுத்தாளர் என்பதால் பல இலக்கிய விமர்சகர்கள் லட்சுமியின் எழுத்தை அந்த சீனியர்களுக்கு இணையாகக் கருதியது கிடையாது.
அப்படியிருக்க அவர்களைத் தாண்டி லட்சுமியின் நாவல் பரிசு பெற்றது எப்படி?
நான் நா.பா.விடம் வினவினேன். நா.பா. ஒரு புன்முறுவலோடு என்னிடம் சொன்னார்:
`அவருக்குப் பரிசு கொடுக்கப்பட வேண்டியதுதானே? பெரும் புகழோடு இருக்கிறார் என்பதற்காகச் சொல்லவில்லை. அவர் ஆபாசமாகவோ கண்ணியக் குறைவாகவோ ஒரு வார்த்தை கூட எழுதுவதில்லையே? அத்தகைய பாணிக்கு ஓர் அங்கீகாரம் கொடுப்பது நல்லதல்லவா?
முக்கியமாக சாகித்ய அகாதமி பரிசு லட்சுமிக்குக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தமாக சாகித்ய அகாதமி தேர்வுக் குழுவில் இருந்த பலரும் பரிந்துரைத்தார்கள்! அதனால்தான் அவருக்குப் பரிசு கிட்டியது!`
லட்சுமியின் எழுத்தைப் பலரும் மதிக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு மனநிறைவைத் தந்தது. தொடர்ந்த கண்ணியமான தன் எழுத்துச் செயல்பாடுகளால் லட்சுமி பெண் வாசகர்களைத் தாண்டியும் பிரமுகர்கள் பலரைக் கவர்ந்திருந்தார்.
நா.பா. தினமணிகதிர் ஆசிரியரானதும் லட்சுமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரிடம் ஒரு தொடர்கதை கேட்டார்.
லட்சுமி மங்களாவின் கணவன் என்ற தொடரைக் கதிரில் எழுதத் தொடங்கினார். மாருதியின் அழகிய ஓவியங்களோடு வெளிவந்த அந்தத் தொடர் எதிர்பார்த்தபடியே வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வாரந்தோறும் அதன் அத்தியாயங்களை வாங்கி வெளியிடும் பொறுப்பு என்னுடையது. எனவே ஒவ்வோர் அத்தியாயமும் கையெழுத்துப் பிரதியாகக் கைக்குக் கிடைத்ததுமே வாசித்துவிட்டு அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவேன்.
என் பாராட்டுகளைக் கேட்டுக் குழந்தைபோல் அவர் மகிழ்ச்சி அடைவார். நா.பா.வின் ஆசிரியக் காலத்தில், தினமணியின் மாத வெளியீடாக வெளிவந்த கதைக்கதிரிலும் சில நாவல்களை எழுதினார்.
தாம் பெரும் புகழுடையவர் என்ற கர்வம் அவரிடம் அறவே கிடையாது. தற்புகழ்ச்சியை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவார். அவரது இத்தகைய உயர்ந்த பண்பு நலன்கள் இன்றைய எழுத்தாளர்கள் பின்பற்றத் தக்கவை.
மங்களாவின் கணவன் கதிரில் வெளிவந்து கொண்டிருந்தபோது அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. வேறொரு பிரபல பத்திரிகையிலிருந்து அவரிடம் அதே நேரத்தில் இன்னொரு தொடர் கேட்டார்கள்.
நான் இப்போது கதிரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனக்கு வயதாகி விட்டது. முன்போல் ஒரே நேரத்தில் இரண்டு தொடர் எழுத என்னால் இயலும் என்று தோன்றவில்லை. எனவே கதிர்த் தொடர் முடிந்தபின் உங்களுக்கு எழுதுகிறேன்! என அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அவர்கள் விடுவதாய் இல்லை. உங்கள் எழுத்தை வெளியிட்டால்தான் விற்பனை கூடும் என நிர்வாகம் நினைக்கிறது. ஆகையால் நீங்கள் கட்டாயம் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதுவதாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு விடுகிறோம்! என்று சொல்லிவிட்டு அவர்கள் தொலைபேசியை வைத்து விட்டார்கள்.
என்ன செய்வதென்று அறியாத லட்சுமி என்னைத் தொலைபேசியில் அழைத்தார். இந்தச் சிக்கலிலிருந்து எப்படி மீள்வது என என்னிடம் ஆலோசனை கேட்டார். அந்தப் பத்திரிகையை விரோதித்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
தனது உடல் நலன் அனுமதிக்காததுதான் அவர்களுக்குத் தற்போது தான் எழுதாமல் இருக்கக் காரணம் என்றும், உண்மையிலேயே ஒரே நேரத்தில் இரு வாரப் பத்திரிகைகளில் இரண்டு தொடர்கள் எழுதுவது இந்த வயதான காலத்தில் தனக்குக் கடும் சிரமமாக இருக்கும் என்றும், கதிர்த் தொடர் நிறைவுற்றபின் கட்டாயம் எழுதுவதாகவும், புதிய தொடர் மிக நன்றாக அமையவேண்டுமே என்ற அக்கறையிலேயே தான் இப்படிச் சொல்வதாகவும், தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் நிலைமையைத் தெளிவாக விளக்கி அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதி விடுமாறு நான் கூறினேன்.
அப்படியே கடிதம் எழுதினார். கதிர்த் தொடர் நிறைவுற்றபின் தங்களுக்கே கட்டாயம் அவர் அடுத்த தொடர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அவர்களும் பதில் எழுதினார்கள்.
அந்த பதில் வந்ததும் என்னை அழைத்து என் ஆலோசனைக்கு நன்றி தெரிவித்தார் லட்சுமி. மிகுந்த புகழோடு இருப்பதிலும் பல சிரமங்கள் இருக்கின்றன என அவர் அங்கலாய்த்துக் கொண்டார்.
எல்லா சக எழுத்தாளர்கள் மேலும் அவர் அன்பு செலுத்தினார். பொறாமையற்ற மனம் அவருக்கு வாய்த்திருந்தது.
எழுத்தாளர் குமுதம் பால்யூவுக்கும் அவருக்கும் எந்த சொந்தமும் இல்லை. ஆனால் விடுமுறைக்கு குமுதம் பால்யூவின் குழந்தைகளைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சில நாட்கள் வைத்துக் கொண்டு சீராட்டுவார். அப்படி எல்லோரிடமும் உண்மையான சகோதர பாசத்துடன் பழகிவந்தார்.
லட்சுமி பெரிய பேச்சாளராக இயங்கியதில்லை என்றாலும் எழுத்தாளர் என்ற வகையில் தன்னை அழைக்கும் கூட்டங்களுக்குப் போய்ப் பேசிவந்தார். தன் எழுத்துலக அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் அவர் மேடையில் சொல்லும்போது அது பெரிய அளவில் எடுபடும்.
முக்கியமாக இளம் வயதில் மருத்துவப் படிப்புக்குப் பணம் கட்ட வழியில்லாத சூழலில் ஆனந்தவிகடனில் எழுதித்தான் அந்தக் கல்விக் கட்டணத்தைக் கட்டியதாக அவர் விவரிக்கும்போது பார்வையாளர்கள் நெகிழ்ச்சி அடைவார்கள்.
திரிபுரசுந்தரி என்ற இயற்பெயர் உடைய அவர் லட்சுமி என்ற எழுத்தாளராக மாறியதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் ஐந்து கட்டுரைத் தொகுப்புகளும் ஆறு மருத்துவ நூல்களும் எழுதியதும் மிகக் கடின உழைப்பால் விளைந்த சாதனைதான்.
கூட்டங்களுக்குத் தன்னை அழைப்பவர்களை அவர் பெரிதும் மதிப்பார். தான் தனது வாசகர்களை நேரடியாகச் சந்திக்க அவர்கள்தான் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்கள் என்று சொல்லி அவர்களை மனமாரப் பாராட்டுவார். கூட்டம் முடிந்து வந்தபிறகு மறக்காமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுவார்.
இன்றும் லட்சுமியின் நாவல்களை விரும்பி வாசிப்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். வாடகை நூலகங்களில் அவரது நாவல்கள் வாசகர்களிடையே கைமாறிக் கொண்டே இருக்கின்றன.
நம் இந்தியக் குடும்பங்களின் கட்டமைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் எழுத்துகள் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருக்கின்றன.
தற்புகழ்ச்சியற்ற அடக்கம், அனைவரையும் நேசிக்கும் உள்ளம், கடின உழைப்பு போன்ற அவரது பண்புகளை நினைக்க நினைக்க இன்றும் நெஞ்சம் இனிக்கிறது.
(ராணி வார இதழில் எழுத்தாளர் லட்சுமி நூற்றாண்டை ஒட்டி ),

