கம்பனைக் காண்போம் 46 /வளவ. துரையன்

இல்லாமையால் இல்லை

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால் [85]

பெரும்பாலும் எல்லாப் பேச்சாளர்களும் எடுத்துக்காட்டும் பொருள் நிறைந்த இனிய ஓசை நயமுளள பாடல் இதுவாகும். ஒன்று இல்லாமையால் வேறொன்று வெளிப்படத் தெரியவில்லை என்று இப்பாடல் கூறுகிறது.
ஒரு நாட்டில் வறுமை என்பது இருந்தால்தான் அங்கு வறியவர் இருப்பார்கள். அவ்வறியவர்கள் பிறரிடம் சென்று யாசிப்பார்கள். கொடைத்தன்மை கொண்டவர் அவர்களுக்குக் கொடுப்பார்கள். கோசலநாட்டில் வறுமையே இலாததால் கொடைத்தன்மையானது வெளிப்படையாகத் தெரியவில்லையாம். ஒரு நாட்டிற்குப் பகைவர் இருந்தால்தான் அந்நாட்டின் வீரம் வெளிப்படும். கோசல நாட்டிற்குப் பகைவர்களே இல்லாததால் அந்நாட்டு மக்களின் வீரமானது வெளிப்படையாகத் தெரியவில்லையாம். கோசல நாட்டில் உண்மையே இல்லையாம். பொய் என்ற ஒன்று இருந்தால்தானே அதிலிருந்து வேறுபட்டு உண்மை என்பது தனியே தெரிய வரும். எனவே பொய் இல்லாததால் உண்மையும் இல்லை. யாவரிடமும் கல்வியறிவோடு கேள்வி அறிவும் சிறந்திருந்ததால் அங்கே வெறும் ஏட்டுக் கல்வி அறிவு வெளிப்படையாகத் தெரியவில்லை.
ஒரு நாட்டின் சிறப்புக்குக் காரணமாக கொடை, வீரம் இசை [புகழ்] கல்வி என்று கூறுவர். ஒன்று, இரண்டு, நான்கு அடிகள் முறையே கொடை, வீரம், கல்வி ஆகியவற்றைக் குறித்தன. மூன்றாம் அடி உண்மையைக் காட்டுவதால் அதனால் வரும் புகழையும் குறிக்குமாம். இப்படிக் கோசலநாடு கொடை, வீரம், சத்தியம், கல்வி ஆகியவற்றில் சிறந்திருந்ததாம்.