
தமிழ் சினிமா இயக்குநர்கள் செய்யும் அபத்தங்களை வெளியில் நின்று நாம் ஜாலியாக கிண்டலடித்து விடுகிறோம். ஆனால் பாவம் அவர்கள் உள்ளே பல நடைமுறை இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆனால் இதை திறமையாக சமாளிப்பவர்களும் உண்டு.
*
உதாரணத்திற்கு ஒன்று. (இந்தச் சம்பவம் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கலாம்)
ராமநாராயணன் இயக்கிய திரைப்படத்தின் ஒரு காட்சியில் ஓர் ஆசாமியை பாம்பு துரத்தும்.
அடுத்த நாள் அதே காட்சியை தொடரும் போது, அந்த ஆசாமி அணிந்திருந்த சட்டையின் நிறம் மாறி விட்டது. Continuity பார்க்கும் உதவி இயக்குநர் சொதப்பி விட்டிருக்கிறார்.
பின்னர்தான் இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
‘சார்.. போச்சு. சட்டை கலர் மாறிடுச்சு. ஆடியன்ஸ் சிரிக்கப் போறாங்க” என்று இன்னொரு உதவி இயக்குநர் அலற, ராமநாராயணனோ.. ‘அதெல்லாம் எடிட்டிங்ல பார்த்துக்கலாம்’ என்று கூலாக சொல்லியிருக்கிறார்.
இதை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று உ.இ, டென்ஷனாகவும் ஆவலாகவும் எதிர்பார்க்க, அந்த நாள் வந்தது.
துரத்தி வரும் பாம்பிற்கு ஒரு மைண்ட் வாய்ஸை இணைத்திருக்கிறார் ராமநாராயணன்.
ஒரு வசனத்தை அபாரமாக நுழைப்பதின் மூலம் ஒரு பிழையை சரி செய்த இது போன்ற மேதைகளை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
*
அந்த வசனம். அதாவது பாம்பின் மைண்ட் வாய்ஸ்.
“நீ சட்டைய மாத்திட்டு ஓடினா.. என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சியா?”
:மீள்:
