ஆண்களின் மனம்தான் எத்தனை வன்மம் மிக்கதாய் இருக்கிறது /மருத்துவர்.ம.ஜீவரேகா


எவ்வளவு கீழ்த்தரமாய் ஒரு பெண்ணை விமர்சிப்பதாய் எண்ணி தன்னுடைய தரமற்ற புத்தியை வக்கிரமான எண்ணங்களின் கலவையாக்கி வார்த்தைகளாய்க் கக்குகிறார்கள் என்பதனை நேற்று நடைபெற்ற நயன்தாரா திருமணத்தை எள்ளி நகையாடிய நபர்களின் பதிவுகளில் இருந்து உணர்கிறேன்.

ஒரு ஆண்கவிதான் எழுதினான்
“கற்புநிலையை இருவருக்கும் பொதுவாக்குங்களென்று”.

இன்று நயன்தாராவினை விமர்சிக்கும் உதடுகள் நயன்தாராவுடன் சர்ச்சையில் சிக்கிய ஆண்களை விமர்சிக்க மறந்ததேன் ?

அன்புக்கு வயப்படுதல் என்ற நிலையில் அவர் நம்பியிருக்கலாம், தவறு செய்திருக்கலாம்.ஆனால் அவருடன் தவறு செய்தவர்களை மறந்துவிட்டு,
இன்று நயன்தாராவை நோக்கி விரல்களை நீட்டி முழக்கிப்பேசி
எள்ளி நகையாடும்
ஈனப்பிறவிகள் ஏன் அந்த ஆண்களை ஒன்றுமே சொல்லவில்லை ?
உங்கள் வீட்டுப் பெண்ணாயிருந்தாலும் இப்படித்தான் சகட்டுமேனிக்கு வார்த்தையென்ற பெயரில் சேற்றை வீசுவீர்களோ ?!

இதையேதான் ஏற்கனவே வனிதாவிற்கும் கூறினார்கள்.
ஒரே ஊரில்,ஒரே காலத்தில் விவாகரத்து எதுவும் செய்யாமல் இரண்டு மூன்று பெண்களுடன்
குடும்பம் நடத்தும் ஆண்களை அறிவேன்.அந்த ஆண்களை எவரும் குற்றம் சொல்வதேயில்லை.
ஆண் என்பதால் அப்படியெல்லாம் நிகழ எப்போதும் வாய்ப்பில்லைதான்.

சினிமாவில் இருப்பதால் அந்தப் பெண் அன்பென்ற ஒன்றிற்கோ அல்லது திருமணம் என்ற ஒன்றிற்கோ ஆசைப்படக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு நிச்சயமாய்ப் புரியவில்லை.

எதுயெவ்வாறாய் இருப்பினும் நாளை இதெல்லாம் மறைந்துவிடும்.
பணம் என்ற ஒன்றும்,சமூகத்தில் பிரபலம் என்ற ஒன்றும் இம்மாதிரியான விமர்சனங்களைக் காணாமல் போக வைத்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் உட்பட இம்மாதிரியான விமர்சனங்கள் நீர்த்துப்போனவைதான்.
போகப்போகிறவைதான் !

ஒன்றுமற்ற ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும்தான் எதிலிருந்தும்,
விடுபடவியலாமல் சமூகக் கட்டமைப்புகளுக்குப் பயந்து, செக்குமாடாய் உழல்வதே விதியாய் வகுக்கப்பட்டிருக்கிறது.

சினிமாவில் இருந்தாலும் ஒரு பெண்ணின் மனது பெரிதென எண்ணி ,அவளின் உணர்வுகளை மதித்து,கசடுகளைப் புறந்தள்ளி அவளைக் காதலோடு கரம்பிடித்திருக்கும் விக்னேஷ்சிவன் எனக்கு மாபெரும் மனிதராய்த் தெரிகிறார்.அவர்கள் மணவாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
வாழ்க்கையில் வெற்றியே என்றும் கிடைக்கட்டும்.

இன்னைக்கு நயன்தாராவை வசைபாடும் ஆண்களைப் பார்த்து ஒன்றேயொன்றுதான் சொல்லத் தோன்றுகிறது

வாழ்க்கையில் எந்தவிதத் தவறான எண்ணங்களும் இல்லாதவர்கள்,
வாழ்வில் ஒருமுறை கூட எந்தத் தவறும் செய்யாதவர்கள் அவளின் மேல் கல்லெறியுங்கள் !