அப்பாவின் சிராத்த தினம் இன்று/அம்பை

அப்பாவின் சிராத்த தினம் இன்று. அக்காள் விஜயா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அம்மாவைப் பற்றி நிறைய நினைப்பேன்; எழுதுவேன். இன்று தோன்றியது அப்பாவைப் பற்றி எதுவும் ஏன் நான் கூறுவதில்லை என்று. அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் சர்ச்சைகள், அபிப்பிராய பேதங்கள் இருந்தன. எல்லா வகையிலும் அவரைத் தொல்லைப்படுத்தும் மகளாகவே என்னைப் பார்த்தார் பல ஆண்டுகள். மேலும் என் தமிழ் ஆர்வம் அவருக்கு உவகையாக இருக்கவில்லை. அப்பா படித்தது மலையாளத்தில். வீட்டில் பேசியதும் மலையாளம் கலந்த தமிழ்தான். திருமணத்துக்குப் பிறகுதான் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டார் அம்மாவின் கடிதங்களைப் படிக்க. புத்தகப் புழு. ஆங்கில நாவல்களைக் கரைத்துக் குடித்தவர். நான் ஆங்கிலத்தில் எழுதவில்லை என்ற குறை உண்டு அவருக்கு. மேலும் குறைகள் உண்டு. கலெக்டராகவில்லை என்ற குறை. பெரிய பேராசிரியராகவில்லை என்ற குறை. நிலையாக ஒரு பெரிய வேலையில் இருக்கவில்லை என்ற குறை. அதனால் எப்போதும் வாக்குவாதங்கள் வீட்டில். பல முறைகள் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஆச்சரியப்படுத்தியதும் உண்டு. நான் பி.ஏ. படித்தபோது ஒரு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டேன். கல்வி கற்க தாய் மொழி சிறந்ததா ஆங்கிலம் சிறந்ததா என்ற தலைப்பு. (ஆமாம், 1962இலிருந்து இது குறித்துத்தான் பேசி வருகிறோம்!) தாய்மொழிக் கல்வி சிறந்தது என்று நான் பேசவிருந்தேன். கல்லூரி முடிந்ததும் வேறு கல்லூரியில் பேச்சுப்போட்டி. அந்தக் கல்லூரி அப்பாவின் அலுவலகத்தின் அருகே இருந்தது. எனக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசு வாங்கிவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கியபோது எதிரே சிரித்த முகத்துடன் அப்பா. அதிகமாக அன்பை வெளிப்படுத்தத் தெரியாதவர் கொஞ்சம் வெட்கத்துடன் தோளில் கையைப் போட்டார். போட்டி ஆரம்பமாகும்போதே வந்து விட்டதாகக் கூறினார். பின்னால் இருந்த வரிசைகள் ஒன்றில் அமர்ந்தாராம். நான் சரியாகப் பேசுவேனோ உளறுவேனோ என்ற பயம்! நான் பேசி முடித்ததும் அப்பா பக்கத்தில் இருந்த ஒருவர், “இந்தப் பொண்ணு பிரமாதமாகப் பேசுதே?” என்றாராம். பூரித்துப்போயிற்றாம் அப்பாவுக்கு. “என் பொண்ணுதான்” என்று சொன்னாராம். ஆட்டோவில் அன்று வீட்டுக்குக் கூட்டிப்போனபோது என்னிடம் சொன்னார். மலர்ந்த முகத்துடன் என்னை எதிர்கொண்ட அப்பா நினைவில் இருக்கிறார்.

அப்பா புற்று நோயில் இறந்தார். பரிசோதனைகளுக்காக ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவரருகில் இருந்தேன். என் கையைப் பிடித்துக்கொண்டு, “I have not been a good father” என்றார். “இல்லப்பா, நீங்கள் ஒரு நல்ல அப்பாதான். எல்லாக் குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கலையா? ரிடையர் ஆன அப்புறம் என்னை எம்.ஏ. படிக்க வைக்கலையா? டெல்லி போனபோது அனுப்பலையா? நீங்க ரொம்ப நல்ல அப்பாதான்” என்றேன் அவர் கைகளைத் தடவியபடி. அவர் முகம் மலர்ந்தது. என் கையைத் தட்டிக்கொடுத்தார்.

இரண்டு வேறு கட்டங்களில் மலர்ந்த அந்த முகம் இன்று நினைவுக்கு வந்தது.