அய்யா முக்தா வி ஸ்ரீநிவாசன்அவர்கள்தொகுப்பில்இருந்து…..


“அய்யா பெரியவர் கர்மா வீரர் காமராஜர் கடைசியாக பார்த்த படம் சினிமா பைத்தியம்

அது நான் இயக்கிய படம்.

அய்யா அவர்கள் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று நான் வற்புறுத்தினேன்

அய்யா அவர்களது உடல் நிலை அப்பொழுது சற்று சரியில்லை

இருந்தும் என் மீது கொண்ட அன்பினால் நாளைக்கு ஏற்பாடு செய் பார்க்கலாம் என்றார் அய்யா அவர்கள்

தென்னிந்திய சினிமா வர்த்தக சபை தியேட்டர் இல் மறு நாள் காலை பத்து மணிக்கு படம்.

ப்ரொஜெக்ஷன் அன்று காலை பத்து மணிக்கு அவர் வீட்டிற்கு சென்றேன்

அங்கு உமாபதி பா. ரா. குமரி அனந்தன் நேதாஜி எல்லோரும் இருந்தனர்

என்னய்யா உன் படமா என்றார் உமாபதி

ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றேன் நான்

ஏனய்யா…. காலைலயிருந்து நான் சினிமா பார்க்க போறேன்னு குழந்தை மாதிரி பெரியவர் சொல்லிக்கிட்டு இருக்கார்

எங்களையும் அவர் தான் வர சொல்லி இருக்கார்

அதுக்குத்தான் வந்து இருக்கோம் என்றார் உமாபதி என்னிடம் எனக்கு பெருமையாக இருந்தது அப்போது

எல்லோருடன் படம் பார்க்க வந்தார் பெரியவர்

நான் அந்த படத்தில் நடித்த கமலஹாசனையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன்

பத்து ரீல்கள் ஓடி முடிந்தன

அவருக்கு உடல் நலம் சரியில்லை
இடுப்பில் வலி அதை கண்ட நான் படத்தை நிறுத்தி விடட்டுங்களா .? என்றேன்

உடனே உமாபதி அந்த சிவாஜி வாஞ்சி நாதனாக ஆக்ட் பண்ற சீனை போட்டுட்டு நிறுத்திடலாம் என, நானும் அந்த குறிப்பிட்ட ரீலை ஓட்ட சொன்னேன்

படம் பார்த்து முடித்த விட்டு வெளியே வந்த பெரியவரிடம் கமலஹாசனை அறிமுகம் செய்து வைத்தேன்

தேச பக்தர் பரமக்குடி ஸ்ரீநிவாசன் மகனான இந்த பையன் சினிமாவில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்றேன்

ஸ்ரீநிவாசன் பையனா நீ .?
அப்பா பரமக்குடியில் தானே இருக்காரு..?
அம்மா எப்படி இருக்காங்க.? என்று கேட்டவாறு மேலும் கூறலானார் பெரியவர்

அந்த காலத்துல நான் எப்போ பரமக்குடி போனாலும் இவங்க வீட்டுல தான் சாப்பாடு என்றார் பெரியவர்

கமலஹாசன் தோளை தட்டிக்கொடுத்து விட்டு புறப்பட்டார்.

பெரியவர்.பெரியவர் பார்த்த கடைசி படம் அது தான்

அதுவும் எனது வேண்டுகோளை மதித்து தமது உடல்நிலையை கூட மதியாது எனக்காக எனக்கு பெரும் பாக்கியமாக கருதுகிறேன்

அதுமட்டுமில்லாது எங்கள் வீட்டு அனைத்து விசேஷங்கள் திருமணங்கள் நடக்கும் போதெல்லாம் தவறாது வந்திருந்து ஆசி வழங்கிய மாமனிதர் அவர்.

கடைசியாக ஒரு நிகழ்ச்சி பெரியவர் கர்மவீரர் காமராஜர் மரணமடைந்து விட்டார்.

அவரது உடல் சென்னையில் ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது

முன்னதாக அங்கு ஒரு சிறு கூட்டம் போய் நின்றுவிட்டது அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் பழைய மந்திரி பூவராகவன் அவர்களும் அப்போது என் அருகில் நின்றுகொண்டிருந்தார்.

நான் விடாது அழுது கொண்டிருப்பதை கண்டு என் அருகில் வந்து என் முதுகை தட்டி சமாதானம் செய்கிறார்.

பின் தலைவர் பா.ரா. அவர்ககளும் என் அருகில் வந்தார் .

நான் அவர்களை கட்டிக்கொண்டு அழுதேன். பா.ரா.அவர்களும் அழுதார்கள்.

அய்யாவின் உடல் ராஜாஜி மண்டபம் வந்து சேர்ந்தது.

ராஜாஜி மண்டபத்தின் கதவுகள் சாத்தப்பட்டன யாரும் திறந்து விடவில்லை.

அய்யா அவர்களின் உடல் வெளியே வராந்தாவில் வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பெரும்கூட்டமாக இன்னும் வரவில்லை

கலைஞரும் மற்ற மந்திரிகளும் வந்து சேர்ந்தார்கள்

அய்யா அவர்களது உடல் வெளியே வராந்தாவில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு கலைஞர் அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள்

அறையின் கதவை திறந்து விடாததற்கு யார் காரணம் என இறைந்தார் கலைஞர் அவர்கள்.

உடனே சடுதியில் அய்யா அவர்களது உடல் உள்ளே எடுத்து செல்லப்பட்டது

கலைஞர் அவரது பார்வை பட அவர்களது மேற்ப்பர்வையில் மேடை அமைக்கப்பட்டு மலர்கள் வைத்து ஐஸ் வைத்து உடல் அதன் மீது வைக்கப்பட்டது.

இருட்டிவிட்டது

பெருந்தலைவர் அய்யா அவர்களின் வலதுபுறம் நடிகர் திலகமும் அவருக்கு சற்று தள்ளி நானும் எனக்கு அருகில் பா.ரா. இருந்தார்.

தலைமாட்டிற்கு சற்று தூரத்தில் கலைஞரும் அவரது மந்திரிகளும் நின்று கொண்டிருந்தனர்

அப்போது சவ அடக்கம் எந்த இடத்தில் என்று விவாதிக்கப்படுகிறது.

தலைவர் பா.ரா. தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் வைத்துக்கொள்ளலாம் என்றார்.

அப்போது கலைஞர் தமது அருகில் ஒருவரை அழைத்து கூறுகிறார்

பா. ரா. விடம் சொல்லுங்கள்
அய்யா காமராஜர் அவர்கள் தமிழர் எல்லோருக்கும் தலைவர்.

அவரது சவ அடக்கம் கிண்டியிலேயே ராஜாஜி காந்தி மண்டபங்களுக்கு அருகாமையில் அரசாங்க ஏற்பாட்டோடு நடைபெறுவது தான் பொருத்தம் என்கிறார்.

அதுவும் சரிதானே என நடிகர்திலகமும் நானும் கூற தலைவர் பா.ரா. அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

உடனே கலைஞர் தமது பக்கத்தில் இருந்த மந்திரி திரு ராஜாராம் அவர்களை அழைத்து உடனே ராஜ்பவனுக்கு போன் செய்யுங்கள் அய்யா காமராஜர் உடல் அங்கே அடக்கம் செய்யப்பட இருக்கிறது என்று கவர்னரிடம் சொல்லுங்கள் என்றார் கலைஞர்.

சரி என்று கூறி போன் செய்ய ராஜாராம் அவர்கள் புறப்பட அவரிடம் மீண்டும் கலைஞர் அவர்கள் கூறியது

ராஜாராம் இதை கவர்னரிடம் இன்போர்மஷன் ஆக சொல்லுங்கள் அவரிடம் பர்மிஷன் ஆக கேட்காதீர்கள் என்றார்

அய்யா காமராஜரின் சவ அடக்கத்தை இந்த நாட்டில் எந்த இடத்தில் செய்தாலும் யார் பர்மிஷனும் தேவையில்லை என்றார் கறாராக கலைஞர் அவர்கள்.

அவரது ஆணைப்படி அவர் தேர்ந்தெடுத்த இடத்திலேயே காமராஜரின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கலைஞரும் காமராஜரும் அரசியலில் நீண்ட நாள் அரசியலில் ஒருவருக்கொருவர் எதிர்புறம் நின்றவர்கள் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் மேற்கண்ட நிகழ்ச்சியை பார்த்தால் எவ்வளவு உயர்ந்த காமராஜர் எவ்வளவு உயர்ந்த கலைஞர் நம் கண்ணில் படுகிறார்கள்…

நன்றி…