பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி

“வயசாகி என்ன பிரயோஜனம்?” டிவியில் சாயங்காலம் காட்டும் S V B C சேனல் சகஸ்ர தீப அலங்கரன சேவையில் காட்டிய தீபாரதனையை கண்ணில் ஒத்திக்கொண்டே பிருந்தா அங்கலாய்த்தாள்.

” என்ன பிருந்தா என்ன ஆச்சு?” என்றேன்.

” இல்ல உங்களுக்கும் எழுவது வயசு ஆகறது”.

நான் இடை மறித்து “இல்ல பிருந்தா இந்த அக்டோபர் வந்தாதான் 69 முடியறது. அதுக்கு என்ன இப்போ?” என்றேன்.

“65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.

இப்ப என்ன பண்ணலாம்ங்கறே?”

“நாமளும் சீனியர் சிட்டிசன்ல தரிசனம் பண்ணலாம்.”

“பிருந்தா அதுக்கல்லாம் நிறைய Procedure இருக்கு நேர்ல போனா கிடைக்காது.”

“தெரியும் கீழ் ஃப்ளாட் ரமணன் மூணு மாசத்துக்கு ஒரு தடவை போயிண்டு தான் இருக்கார்.”

“அதுக்கு ON LINEல Book பண்ணனும். எப்ப ஓபனாறதுன்னு பார்த்துண்டே இருக்கணும்.அதெல்லாம் பெரிய வேலை. கஷ்டம்”

“எது சுலபம்? எல்லாம் நமக்கு கஷ்டம்தான்.நம்ம கார்த்திக் பூர்வஜாகிட்ட சொன்னா நிமிஷமா பண்ணிடுவா. ஏன் உங்க தம்பி 300/- ரூபாய் டிக்கெட் இல்லேன்னா ஏதாவது சேவைக்கு ON LINEல Book பண்ணி போயிண்டுதான் இருக்கான்.அவன்கூட பண்ணித்தருவான்.”

“அப்ப கோபு கிட்ட போன் பண்ணி சொல்லு.”

அப்ப கூட நான் பண்றேன்னு சொல்ல வரதோ? நீ பண்ணுன்னுதான் நமக்கு சொல்ல வர்றது.”

இதற்கு மேல் பேசினால் சண்டையில் முடியும் என்று உள் மனசு எச்சரித்தது.
சரி நான் பண்றேன்னு சொல்லி போனைத் தேடி கோபுவுக்கு பண்ணினேன்.அவன் யாருடனோ பேசிக்கொண்டு இருந்தான். “லயன் எங்கேஜ்டா இருக்கு பிருந்தா” என்றேன்.
“சரி கொஞ்சம் கழிச்சு பண்ணிப் பாருங்கோ” என்றாள். என் முயற்சியில் சமாதானமானாள்.விஜய் டி வி யில்சீரியல் வேறு ஆரம்பித்து விட அதில் மூழ்கிப் போனாள்.

கொஞ்ச நாள் கழித்து மே மாதம் கோயம்புத்தூர் கார்த்திக் வீட்டிற்கு போனோம் ஒரு மத்தியான
வேளை, நான் சாப்பிட்டு நல்ல தூக்கத்தில் இருக்கும் போது பிருந்தா எழுப்பி “என்ன எழுந்திருங்கோ உங்க ஆதார் கார்டு கொஞ்சம் கொடுங்கோ” என்றாள்.

நான் டிரெயினில் போவது போலவும் டிடிஆர் வந்துவிட்டார் போலவும் நினைத்துக் கொண்டு சடால் என்று எழுந்து உட்கார்ந்து கொண்டு பனியனை சட்டையாக, தூக்க கலக்கத்தில் நினைத்து, பாக்கெட்டில் ஆதார் கார்டு தேடினேன்.

“என்ன பண்ணின்டு இருக்கேள்? கோபு லைன்ல இருக்கான் சீனியர் சிட்டிசன் தரிசனத்திற்கு ஓபன் பண்ணி இருக்காளாம் அதுக்கு ஆதார் கார்டு வேணுமாம்.”

நான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கோயம்புத்தூரில் படுத்து கொண்டிருப்பது நினைவுக்கு வந்து ‘பிருந்தா ஆதார் கார்டு என் பெட்டியில சைடு கவர்ல இருக்கு, எடு” என்று சொல்லிவிட்டு “என்ன ஆச்சு? ஏன் ஆதார் கார்டு எதுக்கு?”

“இல்ல கோபு லைன்ல இருக்கான் சீனியர் சிட்டிசன் தரிசனத்துக்கு ஆதார் கார்டு வேணுமாம் நீங்களே பேசுங்கோ” என்று போனை கொடுத்தாள்.

நான் “என்ன கோபு?” என்றேன். அவன் “இல்ல பிருந்தா உனக்கு தரிசனத்துக்கு டிக்கெட் இருக்கான்னு பார்க்க சொன்னா இன்னிக்கு எதேச்சயாச்சயா பார்த்தேன் அடுத்த மாசத்துக்கு ஓப்பனா இருக்கு பண்ணட்டுமா? என்றான்.

“எப்போ?என்று கேட்டேன் “ஒன்பதாம் தேதிக்கு மேல ஃப்ரீயா இருக்கு” என்றான். ஏய் அன்னைக்கு ராஜம்பேட்டையில சரன் கல்யாணம் இருக்குடா” “நல்லதா போச்சு அப்போ பத்தாம் தேதி புக் பண்றேன் அங்கேந்து திருப்பதி ரெண்டு மணி நேரம் தான் கல்யாணம் முடிச்சு சாயங்காலமா புறப்பட்டா ராத்திரி வந்துவிடலாம். பத்தாம் தேதி மத்தியானம் மூணு மணிக்கு தான் தரிசனம் பண்ணட்டுமா? என்றான்.

நான் பிருந்தாவை பார்த்தேன். பத்தாம் தேதி இருக்காம் என்ன சொல்றே?

அவள் முகமலர்ந்து “பண்ணச்சொல்லுங்கோ’ என்றாள்.

” சரி பண்ணிடுடா “

“அப்போ நீ உடனே உன் ஆதார் கார்டு பிருந்தாவோட ஆதார் கார்டு போட்டோ எடுத்து என் வாட்ஸ் அப்புக்கு அனுப்பு நான் புக் பண்ணிடுறேன் .”

பிருந்தா பரவசமானாள் உடனே எடுத்து வந்தாள் நான் கேமராவில் போட்டோ எடுத்து அவன் நம்பருக்கு அனுப்பினேன்.

கொஞ்ச நேரம் கழித்து “பண்ணியாச்சு பத்தாம் தேதி மூணு மணிக்கு தரிசனம்” என்றான் பிருந்தா என்னிடமிருந்து போனை வாங்கி “ரொம்ப தேங்க்ஸ் கோபு, உன்னால் தான் தரிசனம் முதல் தடவ போறோம் எல்லாம் நல்லபடியா நடக்கணும்” என்றாள்.

கோபு டிக்கெட் வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டான்.
சென்னைக்கு புறப்படும் முன் கார்த்திக் தரிசன டிக்கெட் இரண்டு காப்பி பிரிண்ட் எடுத்து கொடுத்தான்.

ஜுன் முதல் வாரம் சென்னை திரும்பினோம்.7ஆம் தேதி புறப்பட்டு ராஜம்பேட்டில் சரன் கல்யாணத்தில் கலந்து கொண்டு, 9ந்தேதி மத்யானம் ஹோட்டல் ரூமுக்கு வந்தோம்.பெட்டியை பேக் செய்து ரூம் சாவியை பக்கத்து ரூம் சித்ராவிடம் கொடுத்துவிட்டு வாசலுக்கு மூவர் கூட்டணி (நான், பிருந்தா, ராதா) திருப்பதி புறப்பட்டோம்.

கீழே ஆட்டோகாரரிடம் திருப்பதி பஸ் என்றவுடன் அவர் எங்களைச் பார்த்தார் பெட்டகளைப் பார்த்தார் அதன் பிறகு கையை முன்னும் பின்னும் காட்டி தெலுங்கில் ஏதோ சொன்னார். அதில் எங்களுக்கு முன் பக்கம் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்றால் பஸ் வரும் ஆனால் உட்கார இடம் கிடைப்பது கஷ்டம். பின் பக்கம் இருக்கும் பஸ் ஸ்டாண்டில் உட்கார இடம் கிடைக்கும் என்று புரிந்தது.

பின் பக்கமே போகச் சொன்னோம்.60 ரூபாய் கேட்டார். சரி என்றவுடன் ஆட்டோவைத் திருப்பி இரண்டே நிமிடத்தில் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டார். குறைத்து கேட்டிருக்கலாமோ!

பெட்டிகளுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டோம். பிருந்தா டைம் கீப்பரிடம் விசாரித்தாள்.

“கடப்பா – திருப்பதி நிறைய பஸ், பதினைந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வருமாம்” என்றாள்.வந்தது. கூட்டமில்லை, ராதா பெட்டியுடன் ஏறி இடம் பிடித்தாள். கீழே நின்றிருந்த கண்டக்டர் இங்க வாங்க என்று பக்கவாட்டில் இருந்து கதவைத் திறந்து பெட்டியை வைக்கச் சொல்லி கதவை தாள் போட்டார். பிருந்தா பெட்டி பத்திரமாக இருக்குமா என்று பயந்தாள். நாங்கள் உள்ளே போய் ராதாவுடன் உட்கார்ந்தோம். பஸ் புறப்படும் போது மணி 3.15.

பஸ் ஆட்டோ டிரைவர் சொன்ன முன் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் நின்றது. இடம் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பஸ் வேகமாக போய் 5.15 திருப்பதி பஸ் ஸ்டாண்டில் நின்றது. பெட்டியை நாய்க்குட்டி போல் இழுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.அஙகே நின்ற ஒரு ஆட்டோ டிரைவரிடம் பீமாஸ் பக்கத்தில், சித்தி பையன் பாபு,வழக்கமாக தங்கும் VAIBAV RESIDENCY என்றேன். அவன் 80 ரூபாய் என்றான். பெட்டியை சீட்டுக்கு பின்னால் நிறுத்தினான் உட்கார நகர்த்தினான்.

வழியில்,” ஸார் மங்காபரம் போனுமா? என்றான்.
எங்கள் திட்டப்படி லக்கேஜ் ரூமில் வைத்துவிட்டு சீனிவாச மங்காபுரம் போய் தரிசனம் பண்ணி அங்கிருந்து அலமேலுமங்காபுரம் வந்து பத்மாவதி தாயார் தரிசனம் பண்ணி மறுபடியும் ரூமுக்கு வருவது.

“எவ்வளவு “என்றேன்.

“ஸார் 1100/- கொடுக்க என்றான்.

நான் 700 ல் ஆரம்பித்து 900 ரூபாய்க்கு ஒத்துக் கொண்டோம்.
லாடஜ்ஜில் இறக்கி வைத்தான் ஒரு கார்டில் பெயரும் போன் நம்பரும் கொடுத்து பக்கத்துலதான் இருப்பேன் நீங்க ரெடியா யிட்டு போன் பண்ணுங்க என்றான்.

ரிசப்ஷனில் NON A/C ROOM 1800/- A/C ROOM 2000/- என்று சொல்ல மூன்று பேர் என்றதும் ஸார் நான் A/C ROOM 2000/-per day இரண்டு நாளைக்கு 4000/- 500/- Refundable Advance. ராதா ஆதார் கார்டும் பணமும் கொடுத்தாள். ரூம் முதல் மாடியில். லிஃப்ட் இருந்தது. ரூம் பாய் லக்கேஜ் கொண்டு வந்து வைத்தான். 20 ரூபாய் கொடுத்தேன்.நான்கு பேர் படுக்க பெட் இருந்தது.

முகம் கழுவி ஹேண்ட் பேக் தண்ணீர் பாட்டிலுடன் புறப்பட்டோம்.செல் போனை ரூமில் வைத்துவிட்டோம்.ஆட்டோ டிரைவர் செங்கல்வராயலுக்கு போன் பண்ணினேன். அடுத்த ஐந்தாவது நிமிடம் ரூம் வாசலில் நின்றார்.மணி 6.15.

நிதானமாக ஓட்டினார். சீனிவாச மங்காபரத்தில் நல்ல தரிசனம் எங்களுடன் முடிந்து பிரேக் விட்டார்கள்.அங்கிருந்து திருப்பதி வராமல் அலமேலுமங்காபுரம் போனோம். கோவிலின் இடது புறத்தில் நிறுத்தினார். நாங்கள் கோவில் வாசல் வழியாக 100/- டிக்கெட் விற்பனை கவுண்டருக்கு புறப்பட்டோம். பிருந்தா நான் முன்னால் போய் டிக்கெட் வாங்குகிறேன் என்று போனாள்.

திருப்பதி பயணத்தில் எப்போதும் நமக்கு தெரிந்தவர் யாரையாவது பார்த்துவிடுவோம்.நானும் ராதாவும் நடந்து வந்தபோது க்யூவில் இருந்து ஒரு பையன் என்னைப் பார்த்து சிரித்து ஸார் நீங்க பூர்வமாக அப்பாதானே.நான்பூர்வஜா கல்யாணத்துக்கு வந்திருந்தேன் உங்க மாப்பிளை சீனிவாசனுக்கு கஸின் என்று அறிமுகப் படுத்திக்கொண்டான். நின்று பேசி விட்டு திரும்பினால் பிருந்தாவைக்காணவில்லை.

கூட்டத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. ராதா டென்ஷன் ஆகி விட்டாள். பின்னால் டிக்கெட் கவுண்டரில் இருப்பாள் என்று ஓடினோம். திருப்பதியில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இந்த முறை அங்கே செல்போன் டெபாசிட் கவுண்டர் இருந்தது. எதிர்ப்புறம் இருந்தது. நல்ல வேளை வந்து எங்களை கூப்பிட்டாள்.

பிறகு வரிசையில் நின்று தரிசனம் செய்தோம். பிரசாத் கவுண்டரில் எங்களுக்கு ஐந்து பேர் வரை பொங்கல் கொடுத்தார்கள்.நாங்கள் போகும்போது கங்காளத்தை நகர்த்தி தயிர்சாதம். வெளியே வந்து மஞ்சள் குங்குமம் வாங்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறி 8.50க்கு ஹோட்டல் பீமாஸில் இறக்கிவிட்டான்.

உள்ளே இட்லி இல்லை‌ ராதா பதமாக ஒரு நெய் ரோஸ்ட். நாங்கள் முறுகலாக ரவா தோசை இரண்டு தண்ணீர் பாட்டிலுடன் இரவு டிபனை முடித்துக்கொண்டு ருமில் வந்து ஏ சி போட்டு போன்பண்ணிவிட்டு, காலை சீக்கிரம் குளித்து விட்டு திருமலைக்கு போவதாகவும், ராதா வராக ஸ்வாமி தரிசனம் முடித்து நாங்கள் தரிசனத்துக்கு போகும்போது உத்தராதி படத்தில் இருந்து சாயங்காலம் கிரி பிரதட்சணம் பண்ணி சகஸ்ர தீப அலங்காரம் சைவையும் பறப்பாடும் எங்களுடன் பார்ப்பதாக பிளான் பண்ணி தூங்கினோம்.

(தொடரும்)