
ஞாபகம் வந்துவிட்டது
என்று யாரிடம் சொல்வதென எண்ணியபோது
எதிரில் வந்த இதற்குமுன் பார்த்திராதவரைப்
பார்த்து சொன்னேன்
அவர் வேறொருவரின் பெயரைச் சொல்லி
நீங்கள்தானே என்றதும் ஆமாம் என்றேன்
அந்தப் பெயர் என்னுடையதாகவே ஒலித்தது
அங்கேயே தான் இருக்கிறீர்களா என்றவரிடம்
அவ்வப்போது வேறிடம் சென்று வருகிறேன்
இன்னும் முழுசாக இடம்பெயரவில்லை என்றதும்
நான் அதே இடத்தில்தான் மூன்றாவது தலைமுறையாக வசித்து வருகிறேன்
வீடு மாற இன்னும் நேரம் வரவில்லை
எனக்கு வந்துவிட்டாலும் உகந்ததாய்த் தேடியலைந்துவிட்டு
மறுபடியும் அதே முகவரிக்கு வந்து சேர்ந்துவிடுகிறேன்
இருக்கட்டும் மாலைவேளையில்
நடந்து சென்று திரும்பும் சந்தர்ப்பங்களில்
முடிந்தால் சந்திக்கலாம்
நம்மிருவரில் யார்
ஒருநாள் புதிய முகவரியில்
மனித அடர்த்தியற்ற வேறொரு இடத்தில்
நடந்து கொண்டிருப்போமோ
அப்போது பழைய இருப்பிடங்களை மறந்துவிட நினைத்தாலும்
இந்த சாலையின் ஞாபகம் திரும்பும்.
