நன்றி : அறிவுஜீவி சுஜாதா வாசகர்குழு சார்பாக ராம் ஸ்ரீதர்

ஸ்டேஷனில் ரயில் தாமதித்து வந்தது. அதைப் பற்றி வெட்கப்படாமல் அதிக நேரம் அங்கே நின்றது.
ஏறக்குறைய’ காலியாக இருந்த முதல் வகுப்புப் பெட் டியிலிருந்து இறங்கியவர் சுற்றுமுற்றும் போர்ட்டரைத் தேடினார்.
தம் மனைவியையும் மற்ற சாமான்களையும் பத்திர மாக இறக்கிப் பிளாட்பாரத்தில் சேகரித்தார். அவருக்கு நாற்பத்து ஐந்து வயது இருக்கலாம். அந்த வயதுக்கு அவர் அணிந்திருந்த ‘ஷர்ட்’ அமெரிக்கா போயிருந்ததைக் காட்டியது.
மனைவிக்கும் அவருக்கும் வயதில் வித்தியாசம் அதிகம் இருக்கும் என உடனே தோன்றியது. அவள் கண்களை மறைத்த பெரிதான வெயில் கண்ணாடியை எடுத்ததும் அழகாக இருப்பாள் எனவும் தோன்றியது.
மார்பின் குறுக்கே வெளிநாட்டு டிரான்சிஸ்டர் அணிந்திருந்தாள். அது ரயில் பிரயாணத்திலிருந்து விடுபட்ட புதிய ஆர்வத்தில் உரக்கப் பேசியது. “”எல்லா இலாக்காக்களையும் கவர்ந்து கொண்ட புரட்சி அரசா…..”
அவள் முள்ளைத் திருப்பி சினிமா பாட்டைத் தேடினாள். அங்குலத்துக்கு அங்குலம் அதே பேச்சு ஒலிக்க, அவள் அலுத்துக்கொண்டு அதை மூடினாள். தன் கைப்பையிலிருந்து சில சாதனங்களை எடுத்து தன்னை ஆறு செகண்டுக்குள் அழகு படுத்திக்கொண்டாள்.
ஒரு போர்ட்டர் தன்னிச்சையாக அவர்கள் அருகே வந்து சாமான்களை நோட்டம் விட்டான்.
‘இன்னொரு ஆள் வேணும்ப்பா”
“இன்னொரு ஆள் இல்லீங்க. நானே இரண்டு டிரிப்பாக் கொண்டு போய்ட றேன். எங்கே?”
“டாக்ஸி வேணும்ப்பா. புதுப்பாளையம் போகணும்.”
“இன்னிக்கு டாக்ஸி கிடைக்காது. சிரமங்க. எல்லோரும் கலெக்டர் ஆபிஸ் போயிருக்காங்க.'”
‘”என்னதான் கிடைக்கும்?”
“குதிரை வண்டி.”
“சரி, தூக்கு.”
அவன் சாமான்களை ஏற்றிக் கொள்ளும் போது. “என்னைக்கூடக் கூட்டிருக்காங்க. நானும் போக வேண்டியவன்தான். எல்லாருக்கும் கொடுக்கருங்களாம்” என்றான்.
அவர் புரியாமல்;”அப்படியா? பாத்துப்பா! கண்ணாடிச் சாமான். கீழே போட்டுடாதே” என்றார்.
குதிரை வண்டிகாரன் தூங்கிக்கொண்டிருந்தான்.
“ரஹீம் பாய், சவாரி வந்து இருக்கு” என்று போரிட்டர் அவனை எழுப்பினான்,
அவன் கொட்டாவி விட்டு, “எங்கே போகணும்?” என்றான்.
“புதுப்பாளயம் எக்ஸ்டன்ஷன் ” என்றார்.
குதிரை திரும்பிப் பார்த்துக் கோபத்துடன் ஒரு தடவை வாலைச் சொடுக்கியது.
“புதுப்பாளையம் எக்ஸ்டன்ஷனா? ரொம்ப தொலைவாச்சுங்களே” என்றான்.
“என்னப்பா, இங்கிருந்து நாலு மைல் “
“ஏழு மைல் ஆயிடுங்க. இன்னைக்கு ஊருக்குள்ளே போக முடியாது. மேம்பாலத்தின் வழியாய்ப் போய் ஷண்முக நகர் போய்ச் கத்தி வரணும்.”
“ஏம்ப்பா, ஊர்லே என்ன?”
“கலகங்க, சின்னப் பசங்கள்ளாம் தெருவை அடைச்சுட்டு ஊர்வலம் போறாங்க. புதுசா என்னவோ பேசருங்க. சர்க்கார் மாறிப் போச்சுது.”
‘”இவங்களுக்கு எல்லாம் வேறே வேலை இல்லை.”
‘”தமிள் பேப்பர்கூட நின்னு போச்சுங்க. இன்னிக்கு வரவே இல்லை.”
“நீ இப்பப் புதுப்பாளையம் வரியா இல்லையா?”
”பத்து ரூபாய் ஆகுங்க.”
”உங்க ராஜ்யம்பா. சரி ஏத்திக்க.”
மனைவி முதல் தடவையாகப் பேசினாள். “என்ன கலகமாம்?”
“தெரியவில்லை. ஏதாவது லோக்கல் சமாசாரமாக இருக்கும். ஸ்டூடண்ட்ஸ்தான் இருக்காங்களே!”
“இல்லீங்க. நேத்து ராத்திரி பாண்டு வாசிச்சாங்க. கொடி ஏத்தினாங்க. கொஞ்சம் முன்னாலே வந்துடுங்க, பின்பாரம் ஜாஸ்தியா இருக்கு”
குதிரை பின்னங்கால்கள் வாங்கிக்கொண்டு நகர மறுந்தது. அவன் இறங்கி ஒரு குடுமி அளவு புல்லை அதன் வாயில் காட்டினான். அது சற்று நகர்ந்தது. நடந்தது.
அவன் அதன் முதுகில் சாட்டையடித்து “தேவலோகத்து, தென்னை மரமே’ என்று திட்டினான். ஒரே இடத்தில் அது குதித்தது.
அவர் தம் மனைவி யுடன் உராய்வதை ரசித்தார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகை செய்து கொண்டார்கள்.
“என் லைஃப்லே குதிரை வண்டியிலே போனதே இல்லை” என்றாள்.
“நான் ஓட்டிக்கூட இருக்கிறேன் சின்ன வயசிலே” என்றார்.
குதிரையை நடக்க வைப்பதற்கு ரஹீம் பாய் உடன் நடக்க வேண்டியதாயிருந்தது. அடிக்கடி ‘இந்தா’ என்று சொல்லிக்கொண்டு நடந்தான்.
“லாரிச் சாமான்கள் எல்லாம் வந்து சேர்ந்திருக்குமா?” என்று கேட்டாள்.
”நாளைக்குத்தான் வரும். நான் யோசிச்சுதான் நாம் போய்ச் சேர்ந்த பிறகு சாமான்கள் வரும்படி ஏற்பாடு செய்திருக் கிறேன். இப்ப வீடு காலியாகத்தான் இருக்கும்.”
கரும் பச்சையாகச் செல்லும் ஒரு வாய்க்கால் மேம் பாலத்தின் மேல் வண்டி கடந்த போது அவர் “த்ரில்லிங்” என்றார்.
“நீ இப்பத்தான் முதல் தடவை பார்க்கப் போறே இல்லை?”
“எதை?””
“நம்ம வீட்டை.’
‘இதென்ன கேள்வி?”
“பார்த்தா அயர்ந்து போய்விடுவாய்.”
*அதற்குச் செலவழித்த பணத்தை நினைத்து ஏற்கனவே அயர்ந்து விட்டேன் “ ”பணம் என்ன, வரும் போகும்” “போய்த்தான் இருக்கிறது. ஏறக்குறைய லட்சத்தைச் செல்வழிச்சுட்டீங்க, உங்க அமெரிக்கா பணம், என் பணம். இன்ஷுரன்ஸ் பாலிஸி மேலே கடன் எல்லாத்தையும் போட்டிருக்கீங்க. நம்ம ரெண்டு பேருக்காக இவ்வளவு பெரிய வீட்டைக் கட்டணுமா?” ”நம்ம ரெண்டு பேருக்காக இல்லை. உன் ஒருத்திக்காக.” “பெரிய தாஜ்மஹல்!'” ‘”தாஜ் மஹல்லே மனுஷங்க வாழ முடி யாது. இந்த வீட்டிலே இருக்கிற சௌகரியம் அந்தக் கல்லறையிலே வருமா? மூணு பெட் ரூம் அட்டாச்ட் பாத்ரூம். மொஸய்க் தரை….” “மூணு பெட்ரூம்! கிழமைக்குக் கிழமை மாத்தி மாத்திப் படுத்துக்கப் போறோமா?”” “விருந்தினர்கள் வந்தா?” “அந்தக் காட்டிலேயா?” “காடு இல்லை அது. சின்ன ஊர்தான், நல்ல சீதோஷ்ணம், நல்ல காற்று. எப்படி இருக்கு பாரு பச்சைப் பசேல்ன்னு.” ‘தூங்குமூஞ்சி ஊரு.…” அவள் டிரான்சிஸ்டரை மறுபடியும் முயன்று பார்த்தாள். ”எங்கே பார்த்தாலும் பேச்சா இருக்கு,” “நிறையப் பேசறாங்க இல்லே. இந்தக் காலத்திலே” “பாதி புரிய மாட்டேங்குது”.… குதிரை திடீரென்று ‘ட்ராட்’ டில் ஓட ஆரம்பித்தது. வண்டிக்காரன் தொத்திக் கொண்டான். “என்னப்பா ஓடுது” “நம்ம வீடு இந்தப் பக்கம்தாங்க இருக்கு. வீட்டுக்குப்போறோம்னு மனப்பால் குடிக்குது. ஏண்டா டேய்…” “சரியான ஊரு, சரியான குதிரை! எனக்கென்னவோ ஆரம்பமே நல்லா இல்லேன்னு தோணுது.” “நம்ம வீட்டைப் பார்த்தா ‘கம்ப்ளீட்டா மாறிடுவே. ” வீடு, வீடு, வீடு! ஒரு வருஷமா உங்க வீட்டைப் பற்றியே பேசி ‘போர்’ அடிச்சிருக்கீங்க.
”உனக்குத் தெரியாது. இந்த வீடு என் இள வயசோட கனவிலே ஒண்ணு!”
“எதுத்த வீட்டு ராதா மாதிரியா?”
”இல்லை. நான் சின்ன வயசிலே இருந்த ஓட்டை வீட்டை நீ பார்த்ததில்லை. எட்டுக் குடித்தனம். ‘ஸ்டோர்’னு சொல்லுவாங்க. நடுவினே துளசி மடம். ஒரே ஒரு குளியலறை, கார்ப்பரேஷன் குழாய் பள்ளத்திலே. தண்ணி ரப்பர் வாசனை அடிக்கும். குறுக்கே முப்பத்து ஆறு கொடி கட்டிப் புடவை, ரவிக்கை, பாவாடை, குழந்தைத் துணி எல்லாம் தொங் கும். குளியலறைக்குக் கியூவிலே நிக்கணும், டால்டா டின்னை வைச்சுட்டு. எனக்கு ‘கான்ஸ்டிபேஷன்’ வந்ததே அந்த வீட்டி னாலேதான். இரைச்சல். ஆர்மோனியத்திலே பாட்டுச் சத்தம், கணவன் மனைவிங்க திட்டிப் பாங்க, அப்புறம் சமாதானம் ஆயிடுவாங்க. ‘ஸ்பிரிங்’ கட்டில் முனகும்!”
“சே”
‘‘எனக்கு அப்பலேந்தே வைராக்கியம், எப்படியாவது நம்ம வாழ்க்கையிலே வசதியா வாழற மாதிரி ஒரு வீடு நமக்கே நமக்குன்னு செளரியமாக் கட்டிக்கிடணும்னு சின்ன வயசிலே பதிவாயிடுச்சு, அந்த வீட்டு முகப்பு எங்கெங்கே எப்படி எப்படி இருக்கணும், தோட்டம் எப்படி இருக்கணும், எங்கெங்கே எப்படி எப்படி ரூம் இருக்கணும், தோட்டம் எப்படி இருக்கணும், நான் பாஞ்சு பாஞ்சு சம்பா திச்சதெல்லாம் இந்த வீட்டுக்காகத்தான்,””
“தோட்டம் இருக்கா என்ன?”
தோட்டத்துக்கு இடம் இருக்கு. அதிலே மாமரம் வெச்சு ஒரு ஊஞ்சல் போட்டு…. “
“”பிள்ளை இல்லாத வீட்டிலே நாம ரெண்டு பேரும் ஊஞ்சல் ஆடலாம்”
அவர் முகம் வாடியது. திடீரென்று மௌனமானார்.
”ஸாரி!” என்றாள்.
“எனக்கு வயசு நாற்பத்து அஞ்சுதான் ஆறது, இன்னும் பத்து வருஷங்களாவது…”
‘ஸாரி, ஸாரி, ஸாரி! மறந்து போய்டுங்க. வாய் தவறி…”
“எனக்கு நீங்க போதும். நீங்க போதும்.”
”சார்லி சாப்ளின் பத்திச் சொல்லட்டுமா? எழுபது வயசிலே…”
சார்லி சாப்ளின் வேண்டாம். நம்ம வீட்டைப் பத்திச் சொல்லுங்க.’
அவர் மறுபடியும் உற்சாகமானார். “மாடி யிலே ‘கெஸ்ட் ரூம்’ கட்டி இருக்கேன். அப்புறம் போர்ட்டிகோ ‘ஸிட் அவுட்’ மாதிரி கட்டியிருக்கேன். சாயங்கால வேளையிலே நீயும் நானும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு புஸ்தகம் படிக்கலாம். ‘ஸ்டீரியோ கேட்கலாம்.”
“வேலைக்காரிங்க கிடைப்பாங்களா?”
”நிறைய. இந்தப் பக்கமெல்லாம் ஏழை ஜனங்க ஜாஸ்தி. ஜஸ்ட் இமாஜின். கண்டி ராக்டர் சொன்னார். பத்து ரூபா கொடுத்துச் சாப்பாடு போட்டா வீட்டோடயே பொண்ணு வந்து இருந்துடுமாம். தோய்க்குமாம். வீடு துடைச்சுப் பெருக்கி, துணி பாத்திரம் தேய்ச்சு, சமையல் செய்து… எல் லாம் செய்யுமாம். எவ்வளவு ‘சீப்’ பாகு! எஸ்.லே ஞாபகம் இருக்கா? வாரம் ஒருத்தி வந்து துணிகளை ‘ப்ரெஸ்’ பண்றத் துக்குப் பத்து டாலரும் டி. வி.யும் கேட்டா. இண்டியாவைப் போல வராது.’
‘ஏழ்மை வாழ்க!” என்றாள்.
“புதுப்பாளையத்திலே எங்கேங்க?'” என்றான் குதிரை வண்டிக்காரன்.
“பால் டிப்போ ஒண்ணு வரும். திரும்பி அஞ்சாவது ‘கிராஸ்’லே திரும்பணும்” என்றார்.
‘தனியா இருக்குது.”
“இப்பத்தான் டெவலப் ஆறது ஏரியா. முதல்லே வந்தபோது ஏகப்பட்ட குடிசையா இருந்தது. எல்லாம். க்ளியர் பண்ணிட்டாங்க. லுக் டார்லிங்!” குழந்தை மாதிரி அவர் உற்சாகப்பட்டார்.
”அதோ பார், கடைசியிலே முத்து மாதிரி பளபளன்னு. அதான் நம்ம வீடு.”
வீடு அழகாகத்தான் இருந்தது. எமல்ஷன் வகை பெயிண்ட் அடித்து ஒளிர்ந்தது. சற்று உயரமான மனையில் கட்டிடம். புதிய கட் டிடக்கயிைன் அம்சங்கள் கொண்டு ஜொலித்தது. வரவேற்றது.
குதிரை: இரைத்தது. காரன் அதற்கு ஷொட்டுக் கொடுத்துவிட்டுச் சாமான்கள் இறக்க முற்பட்டான்.
அவர் தம் பர்ஸைத் திறந்து நோட்டை எடுத் தார். அவர் மனைவி மெதுவாகச் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு வீட்டின் வாயிலை அணுகினாள்.
*”கதவு பூட்டவில்லையே!'” என்றாள் அங்கிருந்து.
“கண்டிராக்டரிடம் சாவி இருக்கிறது..திறந்து வைத்திருப்பான்.” அவள் மெதுவாக அந்தச் சிங்காரத் தேக்குக் கதவைத் திறந்தாள். வீறிட்டாள்.
அவர் அதிர்ந்து ”என்ன?'” என்று கத்தினார்.
”இங்கே வாருங்களேன், வந்து பாருங் களேன்!'” குரலில் இருந்த அவசரம் சாமான்களை மறந்து வயதை மறந்து அவரை அவளிடம் ஓட வைத்தது.
“உள்ளே பாருங்களேன்!” என்றாள்.
உள்ளே… மொஸய்க் பதித்த பெரிய ஹால், அதன் குறுக்கே கயிறுகள் கட்டி ஏழைத் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. கட்டம்போட்ட சட்டைகள், காக்கி டிராயர்கள், வேட்டிகள், பருத்திச் சேலைகள். சீட்டிப் பாவாடைகள், ஓரத்தில் இரண்டு மூன்று விறகடுப்புக்களில் அலுமினியப் பாத்திரங்கள் உற்சாகமாகக் கொதித்துக் கொண்டிருந்தன. புகை படிந்திருந்தது.
அந்த ஹாலில் சுமார் பத்துப் பேர் இருந் தார்கள். பெண்கள், ஆண்கள், கிழவர்கள், குழந்தைகள் பாண்டி ஆடிக்கொண்டும் ஒருவர் ஒருவர் துரத்திக் கொண்டும்…., … இவர்கள் அழைத்ததைச் சிலர் அலட்சியமாகப் பார்த்தார்கள்.
“வாட் தி ஹெல்” என்று இரைந்தார்.
அவர்கள் எல்லோரும் இப்போது அவரைப் பார்த்தார்கள்.
“யார்யா நீங்கள் எல்லாம்? யார் நீங்க? எப்படி உள்ளே வந்தீங்க? யாரைக் கேட்டு உள்ளே வந்தீங்க?”
அவர்களில் ஓர் இளைஞனை எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அவன் வேட்டியை டப்பாக் கட்டுக் கட்டிக் கொண்டு மெதுவாக அவர் அருகே வந்தான். அவரை நேராகப் பார்த்தான்.
“என்ன வாத்தியாரே!” என்றான்.
“யார்யா நீ?”
“நீ யாரு?”
*’என்னது! நான் இந்த வீட்டுச் சொந்தக்காரன்.”
“நீ கூடவா?”
“என்னடா சொல்றே? “
“மரியாதையாகப் பேசு. உனக்கும் லெட்டர் வந்திருக்கா?”
“என்ன லெட்டர்?”
“புது சர்க்கார் இந்த வீட்டை எடுத்துக்கிட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்திருக்காங்க. அதுக்கு லெட்டர். உனக்கும் பங்கு உண்டா? லெட்டரைக் காட்டு பார்க்கலாம்.”
(இது நிகழக்கூடிய கதை)
