
நூறு மட்டமான
நாவல்கள் எழுதிலட்சம்
பேர்வழிகளை அவற்றைப்
படித்துப்
புகழத் தூண்டியதற்காக அவளுக்கு
ஒரு பரிசை அளித்திருக்கிறார்கள்
நூறு மட்டமான நாவல் அவள் எழுதியதற்காக
நல்ல நாவல் ஒன்றை மட்டும் எழுதிய
நாவலாசிரியனைப் பழி வாங்கி விட்டார்கள்.
அவள் நாவல்கள் எழுதியது தவறு
கவிதைகள் எழுதியிருக்க வேண்டும்
நல்ல கவிதை எது கெட்ட கவிதை எது
என்று, நாவலில் சொல்வது போலக்
கவிதையில் சொல்வது அவ்வளவு சுலபம்
இல்லை. கவிதைக்கு வாஹ்
வாஹ் போட
என்றுமே பத்தாயிரம் பேர் இருப்பார்கள்.
நாவல்களுக்கு வாஹ்
வாஹ் தேவையில்லை
பிடி சாம்பலில் ஈரம் தோன்றுவது போல
நாவல்களிலும் கவிதை ஈரம் தோன்றி
கண்ணீர்த் துளியை வரவழைக்கும்
வித்தை அவளுக்குச் சுலபமாகக் கை
வந்துவிட்டது. நூறு நாவல்களையும் அவள்
அழுது கொண்டே தான் எழுதினாள்!
