பழைய சாதம்/விமலன்

மீந்து போன பழைய சாதம்.
வேகாத குழம்பு.
புகை சூழ்ந்த விறகடுப்பு.
சோறு வடித்த கஞ்சி.
அடுக்குப்பானையின் புளித்த நீர்.
விஷேச நாட்களின் தோசை இட்லி!
ஊர் பொங்கலில் உண்கிற அசைவச்சாப்பாடு.
பண்டிகை நாட்களில் உடுத்துகிற புத்தாடைகள்,
இருப்பதை பகிர்ந்துண்ட குடும்பம்!
பசியுடன் உண்ண அமர்ந்து போதாமையுடன் எழுந்த நாங்கள்! கிழிந்து ஓட்டை விழுந்த கண்டாங்கிச்சேலையுடன் அம்மா! முரட்டிருப்பு காட்டுகிற பாசத்தின் மனிதராய் அப்பா.
வலது கை தோள்பட்டையோரம்
கிழிந்து தொங்குகிற சட்டையுடன் தம்பி.
நாடா அறுந்து போன பாவாடையின் பொத்தல் தெரிய பள்ளி செல்கிற அக்கா.
காதறுந்த மஞ்சள் பை சுமந்த சக
மாணவ மாணவிகள்!
பல்கலைக்கழகபட்டம் வாங்காத ஆசிரியர்கள்.
பொறியியற்கல்வியும்,
சிறப்புப்பாடமும் பயிலாத அரசு ஊழியர்கள்,
இன்னும் இன்னமுமாய் சுமை கொண்டிருந்த உழைப்பாளிகள்
என நகர்வு கொண்டிருந்த எனது முந்தைய தலைமுறை வரைவாய்
எனது இருப்பு,,,!

                                       விமலன்,,,