என்னிடம்/அழகியசிங்கர்

என்னிடம் எப்போதும்
இரண்டு விதமான
கவிதைகள் உண்டு

ஒன்று எப்போதும் எழுதுகிற கவிதை

இரண்டு எழுத முடியாத கவிதை

எழுத முடியாத கவிதை
அவ்வப்போது
மின்னல் போல் தோன்றி
மறைந்து விடுகிறது
அதைத் தாளில் குறிக்க முடியவில்லை
உடனே மனதைவிட்டுப்
போய் விடுகிறது

எப்போதும் எழுதும்
கவிதை
என் வானத்தில்
சிறகடித்துப் பறக்கிறது
தாளை வைத்து உட்கார்ந்தால் போதும்.
மடமடவென்று
எழுத வந்து விடுகிறது

எழுத முடியாத
கவிதையைக் குறித்துதான் இப்போது
நான்
கவலைப்படுகிறேன்.

என்னிடமிருந்து
ஏன்
நழுவிப் போகிறது
என்ற ஆச்சரியத்தை
அதனிடம்
எப்போதும் நான் கேட்கத் தவறுவதில்லை.