
சோற்றுக் கடையில்
காத்துக் கிடந்து
பொட்டலம் கிடைத்ததும்
பட்டெனக் கிளம்பி
எந்திரக் குதிரையில்
முந்திச் சென்று
கேட்ட நேரத்துக்குள்
கேட்டைத் தொட்டு
உணவைக் கொடுத்து
உரிய சில்லறை பெற்று
அடுத்த அழைப்பு
அவசரப் படுத்த
யாருக்கும் அஞ்சாத
ஆரஞ்சுப் படைவீரன்
எதிரே வந்த
எதுவும் தெரியாமல்
கணப் பொழுதில்
காருக்குள் சிக்கி
இலக்கைத் தொடுமுன்
இழந்தான் உயிரை…
சிவப்பானது ஆரஞ்சுடை
சிதறிக் கிடந்தன பொட்டலங்கள்
சுற்றி நின்ற கூட்டத்தில்
உச்சுக் கொட்டி ஒரு குரல்
“அவசரம் சார் இவனுங்களுக்கு”
அவசரகதியில் சொல்லிச் சென்றது…
