
மருத்துவமனையில்
ரிசல்ட் கிடைக்க
இரண்டு மணி நேரம்
காத்திருக்கச் சொல்லிவிட்டார்கள்
ஒரு தேநீர் அருந்தி வரலாமென
சற்றே நடந்து
சந்தடி மிகுந்த கடைத்தெருவுக்கு வந்து
தோதான தேநீர்க்கடையைக் கண்டுபிடித்து
தேநீர் ஆர்டர் செய்தேன்
ஆவி பறக்க
சில்வர் டம்ளரில் வந்தது
கம கமத் தேநீர்
உதடு பொருத்தி
ஒரு வாய் அருந்தியதும்
ஆசுவாசமானது மனது
என் கையிலிருந்த சில்வர் டம்ளரிடம்
கேட்டேன்
நான் உன்னைக் கவ்வும்
எத்தனையாவது உதடென்று
என்னை வித்தியாசமாகப் பார்த்த டம்ளர்
நீ முத்தம் கொடுத்திருக்கிறாயா
எனக்கேட்டது
ஆம் என்றேன்
எத்தனை முத்தங்கள் கொடுத்திருக்கிறாய் எனக்கேட்டது.
காதலிக்கா? எனக் கேட்டேன்
காதலிக்கு மட்டும்தான்
முத்தம் கொடுத்திருக்கிறாயா?
அம்மா, குழந்தைகள், நண்பிகள்
இவர்களுக்கெல்லாம்
முத்தம் கொடுத்ததில்லையா?
எனக்கேட்டது டம்ளர்
அப்படிப்பார்த்தால்
எண்ணிக்கையிலடங்காதவை
நான் கொடுத்திருக்கும் முத்தங்கள் என்றேன்
அப்படித்தான்
இதுவரை என்னைக் கவ்விய
உதடுகளின் எண்ணிக்கையும்
என்றது டம்ளர்
