யாதும் ஊரே, யாவரும் கேளிர்../சுரேஷ் கண்ணன்

சென்னை DAY என்று நகரமே அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை பூராவும் விளம்பரங்கள், சிறப்புக் கட்டுரைகள், புகைப்படங்கள்.

மூட்டு வலி, புக் செய்து 20 நாட்களாகியும் கேஸ் சிலிண்டர் இன்னமும் வராதது போன்ற இன்ன பிற லெளகீக கவலைகளிலிருந்து இளைப்பாற இவ்வாறு ஏதாவதொன்று அவ்வப்போது கொண்டாடப்பட்டுக் கொண்டிருப்பதும் ஆறுதலாகத்தான் இருக்கிறது.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்றாலும் இந்த நகரம் தன்னிச்சையானதொரு உணர்வில் பிடிக்கும். அவ்வளவுதான்.

நாம் பயணித்துக் கொண்டிருக்கும் பேருந்தின் மீது பயணம் செய்து இறங்கும் வரை ஒரு தற்காலிக பிடிப்பு ஏற்பட்டு எதிரே வரும் வண்டியை ….”தா… எப்படி ஓட்றான் பாரு நாயி..” என்று அராஜகம் செய்யும் ஓட்டுநருக்கு ஆதரவாக தன்னிச்சையாக பேசவும் உணரவும் செய்வோம் அல்லவா.. அவ்வளவுதானே ஒழிய, இந்த நகரத்தை விட்டு விலகினால் இதைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கும் கற்பிதம் சார்ந்த அபத்தங்கள் என்னிடமிருக்காது.

இந்த ஒரு காரணத்திற்காகவே மற்ற நகரங்களிலிருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்து விட்டு சதா ஊர்ப்பாசத்துடன் அலம்பல் செய்து கொண்டு, அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் ஊர்க்காரர்கள் என்றால் அறிமுகமில்லாதவர்களுக்கும் விதிகளை வளைத்து பாசத்தைக் கொட்டி. :”ஊராடா இது” என்று இங்கு சதா திட்டிக் கொண்டு ஆனால் இதை விட்டு நகரவும் நகராமல்…இருக்கும் மனிதர்களைக் கண்டால் அலர்ஜியாக இருக்கிறது.

இதுபோன்ற கற்பிதம் சார்ந்த பற்று உணர்வுகள்தான் துவக்கப்புள்ளிகளாக வளர்ந்து வேறு வகையில் சாதி,மத,இன,பிரதேச வேறுபாடுகளையும் துவேஷங்களையும் வளர்த்து சக மனிதனை, ஒரு குழுவை காரணமின்றி வெறுக்கச் செய்கிறது.

ஒருவேளை சென்னையை விட்டுப் போனால் சற்றுகாலத்திற்கு பிரிவுத்துயரில் இருப்பேனே ஒழிய போன இடத்தைப் பழிக்காமல் அங்கு செம்மண் நீராக கலக்கவே முயல்வேன்.