கவிஞர் பிரமிள் சமூகவியல் கட்டுரை

        தீயும் பிரசாரமும் 




 'மார்க்ஸீய விமர்சனப் பரப்பில் உளவியலும் உளவியலும் ஒரு துறை', என்று ஒரு கம்யூனிஸ இலக்கியப் பத்திரிக்கையில் ஒரு கம்யூனிஸ விமர்சகர் எழுதியது நினைவுக்கு வருகிறது.

 உளவியலை ஆரம்பத்தில் எதிர்த்துப்பார்த்து, பிறகு விஞ்ஞான பூர்வமாக அது ஏற்கப்பட்டதனால், இப்போது  புதிய சமாளிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு 'கட்சி' மனப்பான்மையின் விளைவு, மேற்படி மேற்கோள்.

 ஐன்ஸ்டீனின் கொள்கையில், ஜடம் தன் முந்திய ஸ்தானத்தை இழந்து சக்தியின் சலனமாகக் மாறியபோது, ஐன்ஸ்டீனை கம்யூனிஸ்டுகள் எதிர்த்த வினோதத்தை விஞ்ஞான சரித்திரம் சொல்கிறது. இதைப் பின்னாடி மழுப்பி, விஞ்ஞானத்திற்கு ஈடுகட்டியாக வேண்டிய நிர்ப்பந்தத்தினால், சமாளிப்புக்களில் கூடக் கட்சித் 'தியிரட்டீஷன்ஸ்' ஈடுபட்டனர். எனவே, 'மார்க்ஸீய விமர்சனப்பரப்பில் உளவியலும் ஒரு துறை,' என்ற கூற்று, ஆச்சரியம் தரவேண்டியதில்லை.

 உளவியல் என்பதே, சிக்மண்ட் பிராய்டினால் விஞ்ஞான பூர்வமாக நிருபிக்கப்பட்ட 'உள்மனம்' பற்றிய கொள்கையின் பெருக்கமாகும். உள்மனம் என்று ஒன்று இருக்கிறது, விழிப்பின் போது செயல்படும் மனத்துடன் இது முரண்படுகிறது என்ற இக்கண்டுபிடிப்பை, விஞ்ஞானம் அங்கீகரித்துள்ளது.

 ஆனால், விழிப்புநிலையின் தேவையான பொருளாதார தேவை தான் மனிதனின் பூரணமான நோக்கு என்று அறுதியிட்டுக் கூறும் மார்க்ஸீயம், இதை ஒப்புக்கொள்ள அதற்கு ஆதாரமில்லை. ஒப்புக்கொண்டால், மார்க்ஸீயம் பொருள்முதல்வாதத் தத்துவமாக இருக்க முடியாது. உள்மனம் என்பதே பிரக்ஞையின்  முரண்பாடுகளின் விளைவாதலால், பிரக்ஞைக்கு உளவியல் முக்யத்வம் தருகிறது. அதை ஏற்கும் தத்துவம், கருத்து முதல் வாதத்தைத் தான் அநுசரிக்க முடியும்.

 பிராய்டுக்கும் மார்க்ஸுக்குமிடையில் உள்ள இந்த அடிப்படை முரண்பாடு பிரசித்தமானது நமது தமிழ்நாட்டில் அல்ல; எனவே, நமது அருந்தமிழ்க் கம்யூனிஸ்டுகள் என்னென்னமோ எல்லாம் சொல்வார்கள்.

 மேலும், மார்க்ஸ் மனிதமனத்தின் பேராழத்தை, அதன் எதிர்பாராத தன்மைகளை, இருட்குகைத்  தேவைகளை நிராகரித்த அல்லது அறியாத தத்துவவாதி என்பது பிரசித்தமானது. அவர் ஒரு பெரிய தார்மீகவாதி. உலக அரசியலில் ஒரு பெரிய வியாதியைத் தீர்ப்பதற்காக அவர் செய்த ரணசிகித்சை, வேறொரு பெரிய வியாதிக்கு - ஆன்மீக வறட்சி என்ற பெருவியாதிக்கு - காரணமாகிவிட்டது. உலகெங்குமுள்ள சிந்தனையாளர்கள் இதை உணர்ந்து, மார்க்ஸிடமிருந்து ஏற்க வேண்டியதை ஏற்று உதற வேண்டியதை உதறி இயங்குவதால் தான்,  இன்றைய சிந்தனையாளனுக்கோ கலைஞனுக்கோ, மார்க்ஸீயத்தை கட்சிரீதியாக அநுசரிக்க வேண்டிய தேவை இல்லாதிருக்கிறது. இன்றைய பெரிய சிந்தனையாளர்களின் கலைஞர்களின் வரிசையிலுள்ள ஜான் பால் சார்த்தர், மார்க்ஸை தார்மீக அடிப்படையில் மட்டுமே ஏற்றுள்ள ஒரு மார்க்ஸீயவாதி.

 இவ்விடத்தில், தமிழிலக்கியவாதிகளை நையாண்டி செய்து 'கவிதை' எழுதி, இக்கட்டுரையாசிரியரின் பதிலைப் பெற்ற ஒரு கட்சிமனப்பான்மை கொண்ட 'கவிஞரு'க்கு எழுதிய கடிதத்தின் வாசகங்களை, சார்த்தர் சம்பந்தமாக நினைவு கூறலாம்.

 "சமையலின் போது கத்தி வெட்டும், நெருப்பு சுடும்; கத்தி சுடாது, நெருப்பு வெட்டாது. முயன்றால், சமையலே நடக்காது. இதுபோலத்தான், அரசியல் வாழ்வுத்துறையில் பிரசாரத்தின் வேலையும் கலையின் வேலையும். பிரசாரம் பிரசாரமாகவும், கலை கலையாகவும் இருப்பதுதான், அரசியலுக்கும் வாழ்வுக்கும் செம்மை தரும். ஜான் பால் சார்த்தர் என்ற பிரெஞ்சுக்காரரை அறிவீர்கள். இவர், வியத்நாம் போரில் குற்றவாளி அமெரிக்காதான் என்று, ஒரு அறிவுவாதிகளின் கோர்ட்டைக் கூட்டி அதில் நிரூபித்த ஒரு நாவலாசிரியர்; நாடகாசிரியர். வியத்நாமைப் பற்றி, நாவலோ நாடகமோ எழுதியவரல்ல. ஆனால், அவரது நாடகங்களும் நாவல்களும் கலையுருவங்களாக, நூற்றுக்கணக்கான வியத்நாம்களை குறியிட்டுக் காட்டி விடுகின்றன."

 மேற்படி கடிதத்துக்கு மேற்படி 'கவிஞர்' பதிலளிக்கவில்லை.

 கம்யூனிஸப் பிரசாரத்தொனி இல்லாத யாவும் 'முதலாளித்துவ இலக்கியம்' என்கிறவர்கள், மெய்யிலக்கியம் யாவற்றையுமே நிராகரிக்கிறார்கள். மௌனி என்ற பெயரின்மீது இவர்களுக்கு இருக்கும் Phobia, இவர்களது அமெரிக்கப் Phobiaவுக்குத் தான் இணையாகும். ஆனால், இவர்களே வழிபடும் யெவ்துஷெங்கோ என்ன சொல்கிறார், பிரசாரமற்ற மெய்யிலக்கியம் (Genuine Literature) பற்றி : மெய்யிலக்கியம் எதுவும் மக்களுக்கு எதிரான ஒன்றல்ல."

  மௌனியின் இலக்கியம் எந்த வகையில் மக்களுக்கு எதிரானது என்பதை ஆராயக்கூடக் கூர்மையற்றவர்களுக்கு, யெவ்துஷெங்கோ வைத் துரோகியாகக் காண்பதுதான் சுலபமாகக் கைவரும் என நினைக்கிறேன்.

              சதங்கை, ஆகஸ்ட் 1973.