டி.எஸ்.சொக்கலிங்கம்
மறை(ற)க்கப்பட்ட மாமனிதர்
தமிழ் எழுத்துலகை நெறிப்படுத்திய ஆளுமையாளர்களுள், டி.எஸ்.சொக்கலிங்கம் தனித்தன்மை வாய்ந்தவர். இவரைப் பற்றிய தகவல்களும் இவர் ஆற்றிய பணிகளும், வரலாற்றின் தெளிவுத் தன்மையை இழந்துகொண்டு வருகின்றன. எவ்விதக் குறுகல் வாதத்தையும் ஒட்டிஒழுகாத ஒரு 'கனவான்' ஆக அவர் இயங்கியமையால், குறுகல்வாதிகளுக்கு இவரது சொரூபமும் ஜீவித நியாயமும் இடைஞ்சலாகிவிடுகின்றன. எனவே, இத்தகையவர்கள் மறைக்கப்படுகின்றனர் - மறக்கப்படுகின்றனர்.
குறுகல்வாதத்தை அநுசரித்து வருகிறவர்கள், தமக்கு ஏற்றவிதமாக அகப்படக்கூடிய வ.ரா(மஸ்வாமி) போன்ற பணியாளர்களைத்தாம், தெய்வங்களாகவும் பூச்சாண்டிகளாகவும் காட்டிப் பூசாரித்தொழில் 'பண்ணிண்டு' இருக்கிறார்கள். சொக்கலிங்கம் போன்ற பெரிய முழுப் பூசணிக்காய்களைச் சோற்றுப் பருக்கைகளினால் மூடி மறைக்கிறார்கள். காரணம், 'ஹி இஸ் நாட் ஏ பிராமின்' (வெங்கட் சாமிநாதன் சூத்ரம்). சிருஷ்டிகர்த்தாக்களையும், பகிரங்கக்களத்தில் இயக்கவாதிகளையும் ஊக்குவித்து, அவர்களுக்குக் களம் அமைத்து, தமது பணியாளருடன் தம்மை நிர்வாகக்களத்திலும் இணைத்த சொக்கலிங்கத்தின் இயக்கம், நூறுசதவீதம் மேலைநாட்டு உந்நத மதிப்பீடுகளின் இந்தியப் பிம்பமாகத்தான் பிறந்திருக்கிறது. மேலைநாட்டில் இவ்வித இயக்க வாதிகள் மறைமுகசக்திகளாகவே செயல்படுவது, அவர்களது உந்நத மதிப்பீட்டின்பாற்பட்டது. இதன் வேர்கள் கூட, விமர்சனாஸ்ரமத்தில் நான் குறிப்பிடும், இந்திய மறைமுக - Anonymous - ஆத்மார்த்திகளினுடைய ஒரு இயக்கத்தின் அதே வேர்கள் தாம். இதில், பூர்வீகம் எது என்ற உரிமைகளுக்கு இடமில்லை. ஏனெனில், இவ்வித வேர்களின்வித்து மனிதார்த்தத்தின் நுண்ணிய அகப்பண்பு எனவும், இதற்கு எந்தவிதமான கால-தேச-மத-மொழி உரிமையையும் தரமுடியாது என்றும் காணேண்டும்.
ஆனால், 'இங்கு, இத்தகைய இயக்கவாதிகளை இரண்டாம்பட்ச மாக்கிடும் போலிப் 'பெரியவா இயக்கம்', காலம்காலமாகத் தொடர்கிறது என்பதும், இத்தகைய இயக்கம் மேலைநாட்டு மதீப்பீட்டுச் சூழலில் நின்று பிடிக்காது என்பதும், ஒரு மாபெரும் வித்தியாசமாகும். இதனாலேயே, சொக்கலிங்கம் பற்றி அழகிரிசாமி, (நான் கண்ட எழுத்தாளர்கள்) தருகிற ஒரு அபூர்வ நேர்முகச் சித்திரம், இங்கே பொருந்துகிறது. சொக்கலிங்கத்தை யார் என்றே அறியாமல் தெருவில் அவரைப் பார்த்தமாத்திரத்தில் ஒரு ஆங்கிலப் பெண்மணி, அவரை ஒரு 'Gentleman' (கனமான்) என்று கணித்தாராம். இந்த வார்த்தையின் 'கனம்', நமக்குத் தெரியவராத ஒன்று. எங்கே தவறு நடந்தாலும், தனது சுயபாதுகாப்புகளையும் சுயகௌரவங்களையும் நீத்து, அதைக் களையச் செயல்படுகிறவனே கனவான் 'Gentleman'. இருண்ட காலத்திய இங்கிலாந்துக்கு சூஃபிகளால் எடுத்துச் செல்லப்பட்டு, ஒரு காட்டுமிராண்டிச் சூழலைக் கண்யமான சமூகக்கட்டுமானமாக மாற்றிய மதிப்பீடு இது என்கிற பார்வையும் உண்டு. (The Darked England முதலிய நூல்கள்: Idries Shah).
இந்தக் கோணத்தை எடுத்துத்தான், தமிழின் நவீன விமர்சனக் களத்தில் செயல்பட்டவர்களுள், சமூகத்தின் காட்டுமிராண்டி இயல்பைச் சார்ந்து இயங்கியவர்கள் யார், அதைப் பண்படுத்த முன் நின்றவர்கள் யார் என்று கணிக்க வேண்டும்.
'கல்ச்சர்' என்ற ஆங்கிலப் பதத்துக்கு இணையாகத் தமிழில் வழங்கப்படும் 'கலாச்சாரம்' என்ற பதத்தை உருவாக்கியவர் தாமாகத்தான் இருக்க வேண்டும் என்று, அழகிரிசாமி அலட்சியமாக பதிலளித்திருக்கிறார் புதுமைப்பித்தன். சொக்கலிங்கமும் புதுமைப்பித்தனும், இத்தகைய அரும்பதச் சொல்லாக்கலைச் 'சத்தம்' போடாமல் செய்துவந்திருப்பதைக் கண்டுபிடித்த அழகிரிசாமி, இந்தத் தகவலை, நான் கண்ட எழுத்தாளர்கள் என்ற நூலில், சொக்கலிங்கம் பற்றிய பகுதியில் தருகிறார். அரும்பத ஆக்கலில் இவ்விருவரும், இவர்களது சமகாலத்திய வெ.சாமிநாத சர்மாவும் செய்த பணியின் பரப்பு கணிக்கப்படாதது. அரசாங்க அலுவலகங்களில் தமிழ் பயன்பட ஆரம்பித்தபோது, இதற்காக ஒரு அகராதியையும் சொக்கலிங்கம் கணித்து வெளியிட்டிருக்கிறார். இவர் போன்றோரது பரந்துபட்ட பார்வையைத் தகவல் அடிப்படையில் நாம் மீட்டுக் கூறுவது, இன்று அத்யாவசியமாகும்.
இந்திய விடுதலை இயக்கத்தின் காந்தீய முகாமைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். தாமாகவே, காந்தி, வந்தே மாதரம் ஆகிய பத்திரிகைகளை, தமிழ்நாடு பத்திரிகையில் உதவியாசிரியராக இருந்து பெற்ற பயிற்சிக்குப் பின்பு, ஆரம்பித்து நடத்தியவர்; காந்தியில், 1932ம் ஆண்டு பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக, அதன் தடையுத்தரவைக் காங்கிரஸ் மீறி வெளியிட்ட சட்டமறுப்பு அறிக்கையை பிரசுரித்ததற்காக, பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு, ஆறுமாதகாலம் சிறையிலடைக்கப்பட்டவர். காந்தி நிறுத்தப்பட்டது. சிறை மீண்டதும், அதை மீண்டும் ஆரம்பித்தார். அரசாங்கம், ரூ.500 ஜாமீன் கட்டும்படி உத்தரவிட்டது. இது ஒரு நிர்வாகக் கருப்புக்கப்பம். காந்தி அத்துமீறினால் ஜாமீன் பறிமுதலாகும். காந்தி அத்துமீறியது. 1934-ல் பீகாரில் ஏற்பட்ட பூகம்பத்தின் போது, அரசாங்கம் சரிவர நிவாரண வேலைகளைச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டித் தலையங்கம் எழுதினார் சொக்கலிங்கம். ஜாமீன் தொகை பறிமுதலாயிற்று. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, வழக்காடி வென்று, ஜாமீன் தொகையைய் திரும்பப் பெற்றார். காங்கிரஸிற்கு அரசு விதித்திருந்த தடையுத்தரவு நீக்கப்பட்டு, சட்டசபைகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட முன்வந்தபோது, பெரிய அளவில் அதற்குரிய பணியைச் செய்வதற்காக ஒரு நாளேட்டைத் துவக்குவதற்கு முயன்றார். அப்போதுதான், இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளரான சதானந்த், தினமணி நாளேட்டைத் துவக்கி, அதன் ஆசிரியப் பொறுப்பைச் சொக்கலிங்கத்திடம் ஒப்படைத்தார். தினமணியின் பிரச்சாரம், சட்டசபையில் காங்கிரஸ் முதன்மை பெற்றதற்குரிய காரணங்களுள் ஒன்று. பத்தாண்டுகள் தினமணி ஆசிரியர் பொறுப்பு. இந்தக காலக்கட்டத்தில் அவர் எழுதிய தலையங்கங்கள், வரலாற்றுச் சிறப்புகொண்டவை. 'பேனாமன்னர்' என்று அவர் புகழப்பட்டார். இரண்டாம் உலகயுத்தத்தின் போது, போர்க்காலப் பணவீக்கத்துக்கு ஏற்றபடி சம்பளம் தராமையால், உதவி ஆசிரியர்கள் ராஜிநாமா செய்தனர். தமக்குக் கீழே உள்ள ஊழியர்களின் நலனிலேயே கருத்துக்கொண்ட சொக்கலிங்கம், தாம் பாதிக்கப்படாத நிலை இருந்தும்கூட, அவர்களுடன் சேர்ந்து தாமும் ராஜிநாமா செய்தார். செய்ததுடன், தாமாகவே தினசரி என்ற நாளேட்டையும் தொடங்கினார். இருந்தும், பொருளியல் நெருக்கடியினால் சில ஆண்டுகளே அது வெளிவர முடிந்திருக்கிறது. தினமணி காலத்திலேயே, தனிநபர் சத்யாக்ரகம் சிறை. 1973-ல் தென்காசித் தொகுதிக் காங்கிரஸ் வேட்பாளராகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினர் ஆகியிருக்கிறார். இவ்வளவும், அவரது பத்திரிக்கை இயக்க - அரசியல் இயக்கப் பரிமாணங்கள்.
தமிழில், சுபாஷ் சந்திரபோஸ், நேரு, காமராஜ் போன்றோரின் சரிதைகளை அவர் எழுதினார். இதற்கும் மேல் போய், காமராஜரைத் தூண்டி, ஒரு பெரிய அரசியல் தலைவராதற்குரிய ஊக்கத்தையே இவர்தான் கொடுத்தார் என்பது, இன்று பலருக்கும் தெரியாதது. சத்தியமூர்த்தி வீட்டில், பணிவிடையாளராகவும் காந்தீயத் தொண்டராகவும் இருந்த காமராஜரிடம் மறைந்திருந்த தலைமைக் குணங்களை, ஊடுருவி அறிந்த மேதை சொக்கலிங்கம். இவரின் தூண்டுதல்களுக்கு முதலில் செவிசாய்க்காமல், ராஜகோபாலச்சாரி முதலியாரைப் போலத் தமக்கு ஆங்கில அறிவு, பட்டப்படிப்பு ஏதும் இல்லாத காமராஜர் கூறியும் கூட, இந்திய தேசீயத்தின் நாடியை உணர்ந்திருந்த சொக்கலிங்கம், மக்களின் பிரதிநிதியாவதற்கு அவசியமானவை இவை அல்ல என்று சுட்டிக்காட்டி, காமராஜரை தைரியப்படுத்தியிருக்கிறார். முதலில் அகில இந்தியத் தளத்தில் ராஜகோபாலாச்சாரி வகித்த பெருந்தலைமையை, காமராஜர் பின்னாடி வகித்தமைக்குப் பின்னணியாக, சொக்கலிங்கத்தின் ஆளுமை நின்றிருக்கிறது.
கு.ஸ்ரீனிவாஸனுடன் சேர்ந்து அவர் ஆரம்பித்த பத்திரிகைதான் மணிக்கொடி. இதன் ஆசிரியராகப் பொறுப்பளிக்கப்பட்டிருந்தவர் வ.ரா. பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரபிந்தோவின் ஆசிரமத்தில் இருந்த காலத்தில், அங்கே வந்து போய்க் கொண்டிருந்த சி.சுப்ரமணிய பாரதியுடன் பழகி, அவருடைய கவித்துவத்துக்கும் நவ இந்தியப் பார்வைக்கும் ஆட்பட்டவர் வ.ரா. இதனால், அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்த தமது காந்தியில், பாரதி பற்றித் தொடராக, சொக்கலிங்கம் வ.ரா.வை எழுத வைத்ததின் விளைவுதான், பின்பு, மகாகவி பாரதி என்ற நூலாயிற்று. சொக்கலிங்கத்தின் சிறுகதைகள், அல்லி விஜயம் என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் ஒரு புனைபெயரில் எழுதிய நாடகம் ஒன்றை, அழகிரிசாமி இளைஞராக இருந்தபோது தமது ஊரில் மேடையேற்றியதும், பிறகு சொக்கலிங்கத்திடம் உதவி ஆசிரியராகப் பணி செய்து கொண்டிருந்தபோது, ஒரு சந்தர்ப்பத்தில் அதே புனைப்பெயர் கொண்ட விஷயம் ஒன்றைப் பார்த்துவிட்டு, இது யார் என்று அவரிடமே விசாரித்தறிந்து வியந்தும், ரஸமான விபரம்.
லியோ டால்ஸ்டாயின் War and Peace நாவலை, சுருக்காமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் சொக்கலிங்கம். இவ்விடத்தில், அவரது தமிழியல் சாதனை மீண்டும் பிரவேசிக்கிறது. இந்நூல் இன்று அச்சில் இல்லை. காந்தி முதலிய தலைவர்களை அவர் சந்தித்த விபரங்களும் இவற்றின் வழியாக அரிய தகவல்களும், எனது முதல் சந்திப்பு என்ற அவரது நூலில் கிடைக்கின்றன.
மறையும்போது சொக்கலிங்கத்துக்கு வயது 67 தான். பிறப்பு 1889, மறைவு 1966. அதாவது அவர் மறைவதற்குள்ளேயே அவர் ஆரம்பித்து வைத்த நவீனமான தீவிர தமிழ் எழுத்தியலின் மணிக்கொடி காலத்திய சி.சு.செல்லப்பா, பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம், சிட்டி பெ.கோ.சுந்தரராஜன், சிதம்பர சுப்ரமணியன் ஆகியோர் சம்பந்தத்தோடு, 1959லேயே எழுத்து பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
தீட்சண்யம், நவம்பர் 1996.