நானோ கார்/அழகியசிங்கர்

கடந்த 2 ஆண்டுகளாக நானோ காரை எடுத்து ஓட்டவே இல்லை. இன்று வண்டியை எடுத்து ஓட்டும்போது அதற்கு ஒரே குஷி.
குறுகலான தெருவில் வண்டியை ஓட்டும்போது
‘ஜாக்கிரதை ..ஜாக்கிரதை..’ என்றது நானோ கார்.
சமாளித்தபடி ஓட்டிக்கொண்டு வந்தேன்.
மனோஜ்பவன் எதிரில் உள்ள சந்தில் திரும்பினேன்.
“நில்லு” என்று கட்டளை இட்டது நானோ கார். நிறுத்தினேன்.
“அண்ணே சௌக்கியமா?” என்று புழுதிப் படர்ந்து கிடக்கும் ஒரு பச்சை நிறத்திலுள்ள காரைப் பார்த்துக் கேட்டது.
“என்ன சௌக்கியம்? என் நிலையைப் பார்த்தியா..? நான் இன்னும் கொஞ்ச நாள்ல உயிரை விட்டுட்டேன்..”

வருத்தப்பட்டது நானோ .

தன்னை விட வயதில் மூத்தது அந்தக் கார். துபாயில் இருக்கிறான் அதன் ஓனர்.
அனாதையாய் தெருவில் விட்டுவிட்டு பல ஆண்டுகள் ஆயிற்று. அந்தக் காரின் உயிர்த் துடிப்பான பாட்டரி எப்பவோ போய் விட்டது. அந்தக் கார் சொல்வது உண்மையா நிலைதான்.

ஸ்ரீபெருமூச்சு விட்டது நானோ. கண் கலங்கியபடி அங்கிருந்து கிளம்பியது.
திடீரென்று ஒரு இடத்தில், ‘ஐயோ’ என்று கத்தியது.
‘ஏன்?’ என்று கத்தியபடி நிறுத்தினேன்.
காரின் முன்னால் ஒரு பெண் நடந்துகொண்டிருந்தாள்.
“அவள் மீது இடித்திருப்பாய்.”

நான் திகைத்தேன். உண்மையில் இடித்திருப்பேன். தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டது. மெதுவாக வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டேன்.

அதன்பின் நான் நானோ காரையே எடுக்கவில்லை. என்ன நினைத்ததோ தெரியவில்லை.