துளி 253

இடம் கண்டுபிடிப்பதற்குள் தடுமாறி விட்டேன்../அழகியசிங்கர்

எப்படியாவது போகத் தீர்மானித்தேன்.  நான் கூத்துப்பட்டறை நாடகங்களைப் பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகின்றன. 21 ஆம் தேதி கிளம்பி விட்டேன்.  முதலில் ஆட்டோவில் போகலாமென்று நினைத்தேன்.  பின் நானே டூ வீலரில் போவது என்று தீர்மானித்தேன்.  அங்குதான் தப்பு செய்து விட்டேன்.  
இந்தியன் வங்கி வளசரவாக்கத்தில் பணிபுரிந்ததால் அந்தப் பக்கமாகப் போய்விட்டேன்.  பின் ஐயப்ப நகரைக் கண்டுபிடிப்பதற்குள் ஒரே குழப்பம்.நான்  தேடித் தேடி கண்டு பிடிப்பதற்குள் கோயம்பேடு வந்து விட்டது. குகூள் மேப் போட்டுத் தேடத் தெரியவில்லை.   நான் போகும் வழியெல்லாம் ஒரே வாகன நெரிசல்.
கடைசியாக ஐயப்பா நகருக்கு ஒவ்வொருவராய் விசாரித்து 7.30 மணிக்குப் போய்ச் சேர்ந்தேன். 
முத்துசாமியின் 'சுவரொட்டிகள்', 'இங்கிலாந்து' போன்ற நாடகங்களைப் பார்த்திருக்கிறேன்.
முத்துசாமி நாடகங்களில் உச்சரிப்பிற்கு  முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  பின், உடலசைவு., 
இந்த முறை எம்.டி; முத்துக்குமாரசாமியின் கவிதைகளை நாடகமாக்கி உள்ளார்கள்.  நடிகர்கள் ஒவ்வொருவரும் பிரமிக்கும்படி நடித்தார்கள்.  அத்தனையும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நடித்தது சிறப்பாக இருந்தது. வரிக்கு வரி.  கவிதை வரிகளை அப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது கடினம் என்று தோன்றுகிறது. ஒரு நாடகம் நடந்து முடிந்தவுடன் எழுந்து போய்விடலாமென்று நினைத்தேன்.  ஆனால் முடியவில்லை.  ஒவ்வொரு நடிகரும் நடிப்பால் கட்டிப் போட்டுவிட்டார்கள். 
எல்லா நாடக வரிகளும் அவர்கள் வாயிலிருந்து தெரித்து விழுகின்றன.  எப்படி ஞாபத்திஙூருந்தும் டைமிங் மாறாமலும் நடித்துக் காண்பிக்கிறார்கள்? 
நாடகத்தின் பின்னணியில் ஒளிக் காட்சி மூலம் நடேஷின் அற்புதமான ஓவியங்கள்.  மாறி மாறி வருகின்றன.  இத்துடன் இசை.  இதெல்லாம் நான் லீனியர் நாடகங்கள்.  ஒரு விதத்தில் அர்த்தம் புரிகிற மாதிரி தெரியும், இன்னொரு விதத்தில் புரியாது.

எம்.டி.எம்மின் கவிதைகள் நாடகங்களாக மாறி விட்டன. பிரமிள் ‘நட்சத்திர வாசி’ நேரிடையாக நாடகமாக எழுதப்பட்டது. ஞானக்கூத்தனின் ‘வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு’ என்ற கவிதையை எடுத்து ந.முத்துசாமி நாடகமாக மாற்றி உள்ளார்.
நடிகர்களைப் பாராட்டிவிட்டு வந்திருக்கலாம்..அன்று என்னமோ தோன்றவில்லை.