முதல் சம்பளம் /சத்யப்பிரியன்

முதல் சம்பளம் குறித்து நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இருபது வயதுகளில் ஒருவித ரெண்டுங்கெட்டான் மனநிலையில் இருந்தேன். பியூசி சமயத்திலேயே முதல் சிறுகதை கல்கி சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசினைக் கொண்டு வந்ததால் அடுத்த ஜெயகாந்தன் நாம்தான் என்ற போதை மனதில் ஏறிய சமயம். வீட்டு நிலை அப்படியில்லை. ரிலே ரேஸ் மாதிரி ஒருவர் சம்பாதித்துத் திருமணமாகிக் குடும்பப் பொறுப்பை அடுத்த உடன்பிறப்பிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் அந்தக்கால சராசரி கீழ் மத்தியமர் குடும்பத்தில் பிறந்தவன் நான். சிறுகதை இலக்கியம் போன்றவை அன்று மட்டுமல்ல இன்றளவும் அப்பத்தின் மீது நெய் மிதக்கும் விஷயம்தான்.

ஏற்கனவே இலக்கியக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தபடி லௌகீக வாழ்க்கையில் சிறக்காமல் போன எனது தந்தை ஒரு சிறந்த முன்னுதாரணம். இப்படி பட்ட சூழலில் வேலைக்குச் செல்ல வேண்டி வந்தது.

எனக்கும் அக்கவுண்டன்ஸிக்கும் நடுக்கிடந்த புல் வேகாத பந்தம். இது எனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. நல்லவேளை அம்மணி ஸ்ட்ராங் என்பதால் நான் பிழைத்தேன்.

நான் பிஎஸ்ஸியை முடித்து விட்டு வேறு வழியின்றி மூன்று ஆண்டுகள் கணக்கர் பட்டயப்படிப்பில்(சி.ஏ) சேர்ந்தேன். ஏற்கனவே சி.ஏ படிப்பிற்குக் கர்ண பரம்பரை பழமொழி ஒன்று உண்டு. Jesus never fails என்ற வாக்கியத்துடன் ‘Let him try C.A. inter’ என்பார்கள். நானோ கனவில் மிதப்பவன். இன்றளவும். ஒரு முட்டாள் மாணவனாக எனது ஆடிட்டரிடம் நான் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. எனது apprenticeகளில் உருப்படாமல் போனவன் பிரபாகர் என்று கூட பயிற்சி பெறும் வேலை பழகுபவர்கள் முன்னால் ஏசும்போது தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றும். கடவுள் புண்ணியத்தால் அப்படி ஒரு விபரீத முடிவை நான் எடுக்கவில்லை.

மூன்று வருடமும் utter failure என்றான பின்னரும் எனது இலக்கியத்தின் மீதான காதல் அகலவே இல்லை. ஆனால் இலக்கியம் சோறு போடாதே. திரும்பவும் வேலை தேடும் படலம்.

மதுரையில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸுக்குத் தேவையான எழுத்து ஃபாண்ட் வாங்கி மற்ற அச்சுக் கூடங்களுக்கு விற்பனை செய்யும் கடையில் கணக்கர் வேலை. ஓனர் எங்களவர். இலக்கிய வாசனை அதிகம் உடையவர். வாசகர் வட்டம் சார்பில் மதுரையில் கூட்டங்கள் நிகழ்த்துபவர். ஆனால் முன்கோபி. இலக்கியத்துக்கும் பிசினஸ்ஸுக்கும் சம்பந்தமே இல்லாத முன்கோபம். அங்கும் அவமானங்கள் தொடர்ந்தன. விவரிக்க விரும்பவில்லை.

கணையாழியில் கதைகள், குறுநாவல்கள் வெளிவரத் தொடங்கிய நேரம். ஆறுமாத காலம் அவரிடம் வேளையில் இருந்தேன். அவரிடம்தான் முதல் சம்பளமாக நூற்றைம்பது ரூபாய் பெற்றேன்.

அந்த முதல் சம்பளம் கற்றுத் தந்த பாடம் இலக்கியமும் வாழ்க்கையும் எதிர் எதிர் துருவங்கள் என்பதை. அங்கிருந்து நின்ற பிறகு வெறி வந்து வங்கி மற்றும் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றேன். SBI ஊழியர்கள் நடத்திய பயிற்சித் தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நடுவில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றேன். பயிற்சியை எடுத்து நடத்திய ராமலிங்கம் என்ற அதிகாரி “உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் வேறு ஒருவருக்கும் கிடைக்காது’ என்று வாழ்த்தி அனுப்பினார்.

இதற்கு நடுவில் ஒரு டுடோரியல் சென்டரில் கணக்கு ஆசிரியனாக வேலையில் அமர்ந்தேன். மதுரையில் அப்போது டுடோரியல் சென்டர்கள் அதிகம் இருக்கும்.அங்கும் மாச சம்பளம் நூற்றைம்பது ரூபாய்தான். ஆனால் அதில் இருந்த மனநிறைவு எங்குமே ஏற்பட்டதில்லை. அண்ணாதுரை என்ற மாணவன் ஒருவன்.கணக்கில் தோல்வியடைந்து டுடோரியலில் சேர்ந்தும் ஒப்பேற்ற முடியாத நிலையில் என்னிட்ம் வந்து சேர்ந்தான். நான் நிதானமாக அவனுக்குப் பாடம் எடுத்து அந்த வருட எஸ்.எஸ்.எல்.ஸி தேர்வில் ஜெயிக்க வைத்தேன். அவன் கண்கலங்கி எனக்கு நன்றி கூறியது மறக்கவே முடியாது.

தென்னக ரயில்வேஸ் மற்றும் கர்நாடக வங்கியில் தேர்வாகி அழைப்பு கடிதம் வந்தது. நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அறிவுரையின்படி வங்கியைத் தேர்வு செய்தேன். முதன் முதலாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமை அன்று சம்பளம் பட்டுவாடா பண்ணுவார்கள். எனக்கு ஆறு மாத காலம் பயிற்சிக் காலம் என்பதால் எவ்வித பிடிப்பும் இன்றி சம்பளம் கணக்கில் வரவு வைக்கப்படும். முதல் மாதம் நான் வாங்கிய சம்பளம் 650 ரூபாய். ஓ! எத்தனை தித்திப்பான அனுபவம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இறுதி வரையில் தமிழ் மேல் இருந்த காதல் காரணமாக எனது பணியில்( அதாவது வயிற்றுப்பாட்டுக்கான பணியில் ) நான் அடுத்தடுத்த நிலைகளை எட்டாமல் இறுதி வரையில் கணக்கராகவே இருந்து விட்டேன். இதில் எனக்கு வருத்தம் இல்லை. மகிழ்ச்சியே.