உயில்/க.நா.சு

என் உயிலை எழுதி வைக்க வேண்டிய நாள்
வந்துவிட்டது. சொத்து ஒன்றும் இல்லாவிட்டாலும்
உயில் எழுத வேண்டும் – அது புருஷ லட்சணம்.
என் பெட்டியில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
உபயோகிக்காத எண்ணற்ற வார்த்தைகளை
அகர முதலியில் உள்ளதையும் இல்லாததையும்
எனக்குப் பின் வருகிற கவிகளுக்கு அளித்து
விடுகிறேன். நான் சம்பாதித்த சொற்ப
ஊதியத்தை என்னை எழுத்தாளனாக்கி
பெருமை கொள்ள எண்ணி நம்பிக்கையுடன்
உயிர் நீத்த என் தகப்பனாருக்குத் தந்து
விடுகிறேன். எத்தனையோ ஆசைகள்
ஏக்கங்கள் ஏமாற்றங்கள் என் ஆயுளில்
என்னைப் பின் தொடர்ந்து வந்துள்ளன
அவற்றை உலகுக்குத் தந்துவிடுகிறேன்
என் நல்ல பெயரை ஊரிலுள்ள கேடிகள்
பகிர்ந்து கொள்ளட்டும். காணாத என் கண்களைப்
பார்வையுள்ளவர்கள் பகிர்ந்து கொள்ளட்டும்
என் எதிர்காலத்தை என் மனைவி ராஜிக்கு
அன்பளிக்கிறேன்.

யேட்ஸ் என்கிற
ஆங்கிலக் கவி தன் வாரிசாக
‘நிமிர்ந்து நடப்பவர்களை’ நியமித்தான். என்
சுற்று வட்டாரத்தில், இந்தியாவில் நிமிர்ந்து
நடப்பவர்களையே காண முடியவில்லை. எல்லோரும்
கூனிக்குறுகிக் குனிந்து தரையில் பூமிக்கடியில்
எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் தேடுமிடம் அவர்களுக்குக் கிடைக்கட்டும்
பட்டுவிட்ட கடன்களையெல்லாம் யார் யாரிடம்
சொல்லி வாங்கினேனோ அதையே திரும்பவும்
சொல்லி அவர்களிடமே கடனாகத் திருப்பி
விடுகிறேன். தங்களுக்குத் தாங்களே வரவு
வைத்துக் கொள்ள அவர்களுக்குச் சக்தி
பிறக்கட்டும். சேமித்து வைத்த உபயோகப்
படாத என் அறிவையெல்லாம் அதை
உபோயோகிக்கத் தெரியாதவர்களுக்குத் திரும்பவும்
தந்து விடுகிறேன். அறிவுக் கலைக்களஞ்சியங்களை
நிரப்பட்டும் – வெளியில் வந்து செயல் படாதிருப்பது
நல்லது. எனக்குக் கல்லறையே வேண்டாம்.
அப்படிக் கல்லறை தவிர்க்க முடியாததானால்
அதில் ஒரு பெயரும் பொறிக்கப்பட வேண்டாம்
எனக்கு அறிமுகமான பல தெய்வங்களையெல்லாம்
இருளடர்ந்த பல கோவில்களில் யார் கண்ணிலும்
படாத சிற்பங்களாக நிறுத்தி வைத்து விடுகிறேன்.

நான் இன்னும் எழுதாத நூல்களை என் பிரசுர
கர்த்தர்கள் தாராளமாகப் பிரசுரித்த லாபம்
அடைந்து கணக்கெழுத இன்னொரு
கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளட்டும்.
நான் தந்த வாக்குறுதிகளையெல்லாம்
காற்றுக்கும், நான் செய்த நற்பணித்
தீர்மானங்களையெல்லாம் இனி எதிர்
பார்க்க முடியாத எதிர் காலத்துக்கும்
வாரி அளித்து விடுகிறேன்.எனக்கும்
அரசியல் ஆசைகள் இருப்பதுண்டு
அவற்றை நேருவின் சந்ததியாருக்கு
அளித்து விடுகிறேன். இந்திரன்,
சந்திரன், காற்று, வெளி, நீர்
உள்ளளவும் கொள்ளுப்பேத்தி
எள்ளுப் பேரன் என்று அரசாண்டு
வரட்டும் என்று வாழ்த்துகிறேன்,
எனது எழுதப்பட்ட கவிதைகள் மக்கள்
கண்ணில் படாமல் புத்தகங்களின்
பக்கங்களில் மறைந்து கிடக்கட்டும்
ஆனால் எழுதப்படாத கவிதைகளை
விமர்சகர் போற்றி அலசி ஆனந்தித்துப்
பேராசிரியர்கள் ஆக ஒரு ஊன்றுகோலாக
உபயோகித்துக் கொள்ளட்டும்.
என் வீணாகிப் போன நொடிகள், நாழிகைகள்
நாட்கள், வாரங்கள், மாதங்கள்
ஆண்டுகள் எல்லாம் தேசப் பொதுச்
சொத்தாகி எல்லோருக்கும் உதவட்டும்
உதவட்டும். நான் கட்டாத மாளிகையில்
உயிரோடு பிறக்காதவர்கள், நடைப்பிண
மாக நடப்பவர்கள் குடியேறட்டும்.
மற்ற என் ஜங்கம சொத்துக்களைத்
தட்டு முட்டு சாமான்களை, கந்தல்
துணிகளை, கந்தாடையான் பெயரை
என் பிறக்காத பிள்ளைகளுக்கு
விற்கக் கூட பாத்தியமில்லாமல்
தந்துவிடுகிறேன். என் அபிமான
சிஷ்யர்களுக்கென்று நான்
சிந்திக்காத சிந்தனைகள் எல்லாம்
கிடைக்கின்றன.

வேறு ஒன்றும்
எனது என்று சொல்லச் சாகும் சமயத்தில்
என்னிடம் இருக்கக்கூடாது. காதற்ற
ஊசியும் உடன் வராது காண் என்று
சொன்னவன் வாக்கு என் விஷயத்தில்
பலிக்கட்டும். என் பெயரையும் நான்
துறந்து விடுகிறேன். என் பெயரை
யாருக்கு இஷ்டமோ அவர்கள்
எடுத்துக்கொள்ளட்டும்.