அக்கா சூழ் உலகம்/செ.புனிதஜோதி

அக்கா அவனை
உதட்டுச் சிரிப்பில்
முடிந்திருப்பாள்
ஏன் என்று கேட்டாள்
அதற்கும் சிரிப்பாள்..

சிலரைக் கடுத்த
முகத்திலிருந்து
கழட்டி விட்டுக்கொண்டிருப்பாள்…
ஏன் என்று கேட்டாள்
அதற்கும் கடுகடுப்பாள்

அக்காவின் முக அபிநயங்களை
உற்றுநோக்கி
ஊர்ந்தே
கரம்பற்றிச்செல்லும்
தம்பிகள்,தங்கைகள்..

அவள் வாசல் தொளிப்பதில்
தொடங்கி
கோயில்,பள்ளி,தோழிவீடு
அனைத்திலும் இவர்கள் தான்
காவல்காரர்கள்..

அக்காவின் மிரட்டலுக்கு
பயந்ததை விட
அக்காவின் கெஞ்சலுக்கும்,அழுகைக்கும்
கிறங்கியே
பாதி விசயங்களை
மலை முழுங்கியாய் முழுங்கியவர்கள்..

அம்மாவை விட
அக்காவின் அருகாமையில்
உறங்கிப்போனதுதான்
அதிக நேரம்..

பாட்டிக்கு பிறகு
அக்காதான்
கதைசொல்லியாய்
மாறிருந்தாள்

அம்மா இருக்கும்போதே
தம்பி,தங்கைகளுக்கு
அம்மாவாக மாறியதும்
அவள்தான்

ஒவ்வொருவீட்டிலும்
தம்பி,தங்கைகளுக்கு
அக்கா சூழ்
உலகமாய்
மாறியிருந்தாள்.
புகுந்தவீட்டை
அவள் காணும்வரையிலும்.

2 Comments on “அக்கா சூழ் உலகம்/செ.புனிதஜோதி”

Comments are closed.