
மழைத் துளிகள் கூட்டாகி
திரண்டு கீழிறங்குகிறது
அவைகள் துளித்த போதிருந்த
தெருக்குழாய் வசைக்கதைகள்
கோணல்மானலாக மாறிக்
கூட்டாகத் துவங்கியது
அதன் துளிகள் முன்னுக்குப் பின் மாறி
இத்தெருக்காரியின் பெயர்
அடுத்த தெருக்காரனின் பெயரென
திரட்சியில் மாட்டிக் கொண்டது
அதனடி ஓயாது ஒலியெழுப்பிக்
கொண்டிருந்த வெள்ளைக்கோழி
அங்கு ஒதுங்கியிருந்த கிழவனாகியிருந்தது
அம்மழைத் திரட்டு தரையில்
விழுந்து சிதறிய சமயம்
சிறு விசும்பல்கள் மேலெழ
அதை மறுப்பதாய்
சில தென்னம்பூக்கள்
பரவிக் கிடந்தன.
