கவிஞர் பிரமிள் சமூகவியல் கட்டுரை:

முகநூலில் பிரமிள் நூலகம்

         டாக்டர் அதிகாரம் 

      ஸ்ரீலங்காவின் சிங்கள எதிர்ப்புக்குரல்:

 ஜே.கிருஷ்ணமூர்த்தியால் 

ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான், இவரின் டாக்டர் பட்டம். ஸ்ரீலங்காவில் பௌத்த சிங்கள இனவாதத்துக்கு எதிராக, சிங்களவர்களுள் இருந்து எழுந்த சில குரல்களுள், கடைசிவரை தீவிரமாக ஓங்கி ஒலித்த குரல் டாக்டர் அதிகாரத்துடையது. அரசியல்களத்தில், சரத் முத்தட்டு வேகம என்ற இன்னொரு சிங்களர், கம்யூனிஸக்கோணத்தைத் தழுவி, அங்கிருந்து ஸ்ரீலங்காவின் பௌத்த சிங்கள இனவாதத்தை எதிர்த்தவர். ஆனால், டாக்டர் அதிகாரத்தின் குரல் இதைவிட ஆழமான பரிகாரங்களை வேண்டி, இன்னும் தீவிரமாக ஒலித்த ஒன்றாகும். சமீபத்தில் சரத் காலமாகிவிட்டார். டாக்டர் அதிகாரம், நல்லமுதுமையில், துயின்றுகொண்டிருக்கும்போது துயிலைவிட ஆழ்ந்த துயிலினுள் சென்றுவிட்டார். இது, ஜே.கி.யின் மறைவுக்குச் சில மாதங்களுக்கு முன்பு சம்பவித்திருக்கிறது. டாக்டர் அதிகாரத்தினது எதிர்ப்புக்குரலிலிருந்து, இங்கே சில வரிகள்:

 "வசிஷ்ட (பாளியில் 'வசெட்ட') கோத்ர பிராமணருக்கும் பரத்வாஜ் கோத்ர பிராமணருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு இனவெறிச் சண்டையின் விளைவாக, புத்தர்பிரான் 'வாசெட்டசுத்த' என்ற போதனையைப் பிரவசனித்தார். இனவெறியின் அபத்தத்தையும் கேடுகளையும் இது விளக்குவதனால், ஸ்ரீலங்காவில் புத்த பிக்ஷுக்கள் இதைப் போதிப்பதில்லை. மாறாக ஸ்ரீலங்காவின் பௌத்த சரித்திர இதிகாச நூலான மகாவம்சவில், தமிழர்களை துட்ட கைமுனு என்ற சிங்கள அரசன் கொன்றுகுவித்ததாகக் கூறப்படும் ஒரு கதையைத்தான், அதுவும் ஒரு வீரச்செயலைப் பற்றிய கதை என்று, இந்த பிக்ஷுக்கள் போதிக்கிறார்கள். மகாவம்ச நூலை, இதற்காக ஒரேடியாக எரித்துச் சாம்பலாக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்."

 இது, பௌத்த சிங்கள இனவாதத்தின் ஆணிவேரையே களைந்தெறிய வேண்டும் என்றெழுந்த குரலாகும். தமது இனத்தினரின் இனவெறியை, அஞ்சாமல் பகிரங்கத்தில் கடுமையாக விமர்சித்த டாக்டர் அதிகாரத்தின் மறைவுக்கு, காலம் கடந்தேனும் நமது அஞ்சலியைச் செலுத்துவோம்.

     லயம், ஜூலை - செப்டம்பர். 1986.