விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 15வதுகூட்டம்/அழகியசிங்கர்

ஆகஸ்ட் மாதம் சாரு நிவேதிதாவை பேசக் கூப்பிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். நான் நினைத்த மாதிரி சாரு போனில் சம்பத் என்ற எழுத்தாளரைப் பற்றி கேட்பதற்கு வந்தார். நான் உடனே, ‘நீங்கள் ஆகஸ்ட் மாதம் பேச வேண்டும்,’ என்றேன்.

“நான் பேசினால் பிரச்சினை வந்துவிடும்.. அதனால் நான் கூட்டத்திலேயே பேசுவதில்லை..அமைதியா எழுதிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன்,” என்றார் சாரு.

“விருட்சம் கூட்டத்தில் அதுமாதிரியான கலாட்டா நடக்க வாய்ப்பே இல்லை,” என்றேன்.

சாரு பேச சம்மதித்தார். எனக்கும். கோவிந்தராஜனுக்கும் உண்மையில் அவர் பேச வருகிறார் என்பதில் மகிழ்ச்சி.
நான் விருட்சம் கூட்டத்தை 1988ஆம் ஆண்டிலிருந்து விட்டு விட்டு நடத்தியிருக்கிறேன். முன்பே சாரு பேசியிருக்கிறார். அவர் எப்போதும் தன் மனதில் படுவதை தைரியமாகச் சொல்வார்.

பலருக்கு அவர் மீது கோபம் வந்துவிடும். அவர் நினைத்திருந்தால் இந்த எழுத்து உலகத்தில் அவர் நிறையாவே சம்பாதித்திருக்கலாம். சினிமாக்காரர்களை கொஞ்சம் ஆஹா ஓஹோ என்று சொன்னாலே அவர் எங்கயோ போயிருக்கலாம். ஆனால் அவர் அதையெல்லாம் செய்யவில்லை. அல்லது செய்யத் தெரியவில்லை.

விட்டுவிட்டு விருட்சம் கூட்டம் நடத்தினாலும், கோவிந்தராஜனுடன் சேர்ந்து இது 15வது கூட்டம். நாங்கள் இதுவரை நடத்தியக் கூட்டத்தில் சாருநிவேதிதா கூட்டம்தான் கூட்டம் அதிகம்.

பொதுவாக விருட்சம் கூட்டம் பற்றிய அறிவிப்பை தமிழ் ஹிந்துவும், தினமணியும்தான் வெளிப்படுத்தும். ஆனால் சாரு கூட்டத்திற்கு அதுமாதிரி விளம்பரம் கிடைக்கவில்லை. கூட்டம் வருமா என்று எனக்குள் பக் பக்கென்றிருந்தது.

நான் எப்போதும் விளையாட்டாக கோவிந்தராஜனிடம் சொல்வேன். ‘யாரும் வராவிட்டால் நாம இரண்டு பேர் இருக்கிறோம். கூடவே பேசுபவர் எப்படியும் வந்துவிடுவார்…மூன்று பேர் போதும் கூட்டத்திற்கு,’என்று.

ஆனால் சாரு கூட்டத்திற்கு 70 பேர்களுக்கு மேல் வந்தார்கள். எல்லோரும் அவருடைய ரசிகர்கள். இன்னும் சிலர் அவர் என்னதான் பேசப் போகிறார் என்று கேட்பதற்கு வந்தார்கள்.

அவர் பேச ஆரம்பிக்கும் முன் நானே அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆர்வமாகிவிட்டேன்.

அவர் நண்பர்கள் அவர் பேசியதை அப்படியே விடியோவில் பதிவு செய்திருக்கிறார்கள். சாருவின் ஆன் லைனில் போனால் யாரும் பார்க்கலாம்.

நானும் ஆடியோவில் அவர் பேசியதை பதிவு செய்திருக்கிறேன். நான் விருட்சம் கூட்டம ஆரம்பித்த நாளிலிருந்து ஆடியோ பதிவு செய்வது வழக்கம். முன்பெல்லாம் பல இலக்கியக் கூட்டங்களை காசெட்டில் பதிவு செய்திருக்கிறேன்.
சாருநிவேதிதா கிட்டத்தட்ட 1 மணிநேரம் பேசினார். பின் கேள்வி பதில் கூட்டம் சிறப்பாக நடந்தது.