அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல்/ஆர்.வெங்கடேஷ்

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல் இன்று பேசிய பேச்சு, வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
பணவீக்கத்தைக் குறைக்காமல் விடமாட்டேன் (must keep at it until the job is done) என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேசிய பேச்சு இது.
இதனால், குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ‘கொஞ்சம் வலி’ இருக்கத்தான் செய்யும். ஆனால், விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இந்த வலி இன்னும் அதிகமாகிவிடும் என்று அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மை.
இவ்வளவு வெறித்தனத்தோடு அமெரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியே தீருவேன் என்று ஒரு மத்திய வங்கித் தலைவர் பேசி, இப்போது தான் பார்க்கிறேன்.
இவருடைய பேச்சை முழுமையாக கேளுங்கள். யதார்த்தம் உறைக்கும்.
அதாவது, மக்களுடைய வாழ்க்கையை பணவீக்கம் பதம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அவர்கள் சிரமப்படுகிறார்கள். திண்டாடுகிறார்கள் என்பது தான் ஜெரோம் பவுல் வார்த்தைகளுக்குப் பின்னேயுள்ள வலி.
இதனைச் சீராக்க, பணவீக்கத்தை எப்பாடு பட்டேனும் கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். அதைச் செய்தே தீருவேன்.
இவருடைய தீவிர முனைப்பு பல பின்விளைவுகளை ஏற்படுத்தப் போவது நிச்சயம். அமெரிக்கா ஏற்கெனவே ரிசெஷனுக்குள் போய்விட்டது என்று கணிப்பவர்கள் உள்ளனர். வட்டி விகிதங்களை உயர்த்த, உயர்த்த, அந்த நாடு ரிசெஷனுக்குள் போகப் போவது நிச்சயம்.
ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஜெரோன் பவுல் செய்வது ஒருவித அறுவை சிகிச்சை. இதன் இறுதியில், பொருளாதாரம் என்ற நோயாளி மீண்டுவிட வேண்டும். ஆனால், அதற்குள் அனுபவிக்க வேண்டிய வலியும் வேதனையும் கொஞ்சம் நஞ்சமல்ல.
இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலக நாடுகளையும் பதம் பார்க்கப் போவது நிச்சயம்.