எஸ்.சண்முகம் கவிதை

சிறிது நேராமானதை உணர்ந்ததும்
காரணமின்றி மூடியிருந்த விழிகளைத் திறந்தேன்
இவ்விடம் முதல்மாடி பால்கனிதான்
அமர்ந்துள்ள நாற்காலியின் கால்களுக்கு இடையில்
காலையொளி ஊர்ந்துள்ளது

எதிரே தகர்க்கப்பட்ட வீட்டின் சிதிலக் குவியல்
தளமும் சுவர்களும் சீரற்ற வடிவங்களாகிவிட்டன அவ்வீட்டின் உட்சுவரின் செங்கற்களின்
வண்ணம் துண்டு துண்டாகிக் கிடக்கின்றன
மாலை நேரத்தில்
வெளிப்புற மதிற்சுவர்மேல் முழங்ககையைச் சாய்ந்து கொண்டு

காலையில் பணிக்குச் சென்றுவிட்டு
வீட்டிற்கு திரும்பி வரும் பெண்கள் சிலரிடம்
இப்போதுதான் வருகிறீர்களா குழந்தை காத்திருக்கும் சீக்கிரம் போங்க என்று
முகத்தில் சிறுஅசைவின்றி சொல்லும் பெரியவர்
தனது மரத்திலான பெயர்பலகையை மறந்துவிட்டிருக்கிறார்

அடுக்குமாடி குடியிருப்பு வரப்போவதாக
தெருமுனை மலிகைக் கடைக்காரர்
தனது வாடிகையாளர்களில் ஒருவனான
என்னிடம் சொன்னார்

ஆனால் அவ்வீட்டை விற்றார்களா அல்லது
கூட்டு முயற்சியில் கட்டப் போகிறார்களா என்றேன்
கடைக்காரர் பெரியவர் திரும்பவும் குடிவந்தால் கூட்டு முயற்சி
இல்லையெனில் முழுவதுமாக கைமாறிவிட்டது என்று அர்த்தமென்றார்

கடையில் திரும்பி வருகையில்
உடைக்கப்பட்ட வீட்டின் குவியலின் மேல் கிடந்த
மரத்திலான பெரியவரின் பெயர்ப் பலகையை
எடுத்துக் கொண்டேன்

அப்பாவின் பெயர் ஜி. சுப்பிரமணியம் என்று செதுக்கப்பட்ட மரத்தினாலான பெயர் பலகையுடன்
இதையும் பாதுகாத்து வைக்க
அதிக இடம் பிடிக்காது
அவருக்காக ஓரிரு ஆண்டுகளானாலும் காத்திருக்கலாம்

வரவிருக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடிவருவாரெனில்
அவரது பெயர் பலகையை அவரிடமே திருப்பித் தரலாம்.

-எஸ். சண்முகம் –
( எண் : 063 )