படிக்காசும் சீதக்காதியும்/வளவ. துரையன்

படிக்காசுப் புலவர்என்ற புலவர் பெயரைச் சொன்னாலே
காயல்பட்டினத்து வள்ளல் சீதக்காதி நினைவு வந்துவிடும்.
அந்த அளவுக்குப் படிக்காசுப் புலவர் சீதக்காதி வள்ளலிடம்
கொடைகள் பெற்று அனுபவித்தவர்வள்ளலைப் பற்றிப்
பின்வரும் பாடலைப் பாடியுள்ளார்:
“ஈயாத புல்லர் இருந்தென்ன? போயென்ன? எட்டிமரம்
காயா திருந்தென்ன? காய்த்துப் பலனென்ன? கைவிரித்துப்
போயா சகமென் றுரைப்போர்க்குச் செம்பொன் பிடிப்பிடியாய்
ஓயாமல் ஈபவன் வேள்சீதக் காதி ஒருவனுமே!”
ஈயாத கஞ்சர்கள்இருந்தால் என்ன? போனால் என்ன? எட்டிமரம்
காய்த்தாலும் காய்க்காவிட்டாலும் ஒரு பயனுமில்லை. கைந்நீட்டி
யாசகம் என்று கேட்பவர்க்குப் பிடிப்பிடியாய் செம்பொன்னைக்
கொடுப்பவர் வள்ளல் சீதக்காதி. இதில் அவர் ஒப்பற்றவர்.

ஒருமுறை படிக்காசுப்புலவர் வள்ளலைத்தேடிக் காயல்பட்டினத்
துக்கு வந்த பொழுது அவர் இறந்துவிட்டதாகத் தகவல்
தெரிவித்தனர். அப்பொழுது மனம் நொந்து பாடியது:
“தேட்டாளன் காயல் துரைசீதக் காதி சிறந்தவச்ர
நாட்டான்புகழ்க்கம்பம் நாட்டிவைத் தான்தமிழ் நாவலரை
ஓட்டாண்டி யாக்கி அவர்கள்தம் வாயில் ஒருபிடிமண்
போட்டான் அவனும் ஒளித்தான்சமாதிக் குழிபுகுந்தே!
தமிழ் நாவலரை ஓட்டாண்டி யாக்கி அவர்கள் வாயில்
ஒருபிடி மண்ணைப் போட்டுவிட்டு அவனும் சமாதிக்
குழிபுகுந்து மறைந்துவிட்டான் எனப் புலம்பிப்
பாடினார்.