ஏமாளி/க.நா.சு

மிகவும் புழுக்கமான ஒரு நடுப்பகலில்
சட்டச்சட சட்டச்சட வென்று
நாலு தூற்றல் விழுந்தவுடன் ஆஹா
ஆனந்தம், புழுக்கம் தீர்ந்தது என்று
சொல்லிக் கொண்டிருக்கும் போதே
தூற்றல் நிற்கப் புழுக்கம் அதிகரிக்க
ஏமாற்றமடைந்து மனசு உலகில் உள்ள
ஏமாளிகளைக் கணக்கெடுக்கிறது.
மெரினாவில் அன்று சுகமாகக் காற்று வாங்கிக்
கொண்டே ஓரணாவிற்குக் கடலை வாங்கித்
தின்கிறபோது பொட்டலத்தில் – அன்று
ஓரணாவும் உண்டு, ஓரணாவுக்குக்
கடலை வாங்கவும் முடியும். மெரினாவில்
சுகமான காற்று அடித்ததும் உண்டு –
கல்லையும் சேர்த்துக் கடலையாகக் கட்டி
யிருப்பான் – கடைசிக் கடலை சொத்தையாகி
வாயைக் கெடுக்க, குடிக்கவோ, வாயலம்பவோ
தண்ணீர் இன்றி ஏமாளியானதுண்டு.
மற்றுமொருநாள் கையில் காசேயின்றி ஜோதி
நிலையைத்தான் தரப் போவதாகச் சொன்ன
ஐம்பது ரூபாயை எதிர்பார்த்து நாக்கில்
ஜலம் ஊற, சில்லறையைத் திரட்டி
எடுத்து மைலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணிக்கு
ரிக்ஷாவில் வந்து, ஜெயராமன் கைவிரிக்கக்
கிடைத்த மூன்று ரூபாயை வாங்கிக்கொண்டு
நண்பர்கள் நால்வருக்குக் காபி வாங்கிக்
கொடுத்துவிட்டு, கிளம்பிய மேனியாக மீண்டும்
கையில் காசில்லாமல் மைலாப்பூர் திரும்பி
ஏமாளிப் பட்டத்துடன் திருப்தி அடைந்து
காபியும் நன்றாக இல்லை என்று சொல்லித்
திருப்திப் பட்டுக் கொண்டதுண்டு.
நன்றாக வரும், நன்றாக வரும் என்று நம்பிக்கை
யுடன் வரிவரியாக, வாக்கியம்
வாக்கியமாக, பாரா பாராவாக, அத்தியாயம்
அத்தியாயமாக எழுதி விட்டுத் திரும்பிப்
பார்க்கும்போது, ஆறு மாசம் குளிக்காமல்
சாப்பிடாமல், ஈஸிசேர் விட்டு
நகராமல் எழுதியதெல்லாம் ‘சே இவ்வளவு
தானா!’ என்று எண்ண வைக்கும் போது
ஏமாளிப்பட்டம் நமக்கு மிகமிகப்
பொருத்தமானதாக அமைந்து விடுகிறது.
மாறாக எழுதியது நன்றாக இருக்கிறது இதை
வாசிப்பவர்கள் எல்லோரும் என்
மேதையைப் பாராட்டி எனக்குச் சகல
இலக்கிய மரியாதைகளையும் செய்யப்
போகிறார்கள் என்று எண்ணி இறுமாந்து
இருக்கும்போது படிக்கவும் பாராட்டவும்
ஒன்றிரண்டு பேர்வழிகளைத் தவிர வேறு
யாரும் இல்லை என்று காணும் போது
ஏற்படும் ஏமாற்றம் இருக்கிறதே அது
மிகப்பெரிய ஏமாற்றம் தான்!
எதற்காக இப்படி உடலையும், உள்ளத்தையும்
வருத்தி எழுதிக் கொண்டிருக்கிறோம்
வேறு ஏதாவது செய்யப் போகலாம் என்று
தோன்றினாலும் வேறு எதுவும் செய்ய இயலாது.
கோவில் வலம் வந்த வரங்களை வேண்டிக்
கேட்பதும், மந்திரங்களை முணுமுணுத்து
நம்மால் ஆனதைச் செய்து விட்டோம் என்று
இருப்பதுவும், கடவுள் கொடுப்பான் கொடுப்பான்
என்று பண நெருக்கடி சமயத்தில் ஓய்ந்து விடுவதும்
மனைவியின் ஆசைகளை – வீடு வாங்குவதையும்
பட்டுப் புடவைகளையும், கார் சவாரியையும், கலர்
டி.வி.யையும் இந்த வருடம் சாதித்து
விடுகிறேன் என்று சொல்லி வருவதும், ராஜியை
ஏமாற்றுவதுடன் நானும் ஏமாளியாகிப்
போவதும் நடைபெற்று வருகிற காரியமாகத்
தொடர்ந்து வருகிறது – என்ன செய்ய!