
தமிழன் நாகரீகம், வேட்டி விளம்பரம், நடிகர்கள் விளம்பர வேட்டியுடன் வயலில் நடப்பதைப் பற்றியோ, யானைக்கு ‘சல்யூட்’ அடிப்பதைப் பற்றியோ, வேட்டி கரைக்கு ‘ மாட்சிங்’ சட்டை அணிந்து தீபாவளி கொண்டாடும் ஆண்கள் பற்றிய பதிவோ என நினைப்பவர்கள், தயவு செய்து தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும்! இது வேறு ‘வேட்டி’ பற்றியது!
இரண்டு நாட்கள் முன்பு, கொரியரில் ஒரு சிறிய புத்தகம் வந்தது. நண்பர் லேனா அனுப்பியிருந்தார். 1975 – 76 ல் முதற்பதிப்பு கண்ட, கி.ராஜநாராயணனின் ‘வேட்டி’ என்ற தொகுப்பு – அன்னம் (பி) லிட்., மதுரைக் கிளை வெளியீடு – விலை 16-00 ரூபாய்! (மேலே அன்னம் 107 என்றிருந்தது – வரிசை எண்ணாக இருக்கலாம்!). அதில் கடிதங்கள் (அன்னம் பதிப்பக கெளரவ ஆசிரியர் மீராவுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் – அன்றைய பதிப்பாளர், எழுத்தாளர் இடையே இருந்த பரஸ்பரம் நட்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சுவாரஸ்யமான கடிதங்கள்), கதைகள் (8 சிறு கதைகள், ஒரு நெடுங்கதை), கட்டுரைகள் (4 கட்டுரைகள் – ‘கதைக்கு ஒரு கரு’ படு சுவாரஸ்யமான கட்டுரை!) என கி.ரா. வின் வட்டார வழக்கில் படைப்புகள் உள்ளன. அன்றைய பதிப்பு, எழுத்துரு, கட்டமைப்பு எல்லாம் அருமையாக உள்ளன.
2020 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் இதே தொகுப்பை வாங்கியுள்ளேன் – அன்னம், தஞ்சாவூர் கிளை 2013 ஆம் ஆண்டு பதிப்பு! விலை 80 ரூபாய்! புத்தக வடிவமைப்பு, எழுத்துரு, அட்டை எல்லாவற்றிலும் என்னவொரு முன்னேற்றம்! வியப்பாக இருக்கிறது!
கிரவுன் சைசில் 138 பக்கப் புத்தகமாக இருந்தது, ‘டெமி’ சைசில் 120 பக்கங்களில் கி.ரா. வின் போட்டோவுடன் அழகாக வந்துள்ளது. வாசிக்கச் சொல்லும் வடிவமைப்பு! புத்தகப் பதிப்பில் வெகுதூரம் வந்துவிட்டோம் – வாசிப்பில்?
‘பொருளடக்கம்’ என்ற ஒரு பக்கம் இல்லை – பிரசுரித்த பத்திரிகைகளுக்கு ‘நன்றி’ முன்னால் வந்துவிட்டது. பின்னட்டையில் கி.ரா.வின் கட்டுரையிலிருந்து சில வரிகள்!
கூட்டுப்புழுக்கள், வண்ணத்துப் பூச்சிகளாய் மாறி, சிறகடித்துப் பறக்கின்றன!
வாசிக்க வேண்டிய தொகுப்பு. சில முத்துக்கள் புத்தகத்திலிருந்து (புத்தக வடிவம்தான் மாறியிருக்கிறது – கி.ரா.வின் எழுத்தின் மணம் அப்படியேதான், கரிசல் காட்டு வாசத்தோடு மனதை வருடுகிறது!)
“கடிதம் எழுதும் சுகானுபவம் நான் கதை எழுதும்போது எனக்குக் கிடைத்ததில்லை. கதை எழுத உட்கார்ந்தால் அது ஒரு பிரசவ வேதனை. எழுதும்போது நம்பிக்கை கிடையாது. எழுதி முடித்த பின்னோ திருப்தி ஏற்படவே செய்யாது.”
சமர்ப்பணம் – எனது அருமை நண்பன் அமரன் கு.அழகிரிசாமிக்கு.
“கையெழுத்துப் பிரதிகளில் படித்து எனக்கு ஏற்படும் திருப்தி என்னுடைய கதைகள் அச்சேறியபின் படிக்கும்போது எனக்கு ஏற்படுவதில்லை. அதிலிருந்து ‘ஏதோ ஒன்று’ போய் விட்டது போலத் தோன்றும்”.
“எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக்கொண்டும் தங்கள் தொழிலைக் கற்றுக்கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக்கொடுக்க விரும்புவதும் இல்லை”
வாசிக்கலாம்!
