விநாயகர் வந்துவிட்டார்/அனங்கன்

ஆண்டுதோறும் வருகிறார்…
பொருளாதார நிலைக்கு ஏற்ப சிறதும்
பெரிதுமாய்…

வரும்போதெல்லாம் கவலையாய்
இருக்கிறது கலவரம் வருமோ என…
நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல்
கெடுமென ஒரு கும்பல் வழக்கம்போல்
கத்தி ஓயும்.

விநாயகர் தமிழ்க்கடவுள் இல்லையென…
அவர் வந்தவிதம்
புலனங்களில் கதையாய்க் கடந்துபோகும்.

சிறுவியாபாரிகள்…
குயவர்கள்
வாழ்வாதாரத்துக்கு ஒருவிழா…
கொண்டாடிவிட்டுப்போகலாமென
ஒருபக்கம் பகுத்தறிவு நியாயம்
பேசும்…

இடிந்துபோன கோவில்களில் உள்ள
பிள்ளையார்களுக்கு அன்று நல்லதுணி …
படையல் கிடக்கும்.

விற்காமல் கிடைக்கும் பிள்ளையாரைப் பார்த்தபடி கவலையில் கிடக்கும்குயவனின்
கவலையை அவரால் பார்த்தபடிதான் இருக்கமுடியும்.

அவருக்கு கூட ஒருகவலை உண்டு…\
கரைக்கும் நாளில்
தன்மூஞ்சியிலும்…
வயிற்றிலும்
ஏறி மிதிப்பார்களென…
அதற்காக ஆண்டுதோறும்
வராமல் இருக்கமுடியுமா…?