நிவேதனம் /கணேஷ்ராம்

மேல் தட்டைத்
தொட வேண்டாம்
அதில் நடுங்கும் மீந்த சில…

கீழிரண்டு தட்டுகளில்
திணறும் காய் கறிகள் பல..

நாலு நாள் மாவும்
நாள்கணக்கு மறந்த
நாலுவகை மெதுபானம்
மூன்று நாள் தயிர் நாறும்
மூடிவைத்த ஹாட்பேகில்
நாளைக்கு விலையேறும் மல்லிகையும்
இன்னபிற மலர்க்கூட்டம்…

அசைவம் ஆகாது..
ஆனாலும் சாக்லேட்டு
விதவிதமாய்
கண்ணன் விளையாட்டுச்
சீடை முறுக்கு
இது போக
கொழக்கட்டை
மாவெடுத்து
குளிர் நடுங்கத்
துருவிய தேங்காயுடன்
பெட்டியில் நல் லடக்கம்

நாளைக்கு செவ்வாய்
நாள்கிழமை பார்க்க வேண்டும்…
சாயங்காலம் ஆகாது
பணம் வெளியில் போகாது…

விக்கினம் களைபவனுக்கு
விவகாரமாய் நாள் பார்த்து

முந்திரிக்கொட்டை போல
மூன்று நாள் முன்னாலே

முக்காடு போட்டு வந்தார்
பூஜைக்குள்
குடிபுகுந்தார்..

நாலாம்பிறை
வரவே
நாளெல்லாம்
காத்திருப்பார்
நல்ல பல
காரம் ஏங்கி

பழம்பூ
பழம்பால்
பழமாவு
பழம் பழசாய்
பட்சணங்கள்
அணிவகுக்க

பூஜை மணியடித்து
முதிர் தேங்காய்
மோதி உடைத்து
பின் மறக்காமல்
இளநீர் அதைக்
குடிக்காமல்
கீழேவிட
சப்தமிட்டு
ஆணையிட்டார்
கேளுங்கள்
நிவேதனமாம்..