
திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அழியாவண்ணம் –
அழகி என்று
அவளை அறிவ தெப்படி?
அவள் அழகி –
ஆடை உடுத்தி
அழகு படுத்தி
அலங்கரித்து
மணமேடை யேற்றிக்
கண்டின் புற்றது
நாங்கள்.
அவள் அழகைத்
திரையிட்டு மூடுவானேன்?
அழகு கண்டு
கண் மங்காதிருக்க –
அவன் அதிர்ஷ்டங் கண்டு
பிறர் பொங்காதிருக்க.
பின் அவளழகை
உரக்கப் பாடுவானேன்?
பாட்டை நம்புவார் யார்?
வெறும் சொல்லடுக் கென்று
எண்ணி எமாறுவார்
யாருமே என்று
அவளழகைப் பாடுவோம்.
நாரியர் புடைசூழ
மேக மண்டலத்தில்
மின்னென நடக்கிறாள்.
மாலை வானத்திலே
மின்னும் சுடரெனவே
மணவறை சேருவாள் –
அவன் கூடுவான்
அழகுடன்
அழகு பொருந்த.
