நட்சத்திரம் நகர்கிறது/முபீன் சாதிகா

எக்ஸ்பிரஸ் அவென்யுவில் கொரானாவுக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் திரையரங்கத்திற்கு அண்ணனுடன் சென்று நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் பார்க்க முடிந்தது.

காதலைப் பற்றிய படம். காதல் என்பது ஒரு நிமிடம் தோன்றி மறையும் எரி நட்சத்திரம் போல் இருப்பது என படம் விளக்கிவிடுகிறது. அந்த நட்சத்திரம் நகர்ந்துவிடுவதைப் போல் காதலும் நகர்ந்துவிடுகிறது. அந்தக் கண நேர உணர்வுக்குள் என்னென்ன வந்துவிடுகிறது என ஆராய்கிறது படம். சாதி, அம்மா அப்பா பாசம், உடைமையாக்குதல், என எல்லாம் புகுந்து கொண்டு காதலைக் காணாமல் ஆக்குவதை நாடகீயப் பொருளுடன் கலந்து கூறியிருக்கிறது படம்.

தொடர்ந்து சாதிய மேலாண்மை குறித்த படங்கள் வந்து அதை இனிமேல் படங்களில் காட்ட முடியாத அளவு கூறியது கூறல் ஆகிவிட்டது. அதைப் பற்றிப் பேசவேண்டும் ஆனால் அதே வகைமையில் அல்ல. இதை வெற்றிகரமாகக் காட்டியிருக்கிறது படம்.

சாதிய மேலாண்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக் காதலிக்கிறார்கள். அந்தக் காதலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் காதலும் ஒரே வகையாகத்தான் உள்ளது..

இரு வேறு சாதியைச் சார்ந்த ஆணும் பெண்ணும் காதலிக்கக்கூடாது மீறினால் ஆணவப்படு கொலை செய்யப்படுவார்கள் என்ற செய்தியைச் சொல்ல ஒரு நாடகம் போடுகிறார்கள். அதைக் குலைக்கிறது மேல்சாதி அரசு அதிகார வர்க்கம். இவை எல்லாம் வெறும் நாடகமாக மட்டுமே திரையில் நடக்கிறது. அது குறியீடாக, பகடியாக மட்டுமே காட்டி மேல் சாதி உணர்வுகளை இன்னும் வைத்திருந்தால் அது எள்ளி நகையாடுவதற்கு மட்டுமே உரியது என அழுத்தமாகச் சொல்லிவிட்டது படம்.

மேல் சாதி உணர்விலிருந்து மாறிவிட்டதாக அர்ஜுன் எனும் பாத்திரம் சொன்ன பிறகுதான் அதைக் காட்ட படம் முனைந்திருக்கிறது எனப் பதிவாவது போல் இருக்கிறது. இது போன்ற மிகச்சிறிய குறைகள்.

கற்பு குறித்த எந்த அலட்டலும் இல்லாமல் இருப்பது, அதீத உணர்ச்சிவயப்படுதலைத் தவிர்த்திருப்பது என படம் காட்டும் பொருள்கள் அநேகம். தமிழ் சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்டப்படங்களில் இது மிகவும் வேறுபட்ட பல அடுக்குகளைக் கொண்ட படம்.

இது வரைக் கேட்டிராத புதிய ஒலிகளுடன் சங்கப் பாடல் வரிகளில் வேறுபட்ட இசைக் கோர்வை. மொத்தத்தில் புதிய திரை அனுபவமாக இருந்தது.

2 Comments on “நட்சத்திரம் நகர்கிறது/முபீன் சாதிகா”

Comments are closed.