80 வயது இளைஞர் திரு ஆர்.வி.ராஜன்!/ஜெ.பாஸ்கரன்.

Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்த முகத்துடன் எல்லோருடனும் பேசிக்கொண்டிருப்பார். பிறர் எழுதியது, தான் எழுதுவது, தனது அடுத்த முயற்சி என எப்போதும் ஒரு ‘பாசிடிவ்’ வைப்ரேஷனுடன், பிறரை ஊக்குவிக்கும் முறையிலேயே பேசிக்கொண்டிருப்பார். இந்தப் பண்பும், மகிழ்ச்சியும் அவரைப் பார்த்தவுடன் நம்மைத் தொற்றிக்கொள்ளும்!

விளம்பரத்துறை விற்பன்னர், பெண்களின் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிக்கும் பிரபா ராஜன் அறக்கட்டளை நிறுவனர், சென்னையின் பல ஆங்கில தினசரிகள், வார, மாதப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர், சிறுகதைகள், நாவல் ஆசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர். தன் எழுத்தாள மனைவியின் நினைவாக, பெண்களின் கலையார்வங்களை ஊக்குவிக்கும் வகையில் “Prabha Rajan Talent Foundation” டிரஸ்டின் மூலம், வருடந்தோறும் சிறுகதை, குறுநாவல் போட்டிகள், குறும்படங்கள் தயாரிப்பு என இயங்கி வருபவர்.

அவரது எண்பதாவது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடினார் – தனது ரோட்டரி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் காலையில் அவருடன் நடைப் பயிற்சி செய்யும் நண்பர்கள், பத்திரிகை, இலக்கிய, விளம்பரத்துறை நண்பர்கள் ஆகியோர்களுக்கான ஒரு ‘get together’ விழாவாகக் கொண்டாடினார். விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக அவரது 12 ஆவது புத்தகத்தை (12 புத்தகங்கள், 13 வருடங்களில்!) வெளியிட்டார். “Bright stars in the Chennai sky” (அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு) புத்தகம் சென்னையில் எழுச்சியூட்டும் நிறுவனங்கள் பற்றியும், பிறருக்கு உதாரணமாகத் தன் வாழ்க்கையில் உயர்ந்துள்ள சில மனிதர்களைப் பற்றியுமான கட்டுரைகளின் தொகுப்பு ! ஆர்,தேசிகன், ஆர்.டி சாரி, சாருகேசி, கோபுலு, கிரிஜா ராகவன், தமிழ்வாணன் சகோதரர்கள், ஆள்வார் பாதைப் புத்தகக் கடை, அண்ணா செண்டினரி லைப்ரரி, அம்மா நானா ஸ்டோர், கலைமகள் பத்திரிகை, கிரி ஸ்டோர்ஸ், கேன்சர் இன்ஸ்டிட்யூட் என 33 சுவாரஸ்யமான கட்டுரைகள், பல தெரிந்த, தெரியாத விபரங்களுடன் எழுதப்பட்டுள்ளன! சரளமான ஆங்கிலத்தில், ஆங்காங்கே நகைச்சுவைத் தொனியுடன், எளிமையாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் சென்னையின் பாரம்பரியத்தையும், கலை, கலாச்சார தொன்மங்களையும், மனிதர்களுடனும், நிறுவனங்களுடனும் இணைத்து சுவாரஸ்யமாகப் பேசுகின்றது!

அரங்கம் முழுவதும் ஆளுமைகள் – கீழாம்பூர், சிவசங்கரி, ஆர்.டி.சாரி, ஷீலா சாய் பிரகாஷ், எஸ்.கே.ஸ்வாமி, ஶ்ரீ கிருஷ்ணசாமி, தொழிலதிபர்கள், விளம்பர விற்பன்னர்கள், இலக்கிய ஆளுமைகள் …… ராஜன் என்னும் அன்பு மிக்க மனிதரின் மனிதநேய வெளிப்பாடு அன்று சேர்ந்திருந்த கூட்டம் என்றால் அது சற்றும் மிகையல்ல.

வரவேற்புரையை அவரது மகள் வழங்க (ஒவ்வொரு வார்த்தையிலும் அப்பாவின் அன்பும், அருமையும் வெளிப்பட்டது!), புத்தக அறிமுகத்தைத் திரு எஸ் ஆர் மது (மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்) வழங்க, மெட்ராஸ் மியூசிங்ஸ் ஆசிரியர் திரு வி.ஶ்ரீராம் புத்தகத்தை வெளியிட, புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சில பிரபலங்கள் நேரடியாகப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர்! வெளியிட்டுப்பேசிய ஶ்ரீராம், ஆர் வி ராஜனின் எழுத்துக்கள், விடாமுயற்சியுடன் எழுதுவதும், வெளிவரும் வரை கட்டுரைகளைத் தொடர்வதும் பற்றி சிறப்பாகப் பேசினார். (இசைஞர்களைப் பற்றியும், சென்னையைப் பற்றியும் ஶ்ரீராம் அவர்களின் பேச்சுக்களை யூ டியூபில் கேட்கலாம் – மிக சுவாரஸ்யமானவை!).

பெண்களின் முன்னேற்றம், புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல் வகையில், ரோட்டரி சங்கத்துக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும், மணிமேகலைப் பிரசுரத்திற்கும் கணிசமான தொகையை வழங்கினார் ராஜன்.

ராஜனைப் பற்றிய ஒலி,ஒளிப் படக்காட்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது – தயாரித்து வழங்கியவர் ராஜேஸ்வரி கோபாலன்.

ஏற்புரை வழங்கிய ராஜன் பெரியவர்களிடம் ஆசீர்வாதத்தைப் பெற்று, சிறியவர்களுக்கு வாழ்த்துகளை வழங்கினார்! மனைவி பிரபா ராஜன் அவர்களின் நினைவில், அவரைப் பற்றிப் பேசும்போதெல்லாம், மனமும், நாக்கும் தழுதழுத்ததை உணர முடிந்தது.

ராஜன் அவர்களின் சகோதரர் திரு சேஷாத்ரி மிகச் சிறப்பாக விழாவினை ஒருங்கிணைத்து, தொகுத்தளித்தார்.

சமீபத்தில் என்னுடைய ‘தேடல்’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து 15 கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘Search and other short stories’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவரது முதல் மொழிபெயர்ப்பு நூல், என் சிறுகதைத் தொகுப்பு என்பதில் எனக்குப் பெருமையே! அன்று வெளியிடப் பட்ட புத்தகத்திலும் என்னைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். மேடையேறிப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டபோது, மகிழ்ந்தாலும், இந்த மாமனிதருக்கு நான் என்ன பெரிதாக செய்துவிட முடியும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

விழா ஆரம்பத்தில் சமோசாவும், காபியும் – நிறைவில் எல்லோருக்கும் அருமையான டின்னர்!

நமஸ்காரங்கள் ராஜன் சார்! வைஷ்ணவ சம்ப்ரதாயப்படி, “இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்” என்று உங்கள் பாலாஜியின் திருவடிகளின் முன் தெண்டனிட்டுப் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

(Bright Stars In The Chennai Sky – by RV Rajan, to get copies: rvrajan42@gmail.com)