
ஒரு கையளவு நீரை மொண்டு
இந்த நதியை உன்னிடம்
தாரை வார்க்கிறேன்
குட்டி குட்டி நட்சத்திரங்கள்
உள்ளங்கைக்குள் கண்ணடிக்கின்றன
இனி இது போல ஒரு பிரியம்
வாழ்வில் இந்த நதியின் மீது
மீண்டும் வருமா
என்று தெரியவில்லை
படித்துறையில் சொரியும் பூக்களில்
கைகளை அளைந்து
நுரை பூத்துக் கிடக்கும் இந்த நாளை
அள்ளி முகத்தில் அப்பிக் கொள்கிறேன்
பிறகு எப்படித்தான் இந்த நதியை
நாம் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் சொல்?
இந்த நதி நம் ஞாபகத்தில்
இல்லாமலேபோனாலும்
நாம் இந்த நதிக்கொரு
ஞாபகமாக
போய் விட வேண்டும் தானே
