இனிக்கும் தமிழ் – 135/- டி வி ராதாகிருஷ்ணன்

முன் செய்த புண்ணியம்

பட்டினத்தார் சொல்லுகிறார்….

“முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் இவ்வளவு செல்வம் வந்தது என்று
அறியாமல், ஏதோ இப்போது செய்த முயற்சியால் கிடைத்தது என்று எண்ணாதே என்
மனமே. அப்படிப் பட்ட புண்ணியத்தால் வந்த பணத்ததை நல்ல வழியில்
செலவழிக்காமல் அதாவது ஏழைக்களுக்கு கொடுக்காமல், இறைப் பணியில்
செலவிடாமல், படித்தவர்களுக்கு ஒன்று கொடுக்காமல் இருந்து ஒரு நாள் இறந்து
போய்விட்டால் என்ன செய்வாய்? அடுத்த பிறவியில் ஏழையாகப் பிறக்கப்
போகிறாயா?”என்று கேட்கறார்.

பாடல்

முன் தொடர்பில் செய்த முறைமையால் வந்த செல்வம்
இற்றைநாள் பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே!
அற்றவர்க்கும் ஈயாமல் அரன் பூசை ஓராமல்
கற்றவர்க்கும் ஈயாமல் கண் மறைந்து விட்டனையே.

பொருள்

முன் தொடர்பில் = முற் பிறவியில்
செய்த முறைமையால் = செய்த புண்ணியத்தால்
வந்த செல்வம் = வந்த செல்வத்தை
இற்றைநாள் = இன்று, இப்போது
பெற்றோம் என்று எண்ணாது பாழ்மனமே! = பெற்றோம் என்று எண்ணாதே பாழ் மனமே
அற்றவர்க்கும் ஈயாமல் = பொருள் இல்லாதவர்களுக்கு உதவாமல்
அரன் பூசை ஓராமல் = சிவ பூசை செய்யாமல்
கற்றவர்க்கும் ஈயாமல் = கற்றவர்களுக்கும் கொடுக்காமல்
கண் மறைந்து விட்டனையே. = இறந்து போனாயே

(நீ பெற்ற செல்வதால் உனக்கும் பயன் இல்லை, மற்றவர்களுக்கும் பயன் இல்லை.)