என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார்/வாசுதேவன்

என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். தொன்மையான கோவில்கள் பற்றி பேசியது வியப்பளித்தது. இன்று அவரோடு காஞ்சிபுரம், வந்தவாசி வரை பயணம். வந்தவாசியில் இன்னும் பல சமணர்கள் வாழ்கிறார்கள். வந்தவாசி போகும் வழியில் காஞ்சியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பனங்காடு என்ற குக்கிராமத்திற்கு இன்று காலை சென்றோம். ஸ்தல புராணம் படி அகத்தியர் வழிப்பட்ட தாளபுரீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றோம். மிகச்சிறிய கோவில். ஊரில் மொத்தமே 10-15 வீடுகள் இருக்கலாம். தேவாரத்தில் சுந்தரர் பாடிய கோவில். ஆயிரம் வருடத்திற்கு மேல் பழமையான கோவில். முக்கியமான விஷயம்- கரிகால் சோழனால் கட்டப்பட்ட கோவில். நடை சாத்தியிருந்தது. மரமாத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. கோபுரம்,சிற்பம், கல்வெட்டுகள் மேல் வண்ண சாயங்களை பூசி வருகிறார்கள்.குருக்களுக்கு (இம்மாதிரி தொன்மையான சிறிய கோவில் குருக்கள் ஒல்லியாக அசோகமித்ரன் முகஜாடையுடன் இருப்பது ஆய்வுக்குரிய விடயம்). குருக்களுக்கு கோவில் வண்ணமயமாக மாறிவருவதில் பெருமிதம். அகத்தியருக்கும், சுந்தரருக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்து உரையாடி கரிகாலனை பற்றி அலட்டிக்கொள்ளாதது வியப்பளிக்கவில்லை. வெளியே வந்தோம். பத்து வீடுகள் இருக்கிற குக்கிராமத்தில் 15 அடி உயரத்திற்கு பிள்ளையார் ஒலிப்பெருக்கி சத்தத்தில் வீற்றிருந்தார். இளவட்டங்கள் பக்கத்து குளத்தில் பிள்ளையாரை கரைக்க தயாராக நின்றிருந்தார்கள்….

பக்தி,ஆன்மீகம், வரலாறு,தொல்லியியல் தெரியாத மூடர் கூட்டத்தில் நமது பண்டைய கலைச்செல்வங்கள் சீரழிவதை கண்டு நொந்து போய் விரக்தியுடன் திரும்பினோம்.