துன்பக் கனா ஒன்று கண்டேன்

வாசுதேவன் ஸ்ரீனிவாசன் 

 

பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்த செல்வத்திற்கு  டீ கடையில் ஒலித்த   அப் பாடல்-வரிகள் மதியம் கண்ணம்மா   போனில் பகிர்ந்து கொண்ட    பிரச்னையை   நினைவூட்டின. 

மதியம்  2.00  மணி…  கைபேசி அழைத்தது ……

“சொல்லு கண்ணம்மா”
“சாப்பிட்டிங்களா ? “
 “இப்போதான் சாப்பிட்டேன் ..என்ன விஷயம் ? “
” ராமு  போன் பண்ணி நாளைக்கு சிங்கப்பூர்லே இருந்து வர்றதா சொன்னான்”  ….
“ஓ டிபென்டெண்ட்விசா  கெடைச்சிருக்கும்….இந்த நடை கையோட வாணியைக் கூட்டிட்டு போறானாமா? ” 
“அப்படி இருந்தாத்தான் பரவாயில்லையே!”
“என்ன சொல்ற நீ  ….?  

  “வேலைய  ராஜினாமா பண்ணிட்டு வரப்  போறதா சொன்னான்   ‘டிபெண்ட்டென்ட் விசா ‘  பத்தி கேட்டதுக்கு  ..

“ரிஜெக்டெட்” னு  கூலா சொல்லிட்டு லைன கட் பண்ணிட்டான் .”
“இப்போ வேலைய ராஜினாமா பண்ண  அவசியம்?  “

 “அதாங்க புரியலை .பழைய  மாதிரி ஏதாவது பொண்ணு வெவகாரத்துல சிக்கிக் கிட்டா னோன்னு பயமா இருக்குங்க  “
“சே ..சே…  இருக்காது…  ஆமாம்….. விஷயம் வாணிக்குத்  தெரியுமா ?”
” போன் வந்தப்ப  அவ நல்லா தூங்கிட்டு இருந்தா… இனிமேத்தான் சொல்லணும்” 
“சரி அவ கிட்ட சொல்றத  எங்கிட்ட  விட்டுடு  நான் பாத்துக்கறேன்”
தொடர்பைத் துண்டித்தார்.
வாணி……. கண்ணம்மாவின் சொந்த  அண்ணன்

மகள்.ஒருசாலை  விபத்தில் கண்ணம்மாவின்  அண்ணன் இறந்து போக…. அக்  குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி கருதி  மூத்த மகள்  வாணியைத் தன் வீட்டிலே  வளர்த்து பிளஸ்-2 வரைக்கும்  படிக்கவைத்து  பி.சி.ஏ ‘டிகிரி’ முடித்துவிட்டு வேலை தேடுகிறேன் ்என்ற பேரில் வெட்டியாய் சுற்றிக்கொண்டிருந்த மகன் ராமுவுக்குக் குடும்பப்  பொறுப்பு வரட்டுமே  என்று  அவளைக்   கல்யாணமும்   பண்ணி  வைத்தார் செல்வம்.ஆனால்   அவனைப் பற்றிப்  புகார்கள் அதிகரித்ததே தவிர  பொறுப்பு வந்த பாடில்லை   தவறுகள் செய்யும் சாதாரண டீன் ஏஜ் பையனாத்தான் உலவி   வந்தான் ராமு  செல்வத்திற்கு   அவன் மேல் கோபம் ஒரு புறம்   இருந்தாலும் ஒரு பொறுப்புள்ள தந்தையாய்  தீவிரமாய்  முயற்சி செய்ததால்  ‘ஓவர்சீஸ் ரெக்ருடிங் ஏஜன்சி’ ஒன்றின் மூலம்  ராமுவுக்கு   சிங்கப்பூரில்  வேலை கிடைத்தது.

அப்படிக்  கஷ்டப்பட்டு வாங்கிக் கொடுத்த வேலையை விட்டு விட்டு  வரேன்னு சொல்றானே என்றுதான்  செல்வத்திடம் போனில் சொல்லி ஆதங்கப்  பட்டுக் கொண்டாள்  கண்ணம்மா ..

செல்வம்  வீட்டை நெருங்கிய  போது கிட்ட தட்ட இருட்டிவிட்டது.   
உள்ளே நுழைந்த செல்வம் பைகளை கீழே கண்ணம்மாவிடம் கொடுத்து விட்டு  வெராந்தாவில் அமர்ந்துகொண்டு செல்போனில் முகநூல் பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்த வாணியிடம் “ராமு ஏதும் போன் பண்ணினானாம்மா ? ” என்று மெல்ல பேச்சைஆரம்பித்தார் .

“இல்லையே…..என்ன விஷயம்  மாமா?  “
” ஒண்ணுமில்லம்மா   ….ராமு  நாளைக்கு   ஊர்லேருந்து வர்ரானாம்”
“அப்படியா மாமா ?  ‘டிபென்டென்ட் விசா ‘  கெடச்சுடுச்சா ? “
“அவன்  வர் ர தைப் பத்தித்தான் சொன்னான்.   விசாவைப்   பத்தி எதுவும் சொல்லல ..”
“அதான் எனக்கு கவலையாய் இருக்கு மாமா “
” கவலைப்படாதேம்மா …அதான் நேர்ல வரான் இல்ல..பேசிக்கலாம் “
இரவு-சாப்பாட்டை முடித்துக் கொண்ட  செல்வம் தன்  பிரத்தியேகமான ராசியான   ஈசி-சேரில் சாய்ந்து கொன்டு டி வி  பார்த்துக் கொண்டிருந்தார்…அந்த ஈசி சேரில் ஒரு விசேஷம்…எந்த  குழப்ப மான  நிலையையும் மாற்றி  தூக்கம் வரவழைக்கும் ராசியான ஈசிசேர் .. டி வி யில்  தில்லு முல்லு’  படம் … ரெட்டை வேடம் போடும் ரஜினி…. செல்வத்தின் மனதில்  ராமு வேலையை விட்டு  ஊருக்கு  திரும்பும் காரணத்தைப் பற்றிய யோசனைகள்   …..


மணி இரவு 09.00 …

செல்வத்தின் செல்போன் அழைத்தது …  
” ஹல்லோ “
“வணக்கம் ….மிஸ்டர் செல்வம்…? “
” செல்வம்தான் பேசறேன்..வணக்கம் “
“மிஸ்டர் செல்வம் … R3 ஸ்டேஷன்  இன்ஸ்பெக்டர் பேசறேன்  …. நீங்க கொஞ்சம் ஸ்டேஷன் வர முடியுமா?”
” என்ன விஷயம் இன்ஸ்பெக்டர்?”
”  இது போன்ல சொல்ற விஷயம் இல்ல …”
” சரி … இப்போவே வர்றேன்”

போன் தொடர்பை  துண்டித்தார். 

நிலை குலைந்து போனது செல்வத்திற்கு.ராமுவைப் பற்றிய  விஷயமா இருக்குமோ?   கண்ணம்மாவின்  சந்தேகம் உண்மை  ஆகிவிடும் போல இருக்கே…?  நாம உஷாரா  இருக்கணும் ..ராமு  பத்தி ஏதும் உளறி வைக்கக் கூடாது ….

  “சாப்டது கொஞ்சம் ஹெவியா இருக்கு …ஒரு  வாக் போயிட்டு வரேன்கண்ணம்மா”என்று சொல்லிவிட்டு பொடி நடையாக  R3 போலீஸ் ஸ்டேஷன் வந்து சேர்ந்தார் 

 இன்ஸ்பெக்டர்அறைக்குள்ள ஒரு  ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் அவர் முன் அமர்ந்திருந்தார்.

“வணக்கம் சார்”
” வாங்க மிஸ்டர் செல்வம் ….உக்காருங்க.” என்ற  இன்ஸ்பெக்டர்  நேரத்தை வீணாக்காமல் உடனடியாய் விஷயத்திற்கு  வந்தார்.

“ராமு  உங்க பையன்தானே ? “
“ஆமாம் ஸார் ..நல்ல பையன் ஸார் “
“அவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா ? “
“ஆயிடுச்சு ஸார்”
“அந்த கல்யாணம் ஆன நல்ல பையனால் தான் இப்போ எங்களுக்கு பிரசினை “
“பிரச்னையா? ஐயோ..என்னபண்ணினான்? அவனுக்கு என்ன ஆச்சு  ஸார் ? “
அவரது கேள்விகளில்  பிள்ளைப் பாசம் தெரிந்தது.
“மொதல்ல அவர் எங்கேன்னு  கண்டு பிடிக்கணும் …”
“என்ன ஸார்  சொல்றிங்க?”
“பதட்டப்படாதிங்க … அவர்  நாலு நாளா அவரோட  ஆபீஸ்க்கு வரல …ஆள் அப்ஸ்கான்டட்…அவருடைய ஆபீஸ் ரெகார்ட்லே இருந்து சென்னை கான்டாக்ட் டீடைல்ஸ் எடுத்த  சிங்கப்பூர் போலீஸ் …. உங்களை ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிக்கச் சொல்லி   எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்காங்க  ..அதனாலதான் உங்கள  வரச்சொன்னேன்.  பை தி  வே , இவர் மிஸ்டர் சேஷன்  ….இங்க ஒவர்சீஸ் ரெக்ரூட்மென்ட் ஏஜென்சி வச்சு இருக்கார்..”
செல்வம் அவரைப் பார்த்து “ஹல்லோ “என்றார்
இன்ஸ்பெக்டர், ” மிஸ்டர் செல்வம்…உங்க பையன் கடைசியா எப்போ காண்டாக்ட் பண்ணினார்?”
“இன்னைக்கு மதியம்…”
“என்ன சொன்னார் ?”
“அதை   என் ஒய்ஃபைதான் கேக்கணும் ..ஏன்னா அவன் பேசினது என்  “ஒய்ஃபோட தான் “
“சரி  அவங்க என்ன விஷயமா பேசிகிட்டாங்கன்னு  உங்க ஒய்ஃப் உங்க கிட்டே சொல்லலியா? “
” சொன்னாளே …சிங்கப்பூர் வேலைய ராஜினாமா பண்ணிட்டு  வந்துடப் போறதா சொன்னானாம் “
இவ்வளவு நேரம் சம்பாஷணையை வாய் மூடி  கேட்டுக்கொண்டிருந்த சேஷன் , 
“பாத்தீங்களா ஸார்?  செய்யறத செய்துட்டு எப்படி அப்பட்டமா பொய் சொல்லி இருக்கான்? ”   என்று சீறினார்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க மிஸ்டர் சேஷன்..நான் விசாரிச்சிட்டு இருக்கேன் இல்ல? “
இன்ஸ்பெக்டர்  தொடர்ந்தார்.
“மிஸ்டர் செல்வம் ..உங்களுக்கு அவர் காணாமப் போனதுக்கு    காரணம் ஏதும் தோணுதா  ?  உங்களுக்கு யார் மேலயாவது  சந்தேகம் இருக்கா ? “
“இல்ல  ஸார் .அப்படி எனக்கு  யார் மேலயும் சந்தேகம்  இல்ல ஸார் .தயவு செய்து எப்படியாவது என் பையனைக் கண்டு பிடிச்சு குடுத்துடுங்க ஸார் “
“அதுக்குத்தான் முயற்சி பண்ணி  கிட்டு இருக்கோம்…நீங்க கொஞ்சம் ‘கோ-ஆப்ரேட்’ பண்ணினா எங்க  வேலை சுலபமாய் முடியும்…” 
கர்சிஃபால்  முகம் துடைத்துக் கொன்டு  விசாரணையை  மேலே தொடர்ந்தார்இன்ஸ்பெக்டர்..
“பொதுவா உங்க பையன் வீட்டில் உங்க எல்லார் கூடவும்   எப்படிப் பழகுவார் ? “
” ரொம்ப பாசமா பழகுவான் ஸார் “

“மிஸ்டர் செல்வம் …உங்க பையனப் பத்தின ஏதோ  உண்மையை நீங்க மறைக்கறிங்க. “
“அப்படியெல்லாம் இல்ல சார் …என்ன நம்புங்க “…”அது போகட்டும் …இந்த போ ட்டோல இருக்கிற இந்தப் பொண்ணை உங்களுக்குத் தெரியுமா ? “
  ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார் ..

“எங்கேயோ பாத்தா மாதிரி இருக்கு” 
“இவ பேரு நித்யா …போன வருஷம்தான்  இந்தப் பெண்  கிட்டே உங்க பையன்  பாலியல் வம்பு பண்ணினதா கம்பிளைன்ட்ரெஜிஸ்டர்  ஆயிருக்கு   சரியான ‘ஆதாரம் ‘ இல்லாததால்  தப்பிச்சுட்டான்..”
“இன்ஸ்பெக்டர் ….மன்னிக்கணும் …போன வருஷம் நடந்ததா நீங்க சொல்ற விஷயத்துக்கும் இப்போ என் பையன் காணாமப் போனதுக்கும் என்ன சம்பந்தம் சார் ? “

“இருக்கு ..ஏன்னா …அந்த நித்யாவையும்   காணும்னு எங்களுக்கு  புகார் வந்திருக்கு” 
“யார் குடுத்திருக்காங்க ஸார்? “
“இதோ இவர்தான் …….மிஸ்டர் சேஷன் ….பொண்ணோட அப்பா!  “
ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தார் செல்வம்.. 
“அப்போ…  என் பையன்தான்  அந்த நித்யாவை  கடத்தி இருப்பான்னு நெனைக்கிறீங்களா ? “
“அப்படி  சொல்ல முடியாது …அவ காணாமப் போனதுலே உங்க பையனுக்கு பங்கு இருக்கலாம்…ஏன்னா….அந்த நித்யாவும் சிங்கப்பூர்லதான் ஒர்க் பண்றா “
“சரி இன்ஸ்பெக்டர் …இப்போ நான் உங்களுக்கு எந்த வகையில உதவி பண்ணனும் …சொல்லுங்க “
“உங்க பையன்  மறுபடியும் உங்களை  ‘கான்டாக்ட்’ பண்ணினா எனக்கு தகவல்சொல்லுங்க… கெளம்புங்க… …  எப்போ கூப்பிட்டாலும்  நீங்க ஸ்டேஷனுக்கு  வரணும். “
” அப்படியே செய்யறேன் ஸார் … நான் வரேன் ”  என்று அவர் கிளம்பும்போது சேஷன்  அவரை வெறுப்புடன் ஒரு முறை முறைத்தார் .வாசல் வரை சென்ற  செல்வம் ஏதோ நியாபகம் வந்தவர் போல்  திரும்பி வந்து,
“எது எப்படி இருந்தாலும் இன்னும் ஒரு  நாள் வெயிட் பண்ணினா இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் இன்ஸ்பெக்டர் “
“மிஸ்டர் செல்வம் …திரும்பவும் கேக்கறேன்  …உங்களுக்கு உங்க பையனப் பத்தின வேற உண்மை ஏதாவது தெரிஞ்சா சொல்லிடுங்க …”
“இன்ஸ்பெக்டர் …எனக்கு எதுவும் தெரியாது ….என்னை விட்டுடுங்க …எனக்கு தெரிஞ்சதெல்லாம்  நான் சொல்லிட்டேன்..என்னை விட்டுடுங்க …..எனக்கு வேற எதுவும் தெரியாது ….


மணி இரவு 11.45


“என்னங்க…….என்ன சொல்றீங்க …உங்களுக்கு என்ன தெரியாது?  …இங்க இன்ஸ்பெக்டர் எங்க இருக்கார் ?  கனவு ஏதாவது கண்டிங்களா ? வாங்க உள்ளே பெட் ரூம்ல வந்து படுங்க…. ஈஸி -சேர்லயே படுத்துத் தூங்கி  கழுத்து வலிக்கப் போவுது “என்று  அந்த ராசியான ஈசி-சேரில் சாய்ந்து கொண்டிருந்த செல்வத்தைத் தட்டி  எழுப்பினாள் கண்ணம்மா..

சிங்கப்பூர் ஏர்போர்ட் …’வெயிட்டிங்  லவுன்ச்’ …


வாணி பேரில் கிடைத்த டிபென்டென்ட் விசாவை  ஒரு முறை செக் பண்ணி விட்டு ஹாண்ட் பாக்கில் வைத்துக்கொண்டான் ராமு   மறுநாள் அதைக் காண்பித்து அனைவரையும்  ஆச்சரியப் படுத்தி ஏப்ரல் பூல்  ஆக்கிடவேண்டும்  என்ற நோக்கத்தில்….
மறுநாள்  ஏப்ரல் 1….

 .