இனிக்கும் தமிழ் -137/ டி .வி ராதாகிருஷ்ணன்

 உவமை நயத்துக்கான  எடுத்துக்காட்டு குறுந்தொகையில் இப்பாடல்

 மேலும் ஒரு வகையில் சிறப்புடைத்து. உலகம் தட்டையானது அல்ல. உருண்டையானது
என்ற அறிவியல் உண்மையை விளக்கிடும் பாடல்

 புலவர் கொல்லன் அழிசி எழுதியுள்ள இப்பாடலில் அழகியதோர் உவமையையும்,
அறிவியல் உண்மைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டையும் காணலாம். பொருள் தேடி
வந்து திருமணம் செய்வேன் என்று கூறிச் சென்ற தலைவன் இன்னும்
திரும்பவில்லை. தான் துயர் அடைவது கண்டு கலங்குகின்ற தோழிக்கு
”கவலைப்படாதே” என்று தலைவி இவ்வாறு ஆறுதல் கூறுகிறாள்.

பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பல்மலர்
வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் தலையும், நோய்பொரக்
கண்டிசின், வாழி தோழி தெண்திரைக்
கடல்ஆழ் கலத்தின் தோன்றி
மாலைமறையும் அவர் மணிநெடுங் குன்றே” – (குறுந்தொகை- 240).

முல்லை நிலத்தில் தூரத்தில் மலை தெரிகிறது. வயல் வெளிகளில் கிளி மூக்கு
போன்ற அவரைப் பூக்கள் மலர்ந்திருக்கின்றன. முல்லை மொட்டுக்களைப் போன்ற
பற்களைக் கொண்ட காட்டுப் பூனைகள் நடமாடுகின்றன. மாலை நேரத்தில்
மலர்களும், காட்டுப் பூனைகளும் வருந்தும்படியாகக் குளிர் பரவுகிறது.
இருள் கவிழும் மாலைப் பொழுதில் அடிவாரத்திலிருந்து மலை மறைய
ஆரம்பிக்கிறது. சூரியன் மறையும் வேளையில் மலையின் உச்சி மட்டும்
தெரிகிறது. மலை மறையும் இக்காட்சி கடலிலே செல்லும் கப்பல் படிப்படியாக
மறைந்து முழுவதும் கண்ணுக்குத் தெரியாமல் போவது போல் இருக்கிறது.
”மலையைப் பார்த்து அவனின் நினைவை ஆற்றியிருந்தேன். மலையும் கண்ணின்
காட்சியிலிருந்து இப்போது மறைந்து விட்டது. இனி நான் எப்படி
ஆற்றியிருப்பேன்” என்று தலைவி வருந்தி தோழியிடம் கூறுகிறாள்.

 கடற்கரையிலிருந்து பார்ப்போருக்கு கப்பல் படிப்படியாக மறைவது புவியின்
பரப்பு தட்டையானதல்ல. உருண்டையானது என்பதன் நிரூபணம் அல்லவா?

(கிளி மூக்கு போன்ற அவரைப்பூக்கள், முல்லை மொட்டுப் போன்ற பற்களைக் கொண்ட
காட்டுப் பூனை,அடடா…)