இரட்டை ஆயுள் தண்டனை/பாண்டியன் சுந்தரம்

இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்: “சிதம்பரம் மிகப் பெரிய ராஜ துரோகி. அவருடைய எலும்புக் கூடும் ராஜ துரோகம் ஆனது”

40 ஆண்டு சிறை தண்டனை பெற்ற போது சிதம்பரத்திற்கு வயது 35.தீர்ப்பைக் கேட்ட வ.உ.சி.யின் தம்பி மீனாட்சிசுந்தரம் அதிர்ச்சியில் புத்தி பேதலித்து அதே நிலையில் 1943-இல் இறந்தார்.

இந்திய வைஸ்ராய் மிண்டோவுக்கு லண்டனில் இருந்து இந்திய ராஜாங்க மந்திரி மார்லி எழுதிய கடிதத்தில் “நீதிபதியின் தீர்ப்பு முற்றிலும் நியாயத்திற்குப் புறம்பானது.இந்த அரக்கத்தனத்தை என்னால் ஆதரிக்க முடியாது” என்று கண்டித்தார்.

வ. உ. சி. யின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திலும், லண்டனில் இருந்த பிரிவியூ கவுன்சிலிலும் மேல்முறையீடு செய்ததன் விளைவாக 40 ஆண்டு சிறைத் தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. பின்னர் அவரது நன்னடத்தையைக் கணக்கில் வைத்து அது நான்கரை ஆண்டுகளாக மாற்றப்பட்டது.

கோவை சிறையில் வ.உ.சி. கைத்தோல் உரிந்து விழும் வண்ணம் சணல் உரிக்கும் எந்திரத்தைச் சுற்றினார். பகலெல்லாம் சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் சுடச்சுட எண்ணெய் செக்கில் சுற்றிச் சுற்றி வந்தார். அவர் கால்களில் பெரிய இரும்புச் சங்கிலி பூட்டப்பட்டது. கல்லும் மண்ணும் கலந்த உணவு வழங்கப்பட்டது.சிறைவாசத்தில் சிதம்பரம் நலிவுற்று, 9 கிலோ எடையை இழந்தார்.

கோவை கண்ணனூர் சிறைகளில் நான்கரை ஆண்டுகள் கடும் துன்பங்களைத் தாங்கி, 1912 டிசம்பர் 24 வ.உ.சி. விடுதலையானார்.

விடுதலை நாளில் அவரை வரவேற்க மாநிலமே திரண்டு வரக்கூடும் என்று எதிர்பார்த்த ஆங்கிலேயே அரசு, விரிவான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு ரகசிய அறிக்கை அனுப்பியது.

ஆனால் வ.உ.சி.யை வரவேற்க அவருடைய மனைவி, மக்கள், மைத்துனர், சுவாமி வள்ளி நாயகம், நண்பர் கணபதி, ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலையான தொழுநோய் பிடித்த சுப்பிரமணிய சிவா இவர்களைத் தவிர வேறு யாரும் வரவில்லை.

சிறை வாசத்திற்குப் பிறகு சென்னை சென்று சேர்ந்த சிதம்பரம்பிள்ளை, ஒரு காலத்தில் கப்பலோட்டிய தமிழனாக இருந்தவர், வறுமையில் வாடி, குடும்பம் நடத்த மளிகைக் கடையும், மண்ணெண்ணெய் கடையும் வைத்து அதிலும் நட்டப்பட்டு பெரும் அவதிப்பட்டார்!

18-10-1936 இரவு ‘என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ எனும் பாரதியின் பாடலை பாடச்சொல்லி, அதைக் கேட்டபடி மரணத்தின் மடியில் கண்மூடினார் வ.உ.சி.!