
ஹிண்டு பேப்பர் க்ராக்ஜாக் பிஸ்கெட் போன்றது. எதனோடும் ஒத்துப் போகும். எப்படி வேண்டுமானாலும் ஒத்துழைக்கும். நாற்காலியில் நெட்டுக்குத்தாக உட்கார்ந்தும் படிக்கலாம். ஈஸிசேரில் சாய்ந்து கொண்டும் வாசிக்கலாம்.
கணேசனுக்குத் தரையில் விரித்து வைத்து, ஃபேன் காற்றில் பறக்காமல் இருக்க, இரு கைகளையும், இரு பக்கங்களிலும் ஊன்றி, முட்டிக் காலிட்டு, குனிந்து படிக்க மிகவும் பிடிக்கும்.
இந்த வழக்கம், அவனுக்கு அவன் அப்பாவிடம் இருந்து வந்திருக்கிறது. இரு கைகளிலும், பளு கொடுப்பதில், தோள்பட்டைகளில் ஏற்படும், சுகமான வலியினை அனுபவிக்கப் பிடிக்கும்.
மிகவும் சுவாரஸ்யமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது, வாசலில் நிழலாடியது. பக்கத்து வீட்டு மாமி. வாசல் படிக்கு மிக அருகில் அமர்ந்து, பேப்பர் படிக்கும் அவனைத் தாண்டி வருவதற்கு, அந்த மாமி கொஞ்சம் யோசிப்பதாக பட்டது.
படிக்கு வெளியில் இருந்து, ம்க்கும் என்று கனைத்தாள். கண் ஜாடையால் மனைவி
இல்லையா என்று கேட்டாள்.
கணேசன் பதில் கொடுக்கும் முன்னால், சப்தம் கேட்டு, அவன் மனைவி அடுக்களையில் இருந்து வந்தாள்.
“வாங்க மாமி, வாங்க. உள்ள வாங்க”. அவளுக்கு, மாமியை விடவும், மாமி கொண்டு தருகிற, மங்கையர் மலர் முக்கியம்.

கணேசனும், அவளும் ஒரே நேரத்தில், இருவேறு திசைகளில் ஒருக்களித்து விலக, மாமி உள்ளே நுழைந்தாள்.
“நேத்திக்கு என்ன, திருவண்ணாமலை போயிருந்தேளோ?”
“இல்லயே, ஏன்?”
“இல்ல, கதவு பூட்டியிருந்ததே. அதனாலக் கேட்டேன்.”
அவள் சற்றே யோசித்து, ” பூட்டியிருந்துதா? அட ஆமாம், இங்கதான், அயனாவரம் போயிருந்தோம். ராத்திரி வந்துட்டோமே”.
அயனாவரத்தில் அவள் பெற்றோர் வசித்து வந்தனர்.
“ஓஹோ, நான், நீங்க என்னமோ, திருவண்ணாமலைக்கு போயிருப்பேள்னு நெனச்சேன். நீயும் ரொம்ப நாளா சொல்லிண்டு இருந்தியே”
“இல்ல மாமி, போக முடியல. வேளை வரல்லை போலருக்கு. அப்படி என்ன விசேஷம் நேத்திக்கு”
“என்னடி அப்படி கேட்டுட்டே? நேத்திக்கு, பௌர்ணமி இல்லயா? ஊர் உலகமே, திருவண்ணாமலைலத்தான் கூடியிருந்துதுன்னு சொல்றா”
“பௌர்ணமியா இருந்தாத்தான் என்ன” என்று கணேசன் கேட்டான்.
“பௌர்ணமிக்குப் பௌர்ணமிதான் சித்த புருஷாள்லாம் அங்க வந்து கூடறாளாமே.”
“அதுக்காக?”
“அப்பத்தான் நிறைய ரேஸ் வருதாம்”
“ரேஸ் பாக்கறதுக்கு திருவண்ணாமலை என்னத்துக்கு? இங்க இருக்கற கிண்டியில இல்லாத ரேஸா? இங்கேயே பாக்கலாமே?”
மாமி லேசாக முகம் சுழித்தாற் போல் தான் இருந்தது. ஒன்றும் பேசவில்லை. அல்லது பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவனைப் போன்ற, வீம்புக்கு நாஸ்திகம் பேசுகிறவர்களிடம் பேசுவதால் புண்ணியம் கரைந்து விடும் அபாயம் நேரிடலாம்.
கணேசன் வெகண்டையாக மதநம்பிக்கைகளைப் பேசினாலும் அவன் நாத்திகன் இல்லை.
அவனுக்கும் லேசாக பயம் உண்டு. என்னதான் ஃபிலாஸஃபிகலாகப் பேசினாலும், அவ்வப்போது கண்பார்வை குறைகிற மாதிரி இருப்பதில் கணேசனுக்கு கிலேசம் தான். தான் அவ்வப்போது கடவுள் பற்றிய நம்பிக்கைகளைத் தாறுமாறாக பேசுவதால் சாமி கண்ணைத் தவணை முறையில் கண்ணைக் குத்துகிறதோ என்ற சந்தேகம்.
மாமியின் முகத்தில், அவன் மனைவியின் பால் ஒரு கழிவிரக்கம் தோன்றியதாகப் பட்டது. அவளும் ஒருவித ஜாக்கிரதை உணர்வுடன், மாமிக்கு, குங்குமம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள். அடுத்த மங்கையர் மலர் பிரதியை இழந்து விட அவள் தயாராக இல்லை.
மனைவியின் காலடிகள் கணேசனை நெருங்குவதை உயர்கிற சப்தங்கள் உணர்த்தின. அவன் தலையை உயர்த்தவில்லை. அவளிடம் ஒரு தயக்கம் இருப்பதாகப் பட்டது. இல்லையேல், காலடிகள் விரைவாக அவனை எட்டும். மிரட்டும். மங்கையர் மலர் அல்லாது அவளுக்கு அந்த மாமியிடம் எந்த அன்பும் இருந்ததில்லை. அதனால், அவளுக்கு அவன் மீது பெரிய அளவில் கோபம் இருக்க நியாயம் இல்லை.
என்ன என்றான், தலையை உயர்த்தாமலேயே.
மாமியை விரட்டியாச்சு, சரி. நாம எப்போ, திருவண்ணாமலை போறது?
போகலாம்.
அதுதான் எப்போ? ஒரு வருஷமாத் தள்ளிப் போட்டாறது. குழந்தைக்கு ஆண்டு நிறைவும்போது வேண்டிக் கொண்டது.
அவளுக்கு, இந்த முறை, கிரிவலம் போயே ஆக வேண்டும்.
22ம் தேதி போகலாம்.
அவள் காலண்டரைப் பார்த்தாள். அது சனிக்கிழமை.
அந்நாட்களில், கணேசன் சனிக்கிழமைதான் தி.மலை செல்வது.
அந்த ஞாபகத்தில் தான் சட்டென்று சனிக்கிழமை என்று சொன்னான். அதிலும் ஒரு சௌகரியம் இருந்தது. அலுவலகத்தில் இருந்து, நேராக, பஸ் பிடித்து, தி.மலை சென்று, சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில், அறை எடுத்துத் தங்கி, அன்று இரவே, கிரிவலம் சென்று வந்து விட்டால், மறு நாள் காலை அங்கிருந்து கிளம்பி நேராக பாண்டிச்சேரி போய், ஆஸ்ரமம் சென்று விட்டு, இரவுக்குள் வீடு திரும்பி விடலாம்.
இரண்டு வயது பெண் குழந்தையை அதற்கு மேல், மாமனார் வீட்டில் சமாளிக்க முடியாது.
ஒரு பெரிய உற்சாகம் அவளைப் பீடித்து, காலண்டரை, விலாவாரியாகப் பார்க்கவாரம்பித்தாள்.
பின், ஐயையோ என்றாள்.
“இப்ப என்னத்துக்கு ஊளை?”
அன்னிக்கி அமாவாசைப்பா !
அதனாலென்ன? மலைக்கு லீவு விட்டிருப்பாங்களா?
ஒங்களுக்கு எல்லாமே வெகண்டைதான். ஊர் உலகமெல்லாம், பௌர்ணமிக்குப் பௌர்ணமி, கிரிவலம் போனா, நீங்க அமாவசைக்குப் போகலாம்னு சொன்னா என்ன சொல்றது? ஊருக்கெல்லாம் ஒரு வழின்னா ஒண்ணறைக் கண்ணனுக்கு ஒரு வழிங்கற மாதிரின்னா இருக்கு?
இப்ப, நீ ஊர்ல இருக்கறவங்களுக்காக திருவண்ணாமலைக்குப் போறியா, இல்லை, உனக்காக, உன் ப்ரார்த்தனைக்காகப் போகணுங்கறியா?”
அதெல்லாம் சரி, அதுக்காக, இப்படி ரெண்டுங்கெட்டானா கெளம்பினா, அக்கம் பக்கத்துலல்லாம் சிரிக்க மாட்டாங்களா?
யாராவது அழணும்ங்கறதுக்காகவோ, இல்லை, சிரிக்கணும்ங்கறதுக்-காகவோ, எனக்கு மலைக்குப் போகணும்கறது இல்லை. என்னமோ, தீவாளிக்கு, புது ட்ரெஸ் போட்டுக்கறது மாதிரி, மலைக்குப் போறது ஒரு வழக்கமாப் போயாச்சு…. பௌர்ணமிக்குக் கிரிவலம் போகலேன்னா, என்னமோ பேய் பிடிச்சுக்கும்ணு, எல்லாம் பிசாசு மாதிரி மலையை சுத்தறாங்க… தெரியாத்தனமா, போன வருஷம், பௌர்ணமிக்கு, மலைக்குப் போயிட்டு, ஊர்க்காரன்லாம், ரோடைக் கூட க்ராஸ் பண்ண முடியாமத் திண்டாடினது எனக்குத்தான் தெரியும். அன்னிக்கு, போறாத காலம், இந்த சுப்பு பைத்யத்தைக் கூட்டிண்டு போயி, அது வழிலேயே அவசரக் குடுக்கையாட்டமா, வேன்லேர்ந்து குதிச்சு, கூட்டத்திலே தொலைஞ்சு போயி, கண்ணுல பட்ட ஏதோ ஒரு சின்ன மணல் மேட்டை திருவண்ணாமலைன்னு நெனச்சிண்டு, வேக வேகமா பம்பரம் சுத்தற மாதிரி சுத்திப்புட்டு, எப்படியோ ஊர் வந்து சேர்ந்தான். இன்னிக்கி வரைக்கும் அவனோட முகாலோகம் இல்லை.
உங்க ஒருத்தருக்காக ஊரையே அலம்பித் தொடைச்சு வைக்கணுமாக்கும்? அவங்கவங்க பக்தி அவங்களுக்கு. இதுல என்னமோ நீங்க மட்டும் ஒசத்தின்னு, தனின்னு நெனப்பு ஒங்களுக்கு.
“யாரு ஒசத்தி, யாரு மட்டம்னு நான் விவாதத்துக்கு வரலை. அதுக்கு அவசியமும் இல்லை. நான் மட்டும் தனியா மலையை சுத்தி வர்றதுக்கு, மலைய ஒண்ணும் எனக்கு யாரும் வித்துடலை. Infact, இவ்வளவு பேர், ஒரே இடத்துல, ஒரே நோக்கத்துக்காகக் கூடறது, இந்த தர்மத்துக்கு தெம்பு அளிக்கற விஷயம். ஆபத்துன்னு வந்துதுன்னா, இவ்வளவு பேர் இருக்கோம்டான்னு, முகம் தெரியாத எதிரிக்கு விடற சவால். ஆனா, அதைவிடவும் முக்கியம் “ஆன்மீகம்”. எந்த ஒரு சொஸைட்டியிலயும் ஆன்மீகம் அபிவிருத்தி ஆச்சுன்னா, அந்த தேசத்துக்கே சுபிட்சம் தானா வந்துடும். ஆனா, ஆன்மீகம் வேற பக்தி வேறேங்கறத மொதல்ல புரிஞ்சுக்கணும்.
“சீக்கிரம் சொல்லுங்க. Gas-ல ரசம் வத்திண்டு இருக்கு.அப்றம் தீஞ்சு பேயிடும்”
“இதை அவ்வளவு சுலபமா சொல்ல முடியுமான்னு தெரியலை”
“பரவாயில்லையே! முன்னல்லாம், ஏதாவது கேட்டா, ஒனக்கெல்லாம் புரியாதுன்னு மழுப்பறதுதான வழக்கம்?”
சிரித்தான். “ஒன்ன போர் அடிக்கணும்கறது என் நோக்கம் இல்லை. Ingredientsலாம் more or less ஒண்ணா இருந்தாலும், ஒன்னால எப்படி, ரசம் வேறே, வத்தல் குழம்பு வேறேன்னு சொல்ல முடியறதோ, அது மாதிரிதான் இது. ஆன்மீகத்தையும், பக்தியையும் confuse பண்ணிக்கக் கூடாது.
இப்ப என்ன சொல்ல வர்றீங்க?
திருவண்ணாமலைங்கறது ஒரு மலை மட்டும் இல்லை. அது தெய்வாம்சம். அமைதி. அமானுஷ்யம். அற்புதம். அதுக்குத் தூபதீபம் காட்டி, அலங்காரம் பண்ணி, படையல் போட்டு, படையல் போட்டு, கடைசில, Plot போட்டு வித்துடுவோம். இன்ன கல்லுல, இன்ன சக்தி இருக்குன்னு, புருடா விட்டு, மலையையேப் பேத்துண்டு போயிடுவான். கூட்டம் சேர, கூட்டம் சேர, பித்து தலைக்கேறி, வாங்கற கூட்டமும் ஜாஸ்தியாகி, சர்ர்ர்ருன்னு, மலை மைதானமாகி விடும்.
“இதென்ன முப்பது வயசில நூத்துக் கிழவனைப் போல பேச்சு.”
“இதை நான் ஞானோதயம்னு சொல்ல வரல்லை. பௌர்ணமிக் கூட்டத்தைப் பார்த்துப் பகீர்னது உண்மை. ஒரு லட்சம் பேர், என் விலா எலும்புல நெம்பிட்டுப் போனதுனால இல்லை. வந்தவங்கள்ல, பாதிப்பேர், ஏதோ இதை ஒரு பிக்னிக்காகப் பாவித்து வந்தவங்க. இங்க வரல்லைன்னா, அண்ணா சமாதிக்கோ, செத்த காலேஜுக்கோ போயிருப்பாங்க… பல பேர், மிதமிஞ்சிய பக்தியில் வந்தவங்க… அல்லது, குடும்பக் கவலையை மறக்க வந்தவங்க.. சுத்தினால் புண்ணியம் கிடைக்கும்னு வந்தவங்க… பல்லாவரம் மலையையோ பறங்கி மலையையோ சுத்தினா இதெல்லாம் கிடைக்கும்னு எவனாவது கிளப்பி விட்டா, அத்தனை பேரும் அங்க போயிடுவாங்க.
“சும்மா ஏதாவது சொல்லணுமேன்னு சொல்றீங்க….Sorry, உங்க argumentடை ஒத்துக் கொள்ள முடியாது. இது, உங்க ஆணவம்.”
இல்லம்மா. நீ தப்பா புரிஞ்சுக்கற.. திருவண்ணாமலை, இதையெல்லாம் கடந்த அற்புதம். அது ஞானத்தோட symbol. அதோட அமைதிதான் அதோட அழகே. அதை, அந்த அமைதியை, அனுபவ பூர்வமா உள்ள வாங்கிண்டு அனுபவிக்காம, லட்சக்கணக்கான விபரம் அறியாத ஜனங்கள், காலடியில தேச்சு வீணாக்கறது சகிக்க முடியாத கொடுமை. பொரி கடலை, வெத்தலை பாக்கு, ரஜினி படம், படாடோபம், பகட்டு, அகலக் கரை இல்லாமல் கல்யாணத்தில் நாத்தனார் வைத்துக் கொடுத்த பட்டுப் புடவை, டர்ட்டீ பொலிடிக்ஸ், பெருத்த சத்தத்தில் பஜனை, இதையெல்லாம், இந்த மலை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? அன்றைக்கு வந்தவர்கள் எல்லார் முகத்திலும், ஒரே ஒரு எதிர்பார்ப்பு – முகம் தெரியாத யாரோ ஒரு சித்தர், ஒரு பெரிய ப்ளேட் நிறைய “ரேஸ்” வைத்துக் கொண்டு, பௌர்ணமிக்குப் பௌர்ணமி, விழுந்தடித்துக் கொண்டு, கிரிவலம் வந்து, முண்டியடித்து பஸ்ஸில் ஸீட் பிடிக்க விரைகிறவர்கள் மேல் இறைக்கிறார் என்கிறார் போல்”
“ஏன்? இருக்கப் படாதா?”
“மலையே சிவ ஸ்வரூபம். அதில், ஆயிரக்கணக்கான சித்தர்கள் இருப்பது வாஸ்தவமாகக் கூட இருக்கலாம். மலையைச் சுற்றும்போது, அபூர்வமான சக்தி கிடைக்கலாம் தான். ஆனால், இதையே, எவ்வளவோ மகான்கள், சித்த புருஷர்கள், எவ்வளவோ வர்ஷங்களா சொன்னபோது, காதில் வாங்கிக் கொள்ளாத ஜனங்கள், முந்தா நாள் ப்ரபலமான யாரோ சொன்னதைக் கேட்டுக் கொண்டு, அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வருவதுதான் என்னவோ போல் இருக்கிறது. நோக்கம் விபரீதமாக இல்லாவிட்டாலும், அமைதிக்குப் பங்கம் வருவதுதான் ப்ரச்சனை.”
அவள் புன்னகைத்தவாறு விலகினாள். அவளுக்கு இவனுடைய ஆதங்கம் புரிந்திருக்க வேண்டும். இவனும் மகேஷும், புத்திசாலிகள் என்பதை அடுத்தவனுக்கு நிரூபிக்க வேறொரு முகாந்திரம் கண்டு பிடிக்க வழி இல்லாததால், JK-வையும், ரமணரையும் பிடித்துக் கொண்டு, மலை மலையாக ஏறி இறங்கி, குகைளில் தஞ்சம் புகுந்து, அறிவு ஜீவிகள் என்ற பதத்தை எய்துவிடும் தருணத்தில், எவனோ ஒருவன், என்னத்தையோக் கிளப்பி விட்டு, ஒரு பெரும் திரளில், இவர்களையும் ஆழ்த்தி, இவர்கள் தங்கள் தனித்தன்மையை இழந்து விட்ட அவலம்தான் இவன் வார்த்தைகளில் வருகிறது என்பதைத் தெரிந்து கொண்ட சிரிப்பாகப் பட்டது கணேசனுக்கு.
(2)
திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்ட் வழக்கத்தை விடவும் கூட்டம் கம்மியாக இருந்ததாகப் பட்டது. இன்றைக்கு என்று கிளம்புவதற்கு நேரமாகி விட்டது. அனைத்து புளியமரங்களிலும் நிற்கிற பஸ்தான் கிடைத்தது. ஆட்டோ வைத்துக் கொண்டு, சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமம் போய் சேர்ந்த போது, 7.30 மணி ஆகி விட்டது. நல்ல வேளையாக ரூம் கிடைத்து விட்டது. கணேசனுடைய உறவினர் இருவர் ரமணாஸ்ரமத்திலேயே வேலை செய்கிறார்கள். அதைத் தவிர, அவனுடைய உயர் அதிகாரி ஒருவர், கணேசன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர், ரமண மகரிஷியின் ஒன்று விட்ட சகோதரரின் பேரன். அதனால், அவனுக்கு ரமணாஸ்ரமத்தில் இலவசமாகவே தங்குமிடம் கிடைக்கும். முன்னாட்களில், அவனும், மகேஷும் வரும்போது அவ்வாறு ஓரிரு முறை தங்கி இருக்கிறார்கள். மயில்கள் உலாவுகிற அப்பெரும் நந்தவனத்தில், மலையைப் போலவே மௌனம் இழைகிற விடுதியில் தங்குவது ஒரு தனி அனுபவம். என்றாலும், இலவசமாகத் தங்குவதில் இருக்கும் ஒரு அசௌகரியம் கருதி, பக்கத்தில் சகாய விலையில் கிடைக்கிற ஆஸ்ரமத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறான் அவன்.
குளித்து விட்டு, ஆஸ்ரமத்தில் சற்று அமர்ந்து விட்டுக் கிளம்ப உத்தேசித்தனர். எப்பவும், கிரிவலம் செல்கிறவர்கள், முதலில், அண்ணாமலையாரைத் தரிசித்து விட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆனால், கணேசன் எப்பவும், ரமணாஸ்ரமத்தில் இருந்தே ஆரம்பிப்பது வழக்கம். வரும் வழியில் கோயிலைப் பார்த்துக் கொண்டு வருவது என்று வைத்து கொண்டிருந்தனர். உண்மையைச் சொல்லப்போனால், அவன் மனைவியைப் போலல்லாது, அவனுக்கு, கோயிலில் கருவறைகளில் காதலாகிக் கசிந்துருகியதெல்லாம் நடந்ததே இல்லை.
பக்தி அவனுக்கு சித்தித்ததே இல்லை.
ரமணாஸ்ரமத்தில், அவன் சகோதரர் சாப்பிட வற்புறுத்தியும், அவன் மறுதலித்தான். நேரம் ஆகிவிட்ட காரணத்தைத் தெரிவித்த போது, அவர் சற்று திகைத்துத் தான் போனார்.
“இப்பவே எட்டரை ஆகறது. நீங்க ரெண்டு பேரும் எப்ப கிளம்பி, எப்ப முடிக்கறது. சாப்டுட்டு, ரெஸ்ட் எடுத்துட்டு, விடியக் கார்த்தால கிளம்பலாம்” என்றார்.
மேலும், “ஏம்பா. கிரிவலம் பண்றதுக்கு, அமாவாசைலயா வருவாங்க” என்று கடிந்து கொண்டார்.
கணேசன் அவன் மனைவியின் பார்வையைத் தவிர்த்தான். என்றாலும், இருட்டு அவனை லேசாக சங்கடப் படுத்தியது.
அவன் மனைவி, அவன் கையைப் பிடித்துக் கொண்டு, மெதுவான குரலில், “இல்லப்பா. இப்பவே போயிட்டு வந்துடலாம். இல்லன்னா, program கெட்டுப் போயிடும். நாளைக்கு, சாயங்காலத்துக்குள்ள போகலேன்னா, குழந்தை அழ ஆரம்பிச்சுடுவா.”
அவள் குரலில் தெரிந்த பதட்டம் கணேசனையும் தொற்றிக் கொண்டது. அரை மனதுடன், “ரொம்ப இருட்டா இருக்கே” என்றான்.
“அதெல்லாம் ரமணர் பார்த்துப்பார்.”
அவனுக்கு சிரிப்பாக வந்தது. வாழ்ந்த காலத்திலேயே, ரமணர் அற்புதங்கள் எதுவும் செய்தது இல்லை. அதற்கெல்லாம் அவசியம் இல்லாமயே வாழ்ந்து மறைந்த அற்புதமான மகான் அவர்.
அவன் மனத்தில் ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்டவள் போல் அவன் மனைவி அவனைப் பார்த்து சிரித்தாள். “கவலைப்படாதீங்கப்பா.. போயிட்டு வந்துடலாம்”.
பேசிக் கொண்டே ரமணாஸ்ரமத்தின் வெளி கேட்டை அடைந்தார்கள். அதற்குள் நன்றாக இருட்டி விட்டது. ரஜனிகாந்த் புண்ணியத்தில் வழியெங்கும் விளக்குகள் எரிவதாகத் தெரிவித்தார்கள். இருந்தாலும், ஆள் நடமாட்டம் இல்லாத பட்சத்தில், உடனே திரும்பி விடவேண்டும் என்று அவன் சகோதரர் அன்புக் கட்டளை இட்டிருந்தார்.
ஆஸ்ரமத்தை விட்டு வலது புறம் திரும்பினர். உற்றுப் பார்த்தால் மலை தெரிந்தது. ஒரு அமானுஷ்யமாக ஆனால் பயமில்லாமல் தெரிந்தது. அவன் மனைவி, மலையைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டாள். நல்லபடியாக கிரிவலம் முடித்து, ஊர் திரும்பினதும், தெருக்கோடிப் பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் விடுவதாக வேண்டிக் கொண்டாள். அவன் கவனிப்பதை உணர்ந்து, “ஒண்ணும் கிண்டல் பண்ண வேண்டாம். எனக்குன்னு சில செண்டிமென்ட்ஸ் இருக்கு” என்றாள்.
அவளது நம்பிக்கையில் அவன் தலையிட விரும்பவில்லை. கனமான விளக்குகளையும், ஹார்ன்களயும் அடித்துக் கொண்டு விரைகிற கனரக வாகனங்கள் பெருத்த இடையூறாக இருந்தன. அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள். நல்ல படியாக முடிச்சுடலாம் இல்லையாப்பா என்றாள். அவன் புன்முறுவலிட்டது அவளுக்குத் தெரிந்திருக்காது. அந்த நம்பிக்கையில்தானே வந்திருக்கிறார்கள்?
அன் இதற்கு முன் பல முறை வந்திருக்கிறான். திருமணத்திற்கு அப்புறம் கூட ஓரிரு முறை. இல்லை அதற்கும் மேலே.
முதல் தடவை மகேஷுடன் வந்திருந்தான். பத்து வருஷம் முன்பு. மகேஷோடு வருவதற்கு காரணம் உண்டு.
கணேசன் கல்லூரி முடிக்கும் தருணம் வரை நல்ல பக்திமானாகத்தான் இருந்தான்.
ஏதோவொரு விரும்பத்தகாத நிகழ்வில் பூரண நாத்திகனாக மாறி விட்டான்.
அவன் கொள்கையில் மகேஷ் தலையிட மாட்டான். ஆனாலும், சித்த புருஷர்கள், திருவண்ணாமலை போன்ற இடங்களின் மீதான மெலிதான ஆசையை கணேசனிடத்தில் விதைத்தது அவன்தான்.
மகேஷூம் பெரிய பக்திமானெல்லாம் கிடையாது. அவனுக்கு என்று தனிப்பட்ட அயோக்யத்தனங்கள் நிறைய உண்டு. ஆனாலும் பக்திக்கும் ஆன்மீகத் தேடலுக்குமான வேற்றுமையை முதலில் கண்டறிந்தது அவன் தான்.
அப்படியும்,
ஒரு முறை மகேஷை சீனி மூளைச்சலவை செய்து சபரிமலைக்கு மாலை போட வைத்து விட்டான்.
ஆனால், மகேஷ் என்ன காரணமோ கணேசனைக் கூப்பிடவில்லை.
அதற்கான காரணம் சீனி(வாசன்) வழியாக பிற்பாடு தெரிந்தது.
மகேஷின் அம்மா அவனிடம் கணேசனைக் கூட்டிக் கொண்டு போகக்கூடாது என்று கண்டித்துக் கூறிவிட்டாள்.
கெட்டவர்களை சபரிமலைக்கு அழைத்துப் போனால், அழைத்துப் போகிறவர்களை புலி தின்றுவிடும் என்று யாரோ அவன் அம்மாவை பயமுறுத்தி இருந்தார்கள்.
கணேசன் கோயிலுக்குப் போகாதவன். அதனால் கெட்டவன்.
சமூகத்திற்கு பயந்து கணேசன் தன் கொள்கைகளை லேசாகத் தளர்த்திக் கொண்டான்.
கோயில்களுக்குப் போகாமல் சாமியார்கள், மடங்கள், சமாதிகள் என்று மகேஷோடு தீவிரமாக அலைந்தான்.
இவர்கள் இருவருக்கும் பொதுவான நண்பனான நக்கீப் இவர்கள் போக்கில் தீவிர நம்பிக்கை வைத்து, ஊரில் தெரிந்தவர் தெரியாதவர் எல்லோரிடமும், “இந்த ரெண்டு பேரும் சாமியாரா போகப் போறாங்க” என்று ஒரு வதந்தியைப் பரப்பி விட்டான்.
அது கூட பரவாயில்லை..
ஒருமுறை அவன் வீட்டுக்கு போனபோது அவன் அம்மாவிடம் ” அம்மி.... ஏ’ தோனோம்..” என்று ஆரம்பித்து உருதுவில் ஏதோ சொன்னான்.
அவன் அம்மா ஆச்சரியமாக “அப்படியா..” என்று கணேசனைப் பார்த்து கேட்டாள்.
கணேசன் குழம்பி மகேஷைப் பார்க்க அவன் “எப்படியா” என்று திரும்பக் கேட்டான்.
அதற்கு அவன் அம்மா, “நீங்க ரெண்டு பேரும் காத்துலருந்து வீபூதி வரவழச்சுத் தருவீங்கன்னு நக்கீப் சொல்றானே” என்றாள்.
“அதுக்கு ரெண்டு மூணு மாசம் ஆகும்” என்றான் மகேஷ்.
நக்கீபின் அக்கா கணேசனிடம் “டேய் தம்பி… அடுத்த தபா நம்ம ஊட்டுக்கு வரச்சொல்ல நல்ல பன்னீர் வீபூதியா வரவளச்சுக் கொடுக்கணும், இன்னா” என்று கட்டளையிட்டாள்.
வீட்டுக்குத் திரும்பும் வழியில் மகேஷ் ஒன்றும் பேசவில்லை.
“என்னடா” என்றான் கணேசன். “பன்னீர் விபூதிக்கு எங்கடா போறது?”
“டேய்… குரங்கு.. இவன் நம்ம பேரை கெடுத்துண்டு இருக்கான்டா..இதுலேருந்து தப்பிக்க ஒரேயொரு வழிதான் இருக்கு” என்றான்.
அந்த ஒரே வழியை அடுத்த சில மாதங்களில் இருவருமே ஒருவர் பின் ஒருவராக செயல் படுத்தினர்.
நக்கீபுக்கு முன்னதாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டு ஊர் வாயை அடைத்தனர்.
அந்த முறை திருவண்ணாமலை வந்த போதுதான் கணேசனின் சகோதரர் கிரிவலம் போகச் சொல்லி வற்புறுத்த, போய்தான் பார்க்கலாமே என்று கிளம்பினர்.
மழைவிட்டிருந்த ஒரு காலைப் போது. மேகங்கள், மலையை ஒரு குழந்தையைப் போலத் தாலாட்டிக் கொண்டிருந்தன. அருணாசல மகிமை புத்தகத்தை முழுவதுமாக அலசி இருந்தனர்.
பொதுவாக, அவர்கள் கிரிவலம் வருவதில்லை. மலை மீதேறி, குகைகள், குறிப்பாக, விருபாட்சி குகைக்குச் செல்வது வழக்கம். ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேரத்தில் அவனும் மகேஷும், இயற்கையை ரசித்துக் கொண்டே வந்து, ரமணாஸ்ரமம் மீண்டு பகாசுரன் போல் உணவு உண்டனர்.
அவன் மனைவிக்கு இது இரண்டாம் அனுபவம். முதல் முறை, கிட்டத்தட்ட 10 பேர் வந்து, பெரும்பாலும் பேசிக் கொண்டு, களைப்புத் தெரியாமல் முடித்திருந்தனர்.
இந்த முறைதான் இவர்கள் இருவரும் தனியாக வந்திருக்கிறார்கள். அதுவும், இரவில். சந்திரன் மட்டுமில்லாமல் நட்சத்திரங்களும் இல்லாது ஒரு கருமைப் போர்வையைப் போர்த்தியது போலிருந்தது வானம்.
வெறும் காலில் நடக்கும் உபாதையை ஆர்வக் கோளாறு விரட்டி அடித்தது. அவர்களுக்குத் தெரிந்த ஸ்தோத்திரப் பாடல்கள் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தனர். விநாயகர் அகவலில் இருந்து ஆரம்பித்து, அட்சர மணமாலையை, அவன் மனைவி தடையின்றி கூற, கணேசன் கேட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.
ஒரு மைல் கூட வந்திருக்க மாட்டார்கள். எல்லா ஸ்தோத்திரங்களையும் சொல்லி முடித்து விட்டாகி விட்டது. ஸ்டாக் தீர்ந்து விட்டது.
கால்களில் கற்கள் குத்தாமல் நடக்க இயலவில்லை. எவ்வளவு டிஸ்டன்ஸ்பா என்று கேட்டதற்கு, கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் என்றான் கணேசன்.
ரெண்டு கிலோ மீட்டர் வந்திருப்போம் என்றான்.
“பரவாயில்லை, “ஆராம்சே” நடக்கலாம். ஒண்ணும் அவசரமில்லை” என்றாள் அவள்.
கொஞ்சம் கொஞ்சமாக நடமாட்டம் குறைந்து, முற்றிலுமாக நின்று போயிருந்தது. வலது புறம், இருளாக இருந்தாலும், மலை நன்றாகத் தெரிந்தது. இந்த முறை, கணேசனும் வணங்கினான். அவனுக்குள் லேசாக ஒரு கிலேசம் தலைகாட்டத் துவங்கி இருந்தது.
“டப்” பென்று ஒரு சப்தம் கேட்டு, உடனே, சட்டென்று கரெண்ட் போய் விட்டது. ஒருக்கணம் தூக்கி வாரிப் போட்டது. என்னடா இது அபசகுனமாக இருக்கிறதே என்று தோன்றியதைப் புறக்கணித்து மேலும் நடக்கவாரம்பித்தனர்.
இருட்டு என்றால், “மை” இருட்டு. அவ்வளவு இருட்டை கணேசன் வாழ் நாளில் கண்டது இல்லை. அக்கம் பக்கம் தெரியவில்லை. ஏன், கூடவே வருகிற மனைவியைக் கூடத் தெரியவில்லை. அவ்வளவு கொடூரமான இருட்டு. “வந்துவிடும் வந்துவிடும்” என்று நம்பிக்கையில்லாமல் கூறிக்கொண்டே நடந்தனர்.
அவள் இவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள். என்னதான் அதீத கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாலும், இரண்டு கண்களும் இருண்டு போனது போல இருந்த அந்த இருட்டு, அவளை நிலைகுலையச் செய்து விட்டது.
ஏதோ ஒரு அசட்டுத் தைரியத்தில் மேலும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர். இரண்டு முறை தடுக்கி விழ இருந்தனர். நல்ல பாதையாகப் போட்டிருக்கலாம்.
அருகாமையில், எதிர்த்தாற்போல், ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. யாரோ இரண்டு ஆண்கள். சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார்கள் போலும், இருளில், ஆள் தெரியாமல், கணேசன் மேல் மோதி விட்டார்கள்.
“யாரது” என்று ஒரு கனமான குரல் வந்து விழுந்தது.
இவன் மனைவி, உடனே சுதாரித்து, தாங்கள் கிரிவலம் செல்வதைத் தெரிவித்தாள்.
அவ்விருவரில், ஒருவர் கடுங்கோபம் கொண்டு கணேசனைப் பார்த்து கத்த ஆரம்பித்தார்.
” ஏன்யா? இது ஒம் பொண்டாட்டி தானா இல்ல வேற ஏதாவதா? கும்மிருட்டுல கூட்டிக்கினு போற” என்றார்.
“இல்லை, நாங்கள் கிளம்பும் போது கரண்ட் இருந்தது. திடும்னு போயிடுச்சு. வந்திரும்ல”
“இன்னா வரும்? ஏதாவது சொல்டப் போறேன். டபால்னு சவுண்ட் கேட்டுச்சு இல்லை? ட்ரான்ஸ்பார்மர் பூடுச்சு. இன்னுமே வேலூருக்குத் தகவல் சொல்லி, அங்கருந்து வந்தாத்தான். அதுக்கெல்லாம் நேரமாவும்.. காலைல தான் நடக்கும்.
பத்தடிக்கு பத்தடி லைட்டு போட்டுட்டு, கபாசிட்டி ஏத்தலின்னா இப்டித்தான் ஆவும். இது நாலாவது தடவை இந்த மாசத்துலயே.”
“நீங்க EB காரங்களா”
“பின்ன இன்னா? விசயம் தெரியாமயாப் பேசிக்கினு கீறாங்கோ. அறியாப் புள்ளீங்காளாக் கீறீங்கோ. ஒயுங்கு மரியாதியா ஹோட்டல் போயி சேருங்கோ”
“இல்லை. நாங்கள் ஹோட்டல்ல தங்கலை…சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆஸ்ரமத்தில தான் தங்கியிருக்கோம்” என்றாள் இவள் அவசியம் இல்லாமல்.
அவள் மிகவும் பயந்திருந்தாள் என்பது அவள் குரலின் நடுக்கத்தில் இருந்து தெரிந்தது.
“அப்ப இன்னா? பக்கந்தான். மொதக் காரியமா திரும்பிப் போங்க. கொஞ்ச காலமா ஒண்ணும் சரியா இல்லை இந்த ஊர்ல” என்றபடி அவர்கள் கடந்து சென்றனர்.
இவர்கள் ஒரு நிமிடம் நின்றனர். என்ன செய்வது என்று தெரியவில்லை. திரும்ப மனதில்லை. தொடர்ந்து நடக்க மனதில் தெம்பு இல்லை. இருந்தாலும், நடையைத் தொடர்ந்தனர். மனதில் முன்பு இருந்த உற்சாகம் இல்லை. ஏதாவது விபரீதம் நடந்து விட்டால்? கடவுள் இருக்கிறார்தான். அண்ணாமலையார், ரமணர் எல்லாம் சக்தி உள்ளவர்கள் தான். இருந்தாலும்?
நடை தானாகவே தளர்ந்தது. ஓரு இடத்தில், அவள் தடுக்கி விழுந்தே விட்டாள். நல்ல வேளை, அவன் உத்தேசமாகப் பிடித்துக் கொண்டான். காலுக்கடியில் இருப்பதே தெரியமாட்டேன் என்கிறதே, எதிரில் என்ன காத்திருக்குமோ, யாருக்குத் தெரியும்?”
அவன் மனைவி லேசாக விசும்ப ஆரம்பித்தாள். இவன் எப்பவும், பக்திமான்களைக் கிண்டல் பண்ணுவதால்தான் கடவுள் தண்டித்து விட்டார் என்றாள். உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது கணேசனுக்கு.
மிகுந்த மனவருத்தத்தில் ஆஸ்ரமத்திற்குத் திரும்ப நடக்க ஆரம்பித்தனர்.
ஓரிரு நிமிடங்கள் தட்டித் தடுமாறி ஆஸ்ரமம் திக்கில் நடந்து இருப்பார்கள்.
மறுபடியும், எதிர் திக்கில் கொஞ்சம் பேச்சுக்குரல் கேட்டது. அதிகார தொனியில் ஒரு ஆண் குரல். கூடவே ஒரு பெண் குரல். இவர்கள் கள் இருவரும் சட்டென்று நின்றனர். குரல்கள் நெருங்கின.
மிகவும் ஒல்லியான ஒரு மனிதர். கூடவே, ஒரு நடுத்தர வயதில் ஒரு மாது. அவரது மனைவியாக இருக்க வேண்டும். அவ்விருவரும், சண்டையிட்டுக் கொண்டு வருகிறார்கள். கூடவே ஒரு யுவதி. அவர்கள் மகளாக இருக்க வேண்டும்.
அவர்களும் இவர்களைப் பார்த்து நின்றார்கள்.
அந்த மனிதர், கணேசனிடம், “இந்தப் பக்கமாப் போகலாம் இல்லையா? ஒண்ணும் பயமில்லையே” என்று வினவினார். அவர் இவர்களை உள்ளூர்க்காரர்கள் என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.
அவனுக்கு அந்த மன இறுக்கத்திலும் சிரிப்பு வந்தது.
“என்ன, சார்வாள் சிரிக்கறாப் போல இருக்கு?”
“ஆமா, என்னத்தைச் சொல்றது? நாங்களே, இருந்து இருந்து கிரிவலம் போலாம்னு ஒரு வருஷம் கழிச்சு வந்தா, கரண்டு போயி கழுத்தறுத்துடுச்சு. வேற வழியில்லாமத் திரும்பிப் போறோம்.”
உடனே, அவரது மனைவி, அவரைக் கடிந்து கொண்டாள். “பாத்தேளா. சிறு வயசுக்காராளே பயந்து போயி திரும்பிப் போயிண்டு இருக்கா. பிடிவாதமா இழுத்துண்டு வரேளே”
“பைத்யம், பைத்யம். பகவான் நமக்குத் துணையை அனுப்பி இருக்காண்டி” என்றவாறே, அவனிடம், என்ன சார், இதுக்கெல்லாம் பயந்திண்டு? கரண்டு விளக்கெல்லாம் இப்ப 30 வருஷமாத்தான சார் இருக்கு. அதுக்கு முன்னாடி கரண்டு வெளிச்சத்திலேயா ரமணர்லாம் நடந்துருப்பார்? இருட்டுக்குப் பயந்தா எப்படி? பத்தடி நடந்தா கண்ணு பழகிட்டுப் போறது.”
பயம் இருட்டில் இல்லை என்பதை அவரிடம் கூற, என்ன காரணத்தினாலேயோ தயக்கமாக இருந்தது.
“என்ன யோசிக்கறீங்க? ஒண்ணுக்கு அஞ்சு பேரு இருக்கோம். முண்டனுக்கு ரெண்டு பேரு போறும்னு கேட்டதில்லையா” என்றவாறே வலுக்கட்டாயமாக அவர்களைத் திருப்பி கிரிவலப் பாதையில் இழுத்துக் கொண்டு போனார்.
அவர் அவன் மனைவியைத் தோராயமாக நோக்கி, “ஒரு விஷயத்தை ஆரம்பிச்சோம்னா முடிக்காம பாதியில நிறுத்தக் கூடாது. நல்ல காரியமாத்தானே கிளம்பி இருக்கோம்? அப்பறம் என்ன கவலை. நம்பளைக் காப்பாத்தறதத் தவிர அவனுக்கு வேற என்ன வேலை” என்று மலையை நோக்கிக் கையைக் காட்டினார்.
என்ன ஒரு குரல்? என்ன ஒரு கம்பீரம்? உருவத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத குரல்.
அந்தக் குரலின் கம்பீரத்தில் இருவரும் கட்டுப் பட்டனர். எதிரே ஆபத்துக்கள் இருக்குமா இருக்காதா என்று தெரியாது. ஆனால், சமாளிக்கிற தைரியம் வந்து விட்டது.
கணேசனுடைய ஆர்வம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
நமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி, சதா சர்வ காலமும் நம்மையே நினைத்துக் கொண்டிருக்கிறது என்றால் அதைவிடவும் வேறு சகாயம் எதற்கு?
மிகவும் சுவாரஸ்யமான மனிதர் அவர். ஒரு பெரிய அரசு நிர்வாகத்தில், Director அளவில் சென்று போனவருடம்தான் ஓய்வு பெற்றிருக்கிறார். மனைவிக்கு, முட்டிவலி நான்கு வருடங்களாக. நிறைய வைத்தியம் பார்த்தாகி விட்டது. அவருக்கு, இரண்டு பெண்கள். இரண்டாவது பெண்தான் இப்போது கிரிவலம் வருகிறது. வேலூரில் ஒரு பொறியியல் கல்லூரியில் கடைசி வருடம் கடைசிப் பரிட்சை இன்றுதான் முடிந்திருக்கிறது. ரொம்ப நாள் ஆசை, கிரிவலம் செல்ல வேண்டும் என்று. உத்யோகத்தில் இருந்த காலத்தில், மனிதர் கடும் உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். அந்த சுறுசுறுப்பு இன்னும் மங்கிப் போகாமல் தொடர்வது பெரும் விந்தை.
மதியத்தில் பரீட்சை முடிந்தவுடன், பஸ் ஏறி திருவண்ணாமலை வந்து, பஸ் ஸ்டாண்டில், உடமைகளுக்கான பாதுகாப்பு அறையில் உடமைகளை வைத்து விட்டு, அங்கிருந்தே கிரிவலம் தொடங்கி இருக்கிறார்கள். வீடு, மடிப்பாக்கத்தில்.
வழி நெடுக, தன்னுடைய சிலிர்ப்பூட்டும் அனுபவங்களைக் கூறிக்கொண்டு வந்தார். நேர்மையான அதிகாரிகளுக்கு சாதாரணமாக நேரிடக்கூறிய தொல்லைகளையும், அவைகளில் தான் எடுத்த துணிகரமான முடிவுகளையும் பெருமையாகத் தெரிவித்தார். நேர்மையாக இருப்பது, ஒருவரின் பட்டம் அல்லது தகுதி அல்ல என்பதும், அது அவரவர் கடமை என்பதையும், அவர் கூறும் போது அழகாக இருந்தது.
நிறையப் படித்திருக்கிறார் மனிதர். கேள்விப்படாத ஏதோ ஒரு துறையில் டாக்டரேட் வாங்கியிருக்கிறார். அதுவும், ஓய்வுக்கு மூன்று மாதங்கள் முன்னால். இவன், இன்னம் முன்னேறாமலே இருக்கிறான் என்பதையும், மேல் படிப்பில் முனைப்பு இல்லாமல் கோவில் மாடு போலத் திரிந்து கொண்டு இருப்பதையும், அவன் மனைவி அவரிடம் ஒரு குறையாகக் கூறிவிட, மனிதர் அடுத்த ஒரு மணி நேரம், படிப்பின் அவசியத்தை, பல்வேறு மேற்கோள்களைக் காட்டி விளக்கினார். இவனுக்கு அதெல்லாம் புரியாவிட்டாலும், அவன் மனைவிக்குப் புரிந்ததாகத் தான் பட்டது.
வயது காரணமாகவும், அவரது மனைவியின் கால் வலி கருதியும், வழியில், நீரற்றுக் கிடந்த ஒரு ஓடையின் மதகில் சற்றே அமர்வது என்று தீர்மானித்தனர். இவர்கள் கூடியவரை, கிரிவலத்தில் அமர்வது இல்லை என்று வைத்துக் கொண்டிருந்ததால் அமரவில்லை. அம்மூவரும், கையில் கொணர்ந்த வாழைப்பழங்களை, இவர்களுக்கும் அளித்துத் தானும் உண்டு, தண்ணீர் புட்டியில் மீதமிருந்த சில திவலைத் தண்ணீரை விழுங்கினர். கொஞ்சம் அஜாக்ரதையாக அப் புட்டியினை மூட முனையும் போது, புட்டி வழுக்கி வறண்ட அவ்வோடையில் விழுந்து விட்டது.
உடனே, அதனை எடுக்க கணேசன் விரைந்தான். அவர், அவனை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து, தான் தான் எடுப்பேன் என்று ஒரு குழந்தையைப் போல் அடம் பிடித்து, ஓடைக்குள் குதித்தார். புட்டியை எடுத்தவரால் மேலே வர இயலவில்லை. பள்ளம் சற்றே பெரிதாக இருந்தது. கணேசனும், அவரது மகளும், கைலாகு கொடுத்துத் தூக்க வேண்டியதாகி விட்டது.
மேலே வந்தவரால் காலை நன்றாக ஊன்ற முடியவில்லை. கால் நிறைய நெருஞ்சி முட்கள். ஒவ்வொன்றாகப் பிடுங்கி எறிய கால் மணி நேரம் ஆகிவிட்டது. உள்ளங்கால் முழுக்க ரத்தம். எல்லோருக்கும் மிகவும் வருத்தமாகி விட்டது.
ஆனால், அவர் வருத்தப் படவில்லை. கால்களை நாலைந்து முறை தரையில் அழுத்தித் தேய்த்தார். போர்க்களத்தில் எதிரிகளை சம்ஹாரம் செய்ய, காயங்களுடன் காத்திருக்கும் வயதான விஜயாலயச் சோழனைப் போல இருந்தது அவரது தோற்றமும் நோக்கமும்.
அவன் தோள்களில் பலமாகப் பிடித்து, come on, போகலாம் வாங்கோ என்றார்.
‘கொஞ்சம் ரெஸ்ட் வேணா எடுத்துட்டுக் கெளம்பலாமே”
“நோ நோ.. நான் என்னைப் பத்தித் தற்பெருமையாப் பேசிண்டு வந்தேன் இல்லையா, அது தான் தண்டனை கெடச்சுருக்கு. அவன் முன்னாலே போய் பெருமை பீத்திக்க முடியுமா” என்று மலையைக் காண்பித்தார்.
கணேசனுக்கு மெய் சிலிர்த்தது. மனைவியிடம் ரகசியமாக, “இதுதான் ஞானம் என்கிறது. ஈகோவை ஒழிக்கிறது லேசுப்பட்ட காரியம் இல்லை. தன்னிடம் ஈகோவை உணர்ந்து கொள்வது முதல் படி. அதனை அறிக்கையிட்டு, வெளியில் ஒப்புக் கொள்பவனே ஞானி” என்றான்.
அவன் ஒரு வேகத்தில் பேசியது, அவனுக்கே கொஞ்சம் புரியாவிட்டாலும், அவன் மனைவி ஏதோ புரிந்தது போலத் தலையை ஆட்டினாள். அவளும் ஒரு ப்ரமிப்பில் இருந்ததாகப் பட்டது.
உடலில் உபாதைகள் தோன்ற ஆரம்பித்து விட்டன. முன்னம் இருந்த உற்சாகம் இப்போது இல்லை. அதற்குக் காரணம் இருந்தது. உள்ளங்கால்களில், தோல் முற்றிலுமாக உரிந்து விட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக இப்போது விந்த ஆரம்பித்து விட்டனர். அதுவும், வேலூர் சாலையில் கற்கள் மிகுந்து, மிதமிஞ்சிய போக்குவரத்தின் காரணமாக சாலை ஓரங்களில் சரளைக் கற்கள் சிதறி, பெருத்த வேதனையாக மாறி விட்டது. கணேசர்கள் இதற்குத் தயாராகவே வந்ததால், சமாளித்துக் கொண்டிருந்தாலும், அந்த மனிதரது மனைவியாலும், மகளாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
அதுவும், அவரது மனைவியால் ரொம்பவும் முடியாமல் போய் விட்டது.
நேரம் வேறு இரவு பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அவர் இவர்களைப் பார்த்து, “நீங்க கெளம்புங்கோ. நாங்க அப்படியே பஸ் பிடித்து பஸ் ஸ்டாண்ட் போயிடறோம். இவளுக்கு ரொம்ப முடியலை இல்லயா. பரவாயில்லை. அதான் தொண்ணூறு சதவீதம் முடிச்சாச்சே. கடவுள் மன்னிச்சுடுவார்” என்று இடி இடியென்று சிரித்தார்.
அவர்கள் இருவருக்கும் மிகவும் கஷ்டமாகப் போய் விட்டது. இருந்தாலும், வேறு வழியிருக்கவில்லை. அவர் கணேசன் கையை வலுவாகக் குலுக்கி விட்டு, எதிர்த்தாற்போல் இருந்த ஒரு ரிக்ஷாக் காரனை மடக்கி இருந்தார். அவர்கள் மூவரும் அதில் ஏறிக் கொண்டனர். பிரியா விடை பெற்று நகர்ந்தனர்.
அவள் மறுபடியும் கண் கலங்குகிறாள் என்பது தெரிந்தது. இந்த முறை கணேசன் அவளைக் கிண்டல் செய்யவில்லை. அவனுக்குமே, என்னவோ போல்தான் இருந்தது.
கொஞ்ச நேரம் அங்கு நின்று அவர்கள் அகன்ற திசையை பார்த்து விட்டு, தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். போகிற வழியில் ஏதேனும் டிபன் கிடைத்தால் தேவலை என்று தோன்றியது.
ஒரே ஒரு ஓட்டல் திறந்து இருந்தது. தோசை மட்டும் இருக்கிறது என்றான். ஆளுக்கு ஒன்று என்று பார்சல் வாங்கிக் கொண்டு, வெளியில் வந்தனர். டக்கென்று கரண்ட் வந்து விட்டது.
“பாருங்கப்பா? என்ன ஆச்சரியம்? மெய் சிலிர்க்கறதுப்பா”
கணேசனுக்கும் தான்.
தங்களுக்கு வழித்துணையாக வந்த அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?
“ஏன்பா, அவர் பேர், அட்ரெஸ் கேட்டு வச்சிண்டீங்களா? என்று கேட்டாள்.
“நீ கேட்டியா?”
“அட்ரெஸ் கேக்கலை. மாமியோட பேரு பத்மா. பொண்ணு பேரு, ரேவதி. நட்சத்திரம் பேரையே பொண்ணுக்கு வச்சிருக்காங்க” என்றாள்.
“நான் அவர் பேரையும் கேட்கவில்லை. நட்சத்திரத்தையும் கேட்கவில்லை” என்று சொன்னான்.
“என்னப்பா நீங்க?”
“ப்ஸ். என்னமோ தோணலை. வழி நெடுக அவரே பேசிட்டு வந்தாரா. அவ்வளவு பெரிய மனுஷர். எப்படிக் கேக்கறதுன்னு கேக்கலை. கேக்காட்டாத்தான் என்ன, அவர், பகவானோட ஒரு representative. அவ்வளவுதான்”
“இருந்தாலும் பேரைக் கேட்டுக்காதது தப்புதான்”
கணேசன் ஒன்றும் சொல்லவில்லை. சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மெதுவாக விந்தி விந்தி ரமணாஸ்ரமம் செல்லும் பாதையில் நடந்தனர் இருவரும்.
பத்து நிமிஷம் ஆகியிருக்கும். கிட்டத்தட்ட அண்ணாமலையார் கோயிலை நெருங்கி இருந்தனர்.
வேகமாக அவர்களைத் தாண்டிச் சென்ற ஒரு ஆட்டோ, கிறீச்சிட்டு நின்றது. அதிலிருந்து, அந்த மனிதர் இறங்கினார்.
“ஹலோ கணேசன்… What a surprise?. நாங்க ஒங்களை மறுபடியும் சந்திப்போம் என்று நினைக்கவே இல்லை”
“நாங்களும் தான் சார்” என்றான் தழுதழுத்த குரலில்.
அவர் கணேசனை அணைத்துக் கொண்டார்.
“மனசு கேக்கலை. இவ்வளவு தூரம் வந்து, கிரிவலம் complete பண்ணலியேன்னு. அதான், ரிக்ஷால கோயில் வரையும் வந்துட்டு, வெளீலக் கர்ப்பூரம் கொளுத்திட்டு, திரும்ப ஆட்டோ வெச்சிண்டு பஸ் ஸ்டாண்டு போயிண்டு இருக்கோம். ஒங்களை மறுபடியும் பார்த்ததிலே ரொம்ப ரொம்ப சந்தோஷம். அதுவும் ஒங்களைப் பத்தியே பேசிண்டு இருந்தமா, திடும்னு ஒங்களைப் பார்த்ததும், மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு”
இந்த முறையும், அவரேதான் அவனுடைய வசனங்களையும் முந்தித் கொண்டு பேசினார்.
கணேசன் வாயடைத்து இருந்தான். அவனுக்குத் தழுதழுப்பில் தொண்டையில் சப்தம் எழவில்லை.
அவர் ஆட்டோவில் ஏறிக் கொண்டு, கையை அசைத்து விடை பெற்றார். ஆட்டோ உயிர் பெற்றது.
கணேசனை உலுக்கினாள் அவன் மனைவி.
இப்பவாவது பேரைக் கேளுங்கப்பா.
கணேசன் சுய உணர்வு பெற்று, ஆட்டோவோடே நகர்ந்து சென்று, “ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார். பாருங்களேன் ஒங்க பேரையேத் தெரிஞ்சுக்கலை சார்’ என்றான்.
அவர், அதே உற்சாகத்துடன், இடி இடியெனச் சிரித்துக் கொண்டே, “It’s ok; It’s ok” என்றவாறே ஆதுரத்துடன் கணேசனின் தோள்களைப் பற்றிக் கொள்ள முயன்றார். ஆனால், அதற்குள் ஆட்டோ கிளம்பி விட்டது. தனது, வலது கையை உயர்த்தி, அவர்கள் இருவரையும் ஆசீர்வதிப்பது போல் அல்லது விடைபெறுவது போல் சைகை செய்து, ” My name is குருகடாட்சம் யா. Dr.குருகடாட்சம்” என்றவாறே அகன்றார்.
🌺🌺🌺🌺🌺🌺🌺

ஆதங்கம் வெளிப்பட்டு இருக்கிறது. உண்மையான ஆதங்கம் திருவண்ணாமலை குறித்தும். ஆன்மீகம் குறித்தும் புரிதல் குறித்தும். நல்ல கிண்டல். வாய் விட்டு சிரிப்பதை தவிர்க்க இயலவில்லை.
அது எப்படி கணேஷால மட்டும் நம்மையும் உடன் பயணிக்க வைக்க முடிகிறது
கணேசனோட திருவண்ணாமலை கிரிவலம் ராத்திரி மெய்யிருட்டுல நடந்து வந்து மானசீகமாக ஸ்வாமி தரிசனம் பண்ணியாச்சு…
Keep it up Ganesaraman…
Congratulations.