எஸ். சண்முகம் கவிதை

வழிநெடுக பேசாமலே அருகில் அமர்ந்திருந்தார்
எனக்கு முன் அந்த ஷேர் ஆட்டோவின்
இருக்கையில் நடுவில் இருந்தவர்
வலதுபக்கமாக நகர்ந்து சென்றார்

ஒருவேளை நமக்கு பின்னர்தான் இறங்குவார் என்றிருந்தேன்
ஆனால் அடுத்த நிறுத்தம் வருமுன்னே
என்னை நோக்கி நகரத் துவங்கிவிட்டார்
கால்களை இடதுபக்கமாக வளைத்து
வழிஅனுப்பும் பாவத்தில் விலகினேன்

இறங்கிய வேகத்தில்
ஒரு நினைவு வளைவிற்குள் பெருகியோடும் கருமைக்குள இழையோடி நழுவினார்
ஓட்டுனர் திரும்பி என்னிடம்
அவர் கட்டணத்தைத் தராமல் ஓடுகிறார்
கூப்பிடுங்கள் என்றார்

பெயர் அறியாமையின் ஒலியாக
சார் ஹலோ சார் ஹலோ
எதிரிலிருந்த நடமாற்ற இருளின் அடர்த்தியுள்
கரைவதற்குள்
ஆட்டோவை கிளப்பிவிட்டு தலையில் அடித்தபடி
சாலையில் நின்றிருந்த மற்றொருவரை
பெயரைக் கேட்காமல் ஏற்றிக் கொண்டார்

இப்போது புதிய பயணிக்கு
வலதுபக்கம இருகால்களையும் மடக்கி
உள்ளே செல்ல வழிவிட்டேன்
அவர் அமர்ந்தார்
சாலையின் எதிர்பக்கம்
தேங்கி நிற்கும் கணரக வாகனங்களின் வரிசையான அசாதாரணத்தைக் கடந்ததும்

கொஞ்சம் நிறுத்துங்க இறங்குமிடம் இதுதான்
என்றதும் நெடுஞ்சாலையின் இடதுபக்கம்
வேகம் உறையும்படி நிறுத்தினார்
இந்தாங்க பத்து ருபாய் என கொடுத்துவிட்டு
என் பெயர் எஸ். சண்முகம் என்று சொல்லியபடியே
கட்டணம் செலுத்தாதவர் பெயர் என்னவாக இருக்கலாமென யோசித்தபடி நடையிட்டேன்.

One Comment on “எஸ். சண்முகம் கவிதை”

Comments are closed.